search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீவைகுண்டத்தில் 3-வது நாளாக வெள்ளம்: சென்னை ரெயிலில் சிக்கி தவிக்கும் 500 பேரை மீட்கும் பணி தீவிரம்
    X

    ஸ்ரீவைகுண்டத்தில் 3-வது நாளாக வெள்ளம்: சென்னை ரெயிலில் சிக்கி தவிக்கும் 500 பேரை மீட்கும் பணி தீவிரம்

    • பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 300 பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • மீட்கப்படும் பயணிகளை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நெல்லை, மதுரைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகள் தீவு போல் ஆனது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் பாதைகளில் மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

    இந்நிலையில் மண் அரிப்பு காரணமாக ரெயில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய ரெயில் ஸ்ரீவைகுண்டம் நோக்கி வந்தது.

    அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரங்கத்தில் தொங்குவதை பார்த்த என்ஜின் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு ரெயிலை ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 800 பயணிகள் உயிர் தப்பினர்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் மூலம் சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மீதம் உள்ள 500 பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மிக கனமழை காரணமாக சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு ரெயில் நிலையம் செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு, ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் செல்ல முயன்றனர்.

    ஆனால் பல்வேறு இடங்களில் ரெயில் நிலையத்தை சுற்றி சாலைகளில் உடைப்பு காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. நேற்று 2-வது நாளாக அவர்களை மீட்கும் பணி தொய்வு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலை மார்க்கமாக செல்ல முடியவில்லை.

    இதனால் ஹெலிகாப்டர் மூலம் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு உணவுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 டன் நிவாரண பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

    எனினும் வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் அவர்கள் ரெயில் பெட்டிகளிலும், ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கு ரெயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கிடையே பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 300 பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இன்று காலை ரெயில் நிலையத்தில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி நடைபெற்றது. ஆனால் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததே தவிர சம்பவ இடத்தில் பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்க முடியவில்லை. இதனால் உணவு பொருட்களை ஓர் இடத்தில் கொண்டு சென்று வைத்தனர். அதனை சி.ஆர்.பி.எப்.வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் கயிறு கட்டி அதன் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளுக்கு நேரடியாக உணவு பொருட்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டது.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை சுற்றி தேங்கிய வெள்ளநீர் படிப்படியாக குறைய தொடங்கியது. பயணிகளை மீட்கும் பணிக்காக இன்று 6 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது.

    மேலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் இருக்கும் இடத்தை இன்று நெருங்கினர். இதற்கிடையே சிக்கிய பயணிகளில் கர்ப்பிணி உள்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று மாலைக்குள் பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மீட்கப்படும் பயணிகளை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நெல்லை, மதுரைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் அடிப்படை வசதிகளுக்காக ரெயில் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ உதவிகளும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது.

    ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் குறித்து 6 அமைச்சர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    மீட்பு பணிகள் குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது:-

    திருச்செந்தூர்-சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியது. 3 நாட்களாக சுமார் 35 மணி நேரங்களை கடந்து அங்கு தவிக்கும் 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அனைவரையும் மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்படுவார்கள். இன்று மாலைக்குள் பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×