search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் வந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
    • ரெயிலை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த ரெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பயணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் மற்றும் புதுக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை கொண்டு வந்து உணவு அளித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் வந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தென்னக ரெயில்வே மேலாளரிடம் தங்களது பகுதி வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது எனவும், இந்த ரெயிலை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


    இந்த நிலையில் ரெயில் பயணிகளுக்கு உணவளித்த ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் சோதனை முறையில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி வரும் குடியரசு தினமான நாளை 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி வரை அதாவது 3 மாத காலத்திற்கு சோதனை முறையில் இந்த ரெயிலானது ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் மக்களின் நற்செயலை பாராட்டி நன்றி கடன் செலுத்தும் விதமாக தென்னக ரெயில்வே எடுத்த இந்த முடிவு ஸ்ரீவைகுண்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    • தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.
    • தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்டவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர்.

    சென்னை:

    திருச்செந்தூரில் இருந்து கடந்த 17-ந்தேதி இரவு புறப்பட்டு சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பலத்த மழை-வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    பாதுகாப்பு கருதி ரெயில் நிறுத்தப்பட்டதால் அதில் வந்த 800 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பயணிகள் ரெயில் பெட்டியிலும் அங்குள்ள பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர்.

    ஆனால் மழையும் வெள்ளமும் கோர தாண்டவம் ஆடியதால் அவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. பாதுகாப்பாக ரெயில் பெட்டியிலேயே இருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

    பள்ளியில் தங்கியிருந்த  300 பேர் நேற்று மீட்கப்பட்டனர். அதே போல ரெயிலில் இருந்த 508 பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    நேற்று காலையில் இருந்து ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். நைலான் கயிறு உதவி மூலம் வெள்ள நீரை பயணிகள் கடந்து வந்தனர். அதே போல பெரியவர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ரெயிலில் இருந்து 508 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் சென்னைக்கு பயணமானார்கள். இரவு 11.15 மணிக்கு மணியாச்சியில் இருந்து 508 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது.

    கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் வரக்கூடிய அதே வழித்தடத்தில் புறப்பட்டு வந்தது. பயணிகளுக்கு இரவு உணவு, காலை உணவு, மதிய உணவு வரை ரெயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டன.

    காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ரெயில் தாமதமாக வந்தது. மதியம் எழும்பூர் வந்து சேர்ந்தது. விழுப்புரத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அங்கு சிறிது நேரம் நின்ற ரெயில் பயணிகளுக்கு இட்லி, பொங்கல், வடை மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து சிறப்பு ரெயில் திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் நின்றது. பயணிகள் 3 நாட்களுக்கு பிறகு தங்கள் சொந்த ஊரை அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். உறவினர்கள் அவர்களை கட்டித் தழுவி கண்ணீர் மல்க வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.


    தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.

    ஒவ்வொரு பயணிகளும் குடும்பம் குடும்பமாக சிறப்பு ரெயிலை விட்டு இறங்கி சென்றனர். 3 நாட்களுக்கு பிறகு உறவினர்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்ட அவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் மற்றவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    • தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் தேங்கியது.
    • செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்திற்கு பாதையில் சரளைக் கற்கள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் சரளைக்கற்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது.

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை மீளவிட்டான் ரெயில் நிலையங்களுக்கிடையே 7.47 கி.மீ தூர ரெயில் பாதையில் உள்ள 9 நீர்வழிப் பாலங்களில் அபாயகர அளவில் வெள்ளநீர் சென்றது.

    செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்திற்கு பாதையில் சரளைக் கற்கள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதை அறியாமல் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் (17-ந்தேதி) இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு வந்தது. அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம்-செய்துங்கநல்லூர் ரெயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால் 33 கிமீ பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இரவு 9.19 மணிக்கு நிறுத்தப்பட்டது.

    இந்த ரெயிலில் சுமார் 800 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அரசு அதிகாரிகள் உதவியுடன் நேற்று அதிகாலை 300 பயணிகள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த மீட்பு பணியின்போது சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், மீதமுள்ள 500 பயணிகளை மீட்க இயலாமல் போனது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழுவும் சாலையில் ஏற்பட்ட பல்வேறு உடைப்புகள் காரணமாக, ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் சென்று சேர முடியவில்லை.

    ரெயில்வே நிர்வாகத்தின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க, மீட்பு பணிகளுக்கு செல்லத் தயாராக இருந்த தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் அதிக மழை, வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் சென்று சேர முடியாத நிலை தொடர்ந்து நீடித்தது.

    தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன், பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.

    ரெயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், ஸ்ரீவைகுண்டம் நெருங்கும்போது வானிலை சாதகமாக இல்லாத காரணத்தினால் திரும்பிச் சென்றது. இதனால்-ரெயில் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இன்று 2-வது நாளாக ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    இதனால் பேரிடர் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி தலையில் உணவு எடுத்துச்சென்று ரெயில் பயணிகளிடம் கொடுத்தனர்.

    தொடர் மழை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக, பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடிக்கிறது. எனவே அவர்கள் ரெயில் பெட்டிகளிலும் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    • பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 300 பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • மீட்கப்படும் பயணிகளை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நெல்லை, மதுரைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகள் தீவு போல் ஆனது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் பாதைகளில் மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

    இந்நிலையில் மண் அரிப்பு காரணமாக ரெயில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய ரெயில் ஸ்ரீவைகுண்டம் நோக்கி வந்தது.

    அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரங்கத்தில் தொங்குவதை பார்த்த என்ஜின் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு ரெயிலை ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 800 பயணிகள் உயிர் தப்பினர்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் மூலம் சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மீதம் உள்ள 500 பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மிக கனமழை காரணமாக சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு ரெயில் நிலையம் செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு, ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் செல்ல முயன்றனர்.

    ஆனால் பல்வேறு இடங்களில் ரெயில் நிலையத்தை சுற்றி சாலைகளில் உடைப்பு காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. நேற்று 2-வது நாளாக அவர்களை மீட்கும் பணி தொய்வு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலை மார்க்கமாக செல்ல முடியவில்லை.

    இதனால் ஹெலிகாப்டர் மூலம் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு உணவுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 டன் நிவாரண பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

    எனினும் வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் அவர்கள் ரெயில் பெட்டிகளிலும், ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கு ரெயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கிடையே பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 300 பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இன்று காலை ரெயில் நிலையத்தில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி நடைபெற்றது. ஆனால் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததே தவிர சம்பவ இடத்தில் பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்க முடியவில்லை. இதனால் உணவு பொருட்களை ஓர் இடத்தில் கொண்டு சென்று வைத்தனர். அதனை சி.ஆர்.பி.எப்.வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் கயிறு கட்டி அதன் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளுக்கு நேரடியாக உணவு பொருட்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டது.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை சுற்றி தேங்கிய வெள்ளநீர் படிப்படியாக குறைய தொடங்கியது. பயணிகளை மீட்கும் பணிக்காக இன்று 6 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது.

    மேலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் இருக்கும் இடத்தை இன்று நெருங்கினர். இதற்கிடையே சிக்கிய பயணிகளில் கர்ப்பிணி உள்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று மாலைக்குள் பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மீட்கப்படும் பயணிகளை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நெல்லை, மதுரைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் அடிப்படை வசதிகளுக்காக ரெயில் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ உதவிகளும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது.

    ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் குறித்து 6 அமைச்சர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    மீட்பு பணிகள் குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது:-

    திருச்செந்தூர்-சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியது. 3 நாட்களாக சுமார் 35 மணி நேரங்களை கடந்து அங்கு தவிக்கும் 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அனைவரையும் மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்படுவார்கள். இன்று மாலைக்குள் பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கனமழையால் ஸ்ரீவைகுண்டம்- செய்துங்க நல்லூர் இடையே தண்டவாளத்தில் சேதம்.
    • கனமழையால் ஸ்ரீவைகுண்டம் ரெயில்நிலையம் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட இடம் மழை வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதால் ஸ்ரீவைகுண்டத்திலேயே ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும், ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பக்கங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. இதனால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் தீவானது. இதனால் ரெயிலில் சுமார் 800 பயணிகள் சிக்கித் தவித்தனர். அவர்களில் சுமார் 400 பேர் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

    சுமார் 300 பேர் ரெயில் நிலையத்திலேயே தவித்தனர். அவர்கள் உணவு, குடிநீ்ர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வானிலை மோசம் காரணமாக உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே ஆர்.பி.எஃப். குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியவை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் புறப்பட்டனர். ஆனால், திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அவர்களால் விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆர்.பி.எஃப். குழு ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை அடைந்துள்ளது. அவர்கள் பயணிகளுக்கு உணவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் அந்த இடத்திற்கு சென்ற பிறகு அவர்கள் மீட்கப்படுவார்கள்.

    ஹெலிகாப்டரில் 2 டன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது.

    ×