செய்திகள்

சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கும்- வைகோ

Published On 2018-11-11 04:06 GMT   |   Update On 2018-11-11 04:06 GMT
சந்திரபாபு நாயுடு போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். #MDMK #Vaiko #ChandrababuNaidu #ParliamentElection
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாலும், அதை இயக்கக்கூடிய இந்துத்துவா சக்திகளாலும் நாட்டின் ஜனநாயகம், பன்முகத்தன்மைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கு வழி ஏற்படுத்தும் நோக்கில் மாநில கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சந்திரபாபு நாயுடு, சரத்பவார்,பரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.


இதற்காக சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டுக்கு வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது நம்பிக்கை ஊட்டுகிறது. சந்திரபாபு நாயுடு போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கும். மாநில கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரஸ் கட்சியும் இணையும் அரசு, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் அரசாக இருக்கும்.

இலங்கை நாட்டின் பிரதமராக ராஜபக்சேவை அறிவித்த போது, அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கவில்லை. எனவே இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே குடும்பத்தின் கையில் அதிகாரத்தை கொடுக்க வழி ஏற்படுத்தப்படுகிறது.

இதைத்தடுக்க உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும். இந்தியா வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். தமிழீழத்துக்கான அடையாளமே இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதே ராஜபக்சேவின் நோக்கம். தமிழர்களுக்கு ஒரு போதும் அதிகார பகிர்வு கொடுக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கு இணைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்தமாட்டார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராஜபக்சேவின் கை ஓங்குவது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும். கடந்த முறை இனப்படுகொலை செய்தவர்கள், இப்போது பண்பாட்டை அழிக்கும் கலாச்சார படுகொலையை நடத்தப் போகின்றனர். இதைத் தடுக்க உலக தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் கவர்னர் நாடகம் ஆடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #ChandrababuNaidu #ParliamentElection
Tags:    

Similar News