search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா நகர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்கு சீல்: வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
    X

    அண்ணா நகர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்கு சீல்: வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    • நாமக்கல், ஈரோடு பகுதிகளிலும் பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
    • சோதனையில் கணக்கு நோட்டுகள், சொத்து ஆவணங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரிய துறை, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரிய துறையில் ஒப்பந்தங்களை பெற்று கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் பெரிய கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் செனாய் நகர், எழும்பூர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை இன்று 2-வது நாளாகவும் நீடிக்கிறது.

    சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அண்ணாநகர் 10-வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செனாய் நகர் அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அண்ணாநகர் வீட்டுக்கு இன்று 'சீல்' வைத்துள்ளனர்.

    இந்த நிறுவனம் ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பு பகுதியை வடிவமைத்து கட்டி கொடுத்த நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நாமக்கல், ஈரோடு பகுதிகளிலும் பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தாங்கள் மேற்கொண்ட கட்டுமான பணிகளில் அதிக வருவாய் பெற்றும் அதற்கு முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்திருந்தன.

    இதன் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நீடிக்கும் சோதனை நிறைவு பெற்ற பிறகே வரி ஏய்ப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாமக்கல்லைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் டெண்டர் பெற்று பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டிடங்களை கட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்துள்ளது. மேலும் ஒப்பந்ததாரரின் வீடும் அதே பகுதியில் அமைந்துள்ளது. நேற்று மதியம் 12 மணி அளவில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் நடந்தது. 2-வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. சோதனையில் கணக்கு நோட்டுகள், சொத்து ஆவணங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம் இவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை மூடினர். வீட்டில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    நேற்று காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பின்னர் இன்று மீண்டும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×