என் மலர்
வணிகம் & தங்கம் விலை

தங்கம் விலை ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறையுமா? - வியாபாரிகள் என்ன கூறுகிறார்கள்!
- தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும்.
- தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும்.
சென்னை:
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயருமா? அல்லது ஏற்ற-இறக்க நிகழ்வு தொடருமா?, விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தின் மீது முதலீடு மேற்கொள்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடும்.
இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு இடைவேளைதான் இந்த விலை குறைவு. இது பின்னர் மீண்டும் வேகம் எடுக்கும்.
தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) 4,100 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும்.
ஆகவே தங்கம் விலை நிச்சயம் உயரும். அதே சமயம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறைய வாய்ப்பே கிடையாது.
பொருளாதார சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளின் சில முன்னேற்பாடுகள், அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் நவம்பர் மாதம் குறைந்தால், முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்தும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
அப்படி பார்க்கையில் தங்கத்தின் தேவை வருங்காலங்களில் அதிகரிக்கும். தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும். குறுகியகால முதலீட்டுக்கு தங்கம் ஏற்றது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






