என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அலனா கிங் சுழலில் சிக்கிய தென்ஆப்பிரிக்கா: 98 இலக்கை எளிதில் எட்டியது ஆஸ்திரேலியா
- 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது தென்ஆப்பிரிக்கா.
- ஆஸ்திரேலியா 199 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் வால்வார்த் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அலனா கிங் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா பேட்டர்கள் திணறினர்.
அவர் ஏழு ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்க்க, தென்ஆப்பிரிக்கா 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 97 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டனை தவிர்த்து விக்கெட் கீப்பர் ஜாஃப்டா 29 ரன்களும், நடின் டி கிளெர்க் 14 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணி 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து, 199 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து மூலம் 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் காலிறுதியில் வருகிற 30ஆம் தேதி மோத வாய்ப்புள்ளது.






