search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக்ஸ்வெல்"

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனை.
    • பலமுறை தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை.

    உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் தனி ஒருவரால் அணியை வெற்றி பெற வைத்தார்.

    விளைாடும்போது அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு (cramps) ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

    இந்த நிலையில், நாளைய அரையிறுதி போட்டி குறித்து கம்மின்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "மேக்ஸ்வெல் விளையாட தயாராக உள்ளார். நேற்று அவருக்கு சற்று வலி இருந்தது. அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என தெரிந்து கொள்ள பலமுறை ஸ்கேன் எடுத்தோம். அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாக அமைந்துள்ளது. நாளை டாஸ் சுண்டும்போது ஆடும் லெவன் அறிவிக்கப்படும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இம்ராகிம் சதம் ஆப்கானிஸ்தானை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றது.
    • 70 ஓவர்கள் வரை ஆப்கானிஸ்தான் சிறந்த ஆட்டத்தை விளையாடியது.

    ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் இப்ராகிம் சட்ரன் ஆட்டமிழக்காமல் 143 பந்தில் 129 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவித்தது.

    பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்கத்தில் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் (128 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 201*) ருத்ரதாண்டவம் ஆட ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்த போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இப்ராகிம் சட்ரனின் அற்புதமான சதம், ஆப்கானிஸ்தானை சிறந்த நிலையில் வைத்திருந்தது. அவர்கள் 2-வது பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை தொடங்கி, 70-வது ஓவர் வரை சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். ஆனால், கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம், அவர்களின் அதிர்ஷ்டம் மாறுவதற்கு போதுமானதாக இருந்தது.

    மேக்ஸ் நெருக்கடியில் இருந்து மேக்ஸ் அதிரடி! எனது வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் ஆட்டம் (மேக்ஸ்வெல் இரட்டை சதம்).

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • உலகக் கோப்பையில் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
    • இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார். அதோடு இக்கட்டான நிலையில் இருந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.

    இந்த போட்டியின் சாதனைத் துளிகள் விவரம்...

    1. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் 10 சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மோர்கன் (17), கெய்ல் (16), மார்ட்டின் கப்தில் (11), பஹர் ஜமான் (11) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

    2. ஒருநாள் போட்டியில் 2-வது அதிவேக இரட்டை சதம் இதுவாகும். இஷான் கிஷன் 126 பந்தில் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் நேற்று 128 பந்தில் இரட்டை சதம் அடித்தார். கெய்ல் 138 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

    3. தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்காத ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் சார்லஸ் காவென்ட்ரி 194 (நாட்அவுட்), விவ் ரிச்சர்ட்ஸ் (189 நாட்அவுட்), டு பிளிஸ்சிஸ் (185) சாதனை படைத்திருந்தனர்.

    4. 7-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்- கம்மின்ஸ் ஜோடி 202 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பட்லர்- ரஷித் ஜோடி 177 ரன்களும், ஆபிஃப் ஹொசைன்- மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி 174 (நாட்அவுட்) ரன்களும் குவித்திருந்தனர்.

    5. உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் (237 நாட்அவுட்), கெய்ல் (215) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    6. சேஸிங்கில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பஹர் ஜமான் 193 ரன்கள் எடுத்துள்ளார்.

    7. உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கெய்ல் (49), ரோகித் சர்மா (45) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

    8. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வாட்சன் 185 (நாட்அவுட்), ஹெய்டன் (181 நாட்அவுட்), டேவிட் வார்னர் 179 மற்றும் 178) ரன்கள் அடித்துள்ளனர்.

    9. உலகக் கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    10. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சட்ரன் சதம் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர என்ற பெருமையை பெற்றார்.

    • ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது.
    • ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை.

    இதில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. பின்னர் எழுச்சி பெற்று தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 4-ம் தேதி இங்கிலாந்துடன் விளையாட உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

    குஜராத்தில் கோல்ப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். மேக்ஸ்வெல் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    • நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும்.

    மொகாலி:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ந்தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.

    அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங்கில் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.

    ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்து உள்ளது. டேவிட் வார்னர், லபுஸ்சேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.

    இரு அணி வீரர்கள் விபரம் வருமாறு:-

    இந்தியா:- லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான்கிஷன் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா.

    ஆஸ்திரேலியா:- கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசல்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.

    • மேக்ஸ்வெல், வினி ராமன் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இருவரது திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது.

    பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். மேக்ஸ்வெல் தமிழ்ப் பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேக்ஸ்வெல் 2015 உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 339 ரன்களையும், 128 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரன்களை குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 2159 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும், டி20-ல் 39 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.

    • பிராவோவுக்கு கீழ் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.
    • டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள்.

    பெங்களூரு:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 227 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

    இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் அருகே இருந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும். இதற்கு தகுந்தார் போல் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும்.

    டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள். நான் விக்கெட் கீப்பராக களத்திற்கு பின்னால் நின்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

    நான் போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன். இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும். எங்கள் அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். நிச்சயமாக இது போன்ற சூழலில் பந்து வீசும் போது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

    இருப்பினும் எங்கள் வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பிராவோ கீழ் அவர்கள் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    • சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன்.
    • வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.

    மும்பை:

    ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான தகவலால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதிலேயே ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இதில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத தொகையில் வீரர்கள் ஏலம் கேட்கப்பட்டனர். இதில் ஆர்சிபி அணி பல சுவரஸ்யமான ஏலங்களை எடுத்த போதும், அதிரடி நாயகன் க்ளென் மேக்ஸ்வெல் பங்கேற்பாரா என்ற குழப்பத்திலேயே இருந்து வருகிறது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது. இதன் பிறகு தனது சொந்த ஊருக்கு சென்ற மேக்ஸ்வெல் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, விளையாட்டுத்தனமாக செயல்பட்டு கீழே விழுந்தார். அவரின் கால் மீது அவரின் நண்பர் ஒருவரும் விழுந்துவிட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு உடையும் அளவிற்கு சென்றது.

    இந்நிலையில் இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியதாவது:-

    சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன். எனினும் கண்டத்தில் இருந்து தப்பி, காயத்துடன் தப்பித்தேன். வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.


    காலில் இருந்த வலிகள் குறைந்து ஓரளவிற்கு நடந்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக குணமடைந்து நடக்க தொடங்குவேன். எனது மனைவி வினி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவரின் உதவியால் நான் மீண்டு வருவேன் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

    ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். மேக்ஸ்வெல்லின் காயம் சற்று தீவிரமாக இருப்பதால், அவர் பழையபடி முழு உடற்தகுதியை பெறுவதற்கு இன்னும் 3 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல்-ல் விளையாடுவாரா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.

    • 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது.
    • ஒரு வேளை மேத்யூ வேட் கீப்பிங் பன்ன முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சூப்பர்12 சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானது. தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது. அதனால் மேத்யூ வேட் கொரோனா தொற்றுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஒரு வேளை முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள். நேற்று சிறிது நேரம் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

    இன்னொரு பக்கம் மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

    இலங்கைக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    அடுத்ததாக தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முக்கியமான வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் 2013-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், வெறும் ஏழே டெஸ்ட் போட்டிகளில் ஆடி 339 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும்.

    கடைசியாக 2017ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன்பின்னர் 5 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத மேக்ஸ்வெல்லுக்கு தற்ப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது.

    டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் ஹெட்டுக்கு பதிலாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக போராடும்.

    ×