search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் பயணிகள் 3 நாட்களுக்கு பிறகு இன்று சென்னை வந்தனர்

    • தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.
    • தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்டவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர்.

    சென்னை:

    திருச்செந்தூரில் இருந்து கடந்த 17-ந்தேதி இரவு புறப்பட்டு சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பலத்த மழை-வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    பாதுகாப்பு கருதி ரெயில் நிறுத்தப்பட்டதால் அதில் வந்த 800 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பயணிகள் ரெயில் பெட்டியிலும் அங்குள்ள பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர்.

    ஆனால் மழையும் வெள்ளமும் கோர தாண்டவம் ஆடியதால் அவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. பாதுகாப்பாக ரெயில் பெட்டியிலேயே இருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

    பள்ளியில் தங்கியிருந்த 300 பேர் நேற்று மீட்கப்பட்டனர். அதே போல ரெயிலில் இருந்த 508 பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    நேற்று காலையில் இருந்து ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். நைலான் கயிறு உதவி மூலம் வெள்ள நீரை பயணிகள் கடந்து வந்தனர். அதே போல பெரியவர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ரெயிலில் இருந்து 508 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் சென்னைக்கு பயணமானார்கள். இரவு 11.15 மணிக்கு மணியாச்சியில் இருந்து 508 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது.

    கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் வரக்கூடிய அதே வழித்தடத்தில் புறப்பட்டு வந்தது. பயணிகளுக்கு இரவு உணவு, காலை உணவு, மதிய உணவு வரை ரெயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டன.

    காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ரெயில் தாமதமாக வந்தது. மதியம் எழும்பூர் வந்து சேர்ந்தது. விழுப்புரத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அங்கு சிறிது நேரம் நின்ற ரெயில் பயணிகளுக்கு இட்லி, பொங்கல், வடை மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து சிறப்பு ரெயில் திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் நின்றது. பயணிகள் 3 நாட்களுக்கு பிறகு தங்கள் சொந்த ஊரை அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். உறவினர்கள் அவர்களை கட்டித் தழுவி கண்ணீர் மல்க வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.


    தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.

    ஒவ்வொரு பயணிகளும் குடும்பம் குடும்பமாக சிறப்பு ரெயிலை விட்டு இறங்கி சென்றனர். 3 நாட்களுக்கு பிறகு உறவினர்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்ட அவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் மற்றவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    Next Story
    ×