search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரித்துறை சோதனை"

    • 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.
    • 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இரவு பகலாக நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.

    அரசியல் கட்சியினரின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் என அனைத்து தரப்பினரின் வாகனங்களையும் எந்தவித பாகுபாடுமின்றி சோதனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் பறக்கும் படை அதிகாரிகள் சில இடங்களில் பாரபட்சம் காட்டியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பணப்பட்டு வாடாவை தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இன்று அதிரடியாக தொடங்கி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

    அப்போது பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கு தேர்தல் ஆணையத்துடன் வரும் நாட்களில் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரி பகுதியில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில் அதிபரின் வீட்டில் ரகசிய இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோன்று கொண்டித்தோப்பு பகுதியிலும் வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் பொருட்களை மொத்தமாக சப்ளை செய்யும் பணியிலும் ஒப்பந்த பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பரிசுப் பொருட்களை அரசியல் பிரமுகர்களுக்கு இந்த 2 தொழில் அதிபர்களும் மொத்தமாக சப்ளை செய்துள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர புரசைவாக்கம் உள்ளிட்ட மேலும் 3 இடங்களிலும் தொழில் அதிபர்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது வீடுகளிலும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அரசியல் பிரமுகர்களின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

    திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட கிடாதுறை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் விசாரணைக்குப்பின் வீட்டில் இருந்து ரூ.11 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அணிக்கடவு பகுதியைச்சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

    வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இப்போதே பணப்பட்டு வாடா செய்து வருவதாக 2 நாட்களுக்கு முன்பே தகவல் பரவியது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள தொகுதி ஒன்றில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு அரசியல் கட்சியினர் தங்களுக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று சத்தியம் வாங்கி இருப்பதாகவும் தகவல் பரவியது.

    இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து பணப்பட்டு வாடாவை தடுக்க அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். தேர்தல் களத்திலும் பரபரப்பு நிலவுகிறது.

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (வயது35). இவர், பேரண்டபள்ளி பகுதியில் தனியார் கிரஷர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி, பெங்களூரிலிருந்து அவர் காரில் வந்தபோது, ஓசூர் சோதனைச்சாவடி பகுதியில் அவரது காரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர். தனது கிரஷரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அந்த பணத்தை அவர் பெங்களூரிலிருந்து, ஒரு தொழிலதிபரிடம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை, ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரில் உள்ள லோகேஷ் குமாரின் வீட்டில், ஓசூர் வருமான வரித்துறை துணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு சூட்கேசை கைப்பற்றி போலீஸ் ஜீப்பில் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    அதில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார், கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத்தின் மருமகன் ஆவார்.

    இந்த அதிரடி சோதனை ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
    • போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கர்ணன் (வயது70). இவர் கே.கே.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும் நிலக்கிழாராகவும் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கர்ணன் வீடு மற்றும் கம்பத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்த நிலையில் இன்று காலை வரை நீடித்தது. பின்னர் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் இதுபோன்று நிதி நிறுவனங்களில் அதிக அளவு பணம் பெற்று பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து போடிக்கு வந்த தனியார் வாடகை வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருந்த ஒரு சூட்கேசில் ரூ.20 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரித்தபோது ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
    • ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா. இவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். சமீபத்தில் இவரது மகனுக்கும் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது.

    சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.

    அங்குள்ள அறைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் பலவிதமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓட்டலில் பணம் ஆவணங்கள் கைப்பற்றியது குறித்து ஓட்டல் நிர்வாகம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை.

    • சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
    • சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    சென்னையை மையமாக கொண்டு செயல்படும் மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கன்வர் லால் குழுமத்துக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று நள்ளிரவு 11 மணியுடன் நிறைவு பெற்றது.

    இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் குமார் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, அந்த மெஸ்சுக்கு சீல் வைத்தனர்.

    பின்னர் சமீபத்தில் அதிகாரிகள் ஒப்பதலுடன் சீல் அகற்றப்பட்டு மெஸ் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 7 வருமான வரித்துறை அதிகாரிகள் கொங்கு மெஸ் நிர்வாகத்தினர் பழைய மெஸ் கட்டிடம் அருகாமையில் புதிதாக புதிதாக கட்டி வரும் 4 மாடி கட்டிடத்தை பொறியாளர்களை வைத்து அளந்தனர். மேலும் கட்டிட மதிப்பீட்டை பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இதில் 2 கார்களில் வந்த 9 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வீட்டிலும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.

    பின்னர் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசும் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செந்தில் பாலாஜியின் நண்பரின் ஓட்டல் கட்டிடத்தை தொடர்ந்து அவரது சகோதரர் கட்டும் புதிய வீட்டினை வருமானவரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து மதிப்பீடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.
    • சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து கோவை காளப்பட்டி பகுதியில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிறுவனம் மற்றும் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராமநாதன் வீடு, அவருடைய மகன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த 2-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடந்தது. நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    கோவை காளப்பட்டியில் உள்ள கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இன்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதேபோல் பட்டணத்தை சேர்ந்த ராமநாதனின் வீடு, அவருடைய அலுவலகம், மகன் வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. வீட்டில் உள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

    இதுதவிர ராமநாதனின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்கி இருக்கும் நாயக்கன்பானையம், ராமலிங்கம் நகரில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பம்புசெட் நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் இன்று 3-வது நாளாக சோதனை நடந்தது.

    சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

    சோதனை முடிவடைந்த பிறகே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரியவரும். சோதனை நடைபெற்று வரும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நாமக்கல், ஈரோடு பகுதிகளிலும் பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
    • சோதனையில் கணக்கு நோட்டுகள், சொத்து ஆவணங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரிய துறை, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரிய துறையில் ஒப்பந்தங்களை பெற்று கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் பெரிய கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் செனாய் நகர், எழும்பூர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை இன்று 2-வது நாளாகவும் நீடிக்கிறது.

    சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அண்ணாநகர் 10-வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செனாய் நகர் அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அண்ணாநகர் வீட்டுக்கு இன்று 'சீல்' வைத்துள்ளனர்.

    இந்த நிறுவனம் ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பு பகுதியை வடிவமைத்து கட்டி கொடுத்த நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நாமக்கல், ஈரோடு பகுதிகளிலும் பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தாங்கள் மேற்கொண்ட கட்டுமான பணிகளில் அதிக வருவாய் பெற்றும் அதற்கு முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்திருந்தன.

    இதன் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நீடிக்கும் சோதனை நிறைவு பெற்ற பிறகே வரி ஏய்ப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாமக்கல்லைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் டெண்டர் பெற்று பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டிடங்களை கட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்துள்ளது. மேலும் ஒப்பந்ததாரரின் வீடும் அதே பகுதியில் அமைந்துள்ளது. நேற்று மதியம் 12 மணி அளவில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் நடந்தது. 2-வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. சோதனையில் கணக்கு நோட்டுகள், சொத்து ஆவணங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம் இவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை மூடினர். வீட்டில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    நேற்று காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பின்னர் இன்று மீண்டும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நேற்று காஞ்சிகோவில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம். இவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று காஞ்சிகோவில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை மூடினர். வீட்டில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    இதேபோல் இவர்களுக்கு தொடர்புடைய ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, ஈரோடு பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். அவருடைய உறவினர் ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    நேற்று காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பின்னர் இன்று மீண்டும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேப்போல் நாமக்கல் ஒப்பந்ததாரரின் உறவினர் வீட்டிலும் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.
    • ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பெரிய நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் பால்தியோ சாகு. இந்த நிறுவனத்துக்கு அதன் வினியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் பெருந்தொகையை செலுத்தியுள்ளதாகவும், அது கணக்கில் காட்டப்படவில்லை என்றும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதையடுத்து குறிப்பிட்ட மதுபான நிறுவனத்தின் ஆலை, அலுவலகம் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த புதன்கிழமை திடீர் அதிரடி சோதனையை தொடங்கினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    நேற்று 3-வது நாளாக தொடர்ந்த சோதனையில், ஒடிசா சுதபாடா நகரில் உள்ள அந்த மதுபான நிறுவனத்தின் அலுவலகத்தில், ரூ.200 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.

    அங்கெல்லாம் அலமாரிகளில் செங்கற்களை போல கட்டு கட்டாக அடுக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து வருமான வரி அதிகாரிகளே மலைத்துப் போயினர்.

    அவற்றை பெரிய பெரிய பைகளில் எடுத்து அடுக்க அடுக்க, அந்த பணி நீண்டுகொண்டே போனது.

    சுமார் 160 பைகளில் அடுக்கப்பட்ட ரொக்கத்தொகை ரூ.250 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அவற்றில் பைகளில் இருந்த ரூ.20 கோடி பணம்தான் நேற்று எண்ணி முடிக்கப்பட்டது. மொத்தம் 36 பணம் எண்ணும் எந்திரங்களை நிறுத்தாமல் பயன்படுத்தியும், பணக்கட்டுகளை எண்ணி முடிக்க இயலாமல் வருமான வரி அதிகாரிகள் திணறிப்போயினர்.

    ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான். இந்த சோதனை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பிட்ட மதுபானம் நிறுவனமும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

    அந்த மதுபான நிறுவனத்துடன் ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தள அரசியல்வாதிகளுக்கும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வருமான வரி சோதனை தொடர்பான செய்தியை இணைத்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'நாட்டு மக்கள், குவிந்து கிடக்கும் இந்த பணத்தை பார்த்துவிட்டு, பின்னர் 'நேர்மை' குறித்து அந்த தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்' என்று கூறியுள்ளார்.

    மதுபான நிறுவன இடங்களில் பிடிபட்ட தொகை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என ஒடிசா மாநில பா.ஜனதாவும் வலியுறுத்தியுள்ளது.

    • சோதனையின் போது அருணை கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் வருமான வரி சோதனையின் போது கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 3-ந்தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனை தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நீடித்தது. இந்த சோதனையின் போது எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    எ.வ.வேலுவுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 3 அறைகளை பூட்டி வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் அப்போது ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 80 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு குன்னத்தூர் ஆகிய 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அருணை மருத்துவ கல்லூரியில் கடந்த முறை சோதனை நடத்தியபோது சீல் வைக்கப்பட்ட 3 அறைகளிலும் சீலை அகற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அறையில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்டவை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இன்று காலை 11 மணி அளவில் 6 வருமானவரி துறை அதிகாரிகள் தனித்தனியாக 3 கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் அருணை கல்லூரியில் மீண்டும் சோதனை நடத்தியதுடன் சீல் வைக்கப்பட்ட அறையிலும் ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனையின் போது அருணை கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் வருமான வரி சோதனையின் போது கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சோதனை நடைபெற்ற 3 அறைகள் முன்பும் மத்திய படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    செங்கல்பட்டு குன்னத்தூரில் ராஜ பிரகாஷ் என்கிற ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் ஒருவர் குன்னத்தூர் பகுதியில் 35 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாகவே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 2 வாரங்களே ஆன நிலையில் மீண்டும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
    • வரி ஏய்ப்பு அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டவுன் பகுதியில் வாசவி என்ற பெயரில் தங்க, வெள்ளி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பிரபு காந்த் (45). இவர் நகைக்கடையுடன் நண்பர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் கோவையில் இருந்து 3 கார்களில் வருமான வரித்துறையினர் வந்தனர். சத்தியமங்கலம் டவுன் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு திடீரென சென்று ஷட்டரை மூடி சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் வெள்ளி கடை மற்றும் உரிமையாளர் வீடு, அவரது நண்பர்கள் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடையில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் வெளியே உள்ளவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடையின் ஒவ்வொரு பகுதியாக சென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 12 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை தொடர்ந்து சோதனை நடந்தது.

    பின்னர் வருமானவரித்துறையினர் சோதனை முடித்துக் கொண்டு கிளம்பி சென்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    எனினும் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முழுமையான தகவல் தெரிவிக்கவில்லை. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனை சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×