என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது.
    • 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.

    ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது.

    மேலும் இப்படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறலாம் என்று ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தாவல் வெளியாகியுள்ளது. இப்படத்தியும் கமல்ஹாசனே தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    • திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

    இதற்கிடையே, அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என கூறப்பட்டது.

    இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் கண்ட ரசிர்கள் தல, தல என்று கூச்சலிட்டனர். அப்போது கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.

    மேலும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.
    • மழை தொடர்பாக வரும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றி அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

    சென்னை:

    'மோன்தா' புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், மழை தொடர்பாக வரும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றி அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார். 

    • மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் பணியாற்றி வந்தார்.
    • வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கனடாவில் ஓக்வில்லில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துக்களால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    வீடியோவில் ஒரு இளைஞர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, "உடனடியாக உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.. அருவருப்பான இந்தியரே" என்று கூறுவது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்துசென்றபோது 2 இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
    • உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.

    டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.

    மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
    • கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.

    போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் கிழவி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனாவின் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் இன்று ஆஜரானார்.  நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தர் கவுர் சார்பாக அவரது கணவர் வனத்திருந்தார். விசாரணையின்போது தனது கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்கு ஒதுக்கிவைக்கப்ட்டது. 

    மேலும் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும், நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

    கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார். 5 வருடங்கள் முன் கழிந்து கங்கனா தனது  கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • 6 போட்டிகளில் 308 ரன்கள் விளாசியுள்ளார்.
    • நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

    பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.

    பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.

    • தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல்தான்.
    • இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அதிமுக முழு மனதுடன் வரறே்கிறது என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது தான். அப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல்தான்.

    ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் சரியானதா என்று சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் 2026-ல் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் முழுமையானதாகவும், சரியானவையாகவும் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

    எனவே, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்ளை நீக்குவதும், புதிதாக தகுதி உள்ளவர்களை சேர்ப்பதும் அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் என்ற முறைகளை பின்பற்றி சரியான வாக்காளர் பட்டியலை உறுதிபடுத்துவது இயல்பான ஒரு நடைமுறை.

    எனவேதான், வாக்களர் பட்டியல் சரிபார்ப்பு சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் கூட்டங்களில், தமிழ் நாட்டில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீத சரிபார்ப்பு இல்லாமல் முழுமையானதாக இல்லை என்பதால், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்யுங்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்துள்ளோம்.

    குறிப்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், எங்கள் கழகப்

    பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஒப்புதலோடு இந்தியத் தேர்தல் ஆணையத்தின், மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்கள்; மாநில அளவில் சென்னையில் நடைபெறும் கூட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களிலும், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகளை நாங்கள் உரிய ஆதாரங்களுடன் எடுத்து வைத்து, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை கோரி வருகிறோம்.

    உதாரணமாக, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்தத் தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

    அதேபோல், சுமார் 8 ஆயிரம் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதற்கான ஆதாரங்களை கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகாராகக் கொண்டு சென்றும், அதைப்பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இடைத் தேர்தல் முடியும்வரை அப்பெயர்கள் நீக்கப்படவில்லை.

    அதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    2024-ஆம் ஆண்டு, சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், இரட்டை வாக்குகள், முகவரி மாற்றம் மற்றும் இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும்; இப்படி சுமார் 44 ஆயிரம் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் இன்றுவரை

    சுமார் 31 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பெயர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, கழகத்தின் சார்பில் சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று பல்லாயிரக்கணக்கான பெயர்கள் வாக்களர் பட்டியலில் முறைகேடாக இடம் பெற்றுள்ளது என்று நாங்கள் தெரிவித்தோம். தொடர்ந்து, தியாகராயநகர், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் உள்பட பல தொகுதிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு, மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பினை நடத்தி வருகிறது.

    எங்களது கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்று ஆளும் விடியா திமுக ஸ்டாலினின் ஃபெயிலியர் மாடல் அரசின் தோல்விகளை தழிழகம் முழுவதும் எடுத்துக்கூறும் புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின் போது, பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாத இரட்டை வாக்குகள், இறந்தவர் வாக்குகள், முகவரி மாற்றம் உள்ளிட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி, வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் ஆய்வு செய்து திருத்திய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறார்.

    வாக்காளர் சரிபார்ப்பு கோரிக்கையை சென்னை மட்டுமல்லாது, டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் உரிய ஆதாரங்களுடன் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    எனவே, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ளு.ஐ.சு எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாகவும், வெளிப்படையாகவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இந்தப் பணிகளையெல்லாம் மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், தேர்தல் ஆணையம் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை, உண்மையான வாக்காளர்களுக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி கொண்டுள்ளது.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக எந்தவித நலத் திட்டங்களையும் செயல்படுத்தாமல், எங்களது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைப்பது; இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குவது; வாங்கும் கடனையெல்லாம் வருவாய் செலவினங்களுக்கே செலவிட்டுவிட்டு, விளம்பர ஆட்சி நடத்தி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சியில், மக்கள் படும் துன்பங்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; அத்தேர்தலில் திமுக தோல்வியுறுவது உறுதி, என்று தெரிந்தவுடன் இப்போதே அதற்கான காரணங்களைத் தேடும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள்,

    இனியாவது தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, மீதமுள்ள ஒருசில மாதங்களுக்காவது தமிழக மக்களுக்கு நல்லதைச் செய்ய வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது.
    • மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது. மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அது விசாரணையை சந்திக்க வேண்டும்.

    பாஜக தன்னிறைவு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பாஜக இன்னும் தன்னிறைவு பெறவில்லை. ஏனென்றால், அது கட்சிகளை பிரித்து வாக்குகளை திருடிக் கொண்டிருக்கிறது. பாஜக தன்னைத்தானே தேசபக்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் போலிக் கும்பல். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்யும்வரை, மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டியூட் படம், வசூலை குவித்து வருகிறது.

    திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

    மூன்று படங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    • பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    • துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் 2-வது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இந்த மாத தொடக்கம் முதலே மோதல் நீடித்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் இரு தரப்பினருமே நூற்றுக்கணக்கில் எதிா் தரப்பினரைக் கொன்றுவிட்டதாக அறிவித்தனா். பின்னா், கத்தாா், துருக்கி தலையிட்டதன் மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் அவ்வப்போது தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தொடா்ந்து வருகின்றன.

    இந்நிலையில், துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் 2-வது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது பதற்றத்தைக் குறைப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பேச்சு நடத்தப்பட்டது.

    இதற்கிடையே இரு தரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த மோதல்களில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதனை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடக்க முயன்ற 25 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால், இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
    • பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.

    இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன்,

    நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் /அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம்.

    எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×