என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.
- சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 600 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் மோன்தா புயல் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 600 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
- கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா-சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
- 5 ஆண்டுக்குப் பின் இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.
கொல்கத்தா:
கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.
இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை நேற்று தொடங்கியது.
ஷாங்காய்-டெல்லி இடையேயான விமான சேவை நவம்பர் 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. தற்போது பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த மினி குவாலிபையர் சுற்று போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு டைட்டன்ஸ் அணி சிறப்பாக ஆடியது.
இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிக் கணக்கில் வென்று எலிமினேட்டர் 3 சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.
- பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டு நடிகர் சல்மான் கான் பேசினார்.
- இதனால் பயங்கரவாதிகள் பட்டியலில் அவரை பாகிஸ்தான் சேர்த்ததாக கூறப்படுகிறது.
லாகூர்:
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசியதாவது:
நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.
தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள் என பேசியிருந்தார்.
சல்மான்கானின் இந்தப் பேச்சால் கோபமடைந்த பாகிஸ்தான், அவரை பயங்கரவாதிகள் பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் நிறுவனங்கள் தயாரித்த இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தை தொடர்ந்து, நடிகர் மாதவன் தற்போது மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.
இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கிறார்.
இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் ஜி.டி.நாயுடு (GDN) படத்தை இயக்குகிறார், ராக்கெட் படத்தை தயாரிக்கும் அதே நிறுவனங்கள் இப்படத்தையும் தயாரிக்கின்றன.
ஜி.டி. நாயுடு பிறந்த இடமான கோயமத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி.டி.நாயுடு படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- அரையிறுதியில் இந்தியா 17-0 என சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
- இறுதிப் போட்டியில் கஜகஸ்தானிடம் 27-0 என தோல்வியடைந்தது.
13 நாடுகள் பங்கேற்ற ஆசிய ரக்ஃபி எமிரேட்ஸ் ஆண்கள் செவன்ஸ் டிராபி 2025 தொடர் ஓமனில் நேற்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 17-0 என சவுதி அரேபியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் கஜஸ்தானை எதிர்கொண்டது. இதில் கஜகஸ்தான் 27-0 இந்தியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் ஆப்கானிஸ்தான் 17-12 என சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
- இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிலையில், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு பொது மக்கள் சூழ பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
குதிரை சாரட்டில் அவரை அமர வைத்து மாலை அணிவித்து மகுடம் சூட்டி, மேலத்தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதல்.
- 101 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றச்சாட்டு.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து இன்று 2ஆவது நாளாக இரவு நேரத்தில் ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழ்ந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடம் ரஷியாவின் டிரோன்கள் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. 9 மற்றும் 16 மாடி குடியிருப்புகளில் இருந்து மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றினர். 74 வயது மூதாட்டியால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மேலும் 19 வயது இளம் பெண் மற்றும் அவருடைய 46 வயது தாய் ஆகியோரும் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 101 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியு்ளது. இதில் 90 டிரோன்களை தடுத்து நிறுத்தியும், தாக்கியும் அழித்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்து்ளளது. ஐந்து டிரோன்கள் நான்கு இடங்களை தாக்கியது எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி 4 பேர் கொலை செய்த நிலையில், இந்த தாக்குதலை ரஷியா நடத்தியுளள்து.
- பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
என்றாலும், நடைமுறைப்படுத்தி அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு தழுவிய SIR குறித்து அறிவிக்க, நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் 10 முதல் 15 மாநிலங்களில் முதற்கட்டமாக SIR பணியை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார்.
- ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துகிறார்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம். ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார்.
- விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார்.
- யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சமீபத்தில் படங்களில் நடிக்காதது பற்றி நடிகை ரோஜா தெரிவித்துள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா அளித்த பேட்டியில், "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.
அந்தப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், 'மேடம்.. நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா?. படக்குழுவில் சொன்னபோது, அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம்' என்று கூறினார்.
விஜய் மட்டுமல்ல தெலுங்கில் நடிகர் கோபிசந்துக்கு மாமியாராக நடித்தபோது, அவரும் இதே விஷயத்தைக் கூறினார். அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கினேன். 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததுபோல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், மீண்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.
- தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும்.
- தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும்.
சென்னை:
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயருமா? அல்லது ஏற்ற-இறக்க நிகழ்வு தொடருமா?, விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தின் மீது முதலீடு மேற்கொள்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடும்.
இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு இடைவேளைதான் இந்த விலை குறைவு. இது பின்னர் மீண்டும் வேகம் எடுக்கும்.
தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) 4,100 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும்.
ஆகவே தங்கம் விலை நிச்சயம் உயரும். அதே சமயம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறைய வாய்ப்பே கிடையாது.
பொருளாதார சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளின் சில முன்னேற்பாடுகள், அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் நவம்பர் மாதம் குறைந்தால், முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்தும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
அப்படி பார்க்கையில் தங்கத்தின் தேவை வருங்காலங்களில் அதிகரிக்கும். தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும். குறுகியகால முதலீட்டுக்கு தங்கம் ஏற்றது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






