search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன்"

    • சுவாமி-அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலை, இரவில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலை மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர்-பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர். அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, சுவாமி சன்னதி தெரு, முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் எதிரே உள்ள முக்தீசுவரர் கோவிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    அதை தொடர்ந்து சுவாமி-அம்மன் தெப்பக்குளத்துக்கு சென்று, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்கள். சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

    இதற்கிடையே மீனாட்சியின் தெப்ப உற்சவத்தை காண தெப்பக்குள கரையில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.

    பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பகல் 11.10 மணிக்கு தெப்பம் வலம் வர தொடங்கியது. பக்தி கோஷங்கள் எதிரொலித்தன.

    தெப்பக்குளத்தை 2 முறை பகலில் தெப்பம் வலம் வந்த பிறகு சுவாமியும், அம்மனும் தெப்பக்குள மைய மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து இரவு மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு தை மாத பவுணர்மி நிலவு வெளிச்சத்திலும், மின்னொளியிலும் ஜொலித்த தெப்பத்தை இரவு 7.40 மணிக்கு மேல் பக்தர்கள் பக்தி கோஷத்துடன் இழுத்தனர். இரவில் 3-வது சுற்றாக தெப்பம் குளத்தை வலம் வந்தது. அப்போதும் ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.

    பின்னர் மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் தங்கக்குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தெப்பக்குளத்தில் இருந்து சுவாமி-அம்மன் புறப்பாடாகி, காமராஜர்சாலை, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலை அடைந்தனர்.

    தெப்ப உற்சவத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள், போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல கமிஷனர் செல்லத்துரை, மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெற்கதிர்களுடன் சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தை தெப்பத்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக நேற்று முன்தினம் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும். நேற்று சிந்தாமணியில் கதிரறுப்பு வைபவமும் நடந்தன. இதற்காக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அங்கு எழுந்தருளினார்கள். சிந்தாமணி பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வயல்வெளியில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சார்பில் கோவில் சிவாச்சாரியார்கள் நெற்கதிர்களை அறுவடை செய்தனர். பின்னர் நெற்கதிர்களுடன் சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தெப்ப உற்சவமான இன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலையில், மீனாட்சி அம்மன் கோவில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்..

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகிறார்கள். மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செயயப்பட்டுள்ளது.

    • தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • தை தெப்பத்திருவிழா 4-ந்தேதி நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

    இந்த திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதில் வலைவீசி அருளிய லீலை ஆகும். இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் பாலத்திற்கு கீழே உள்ள வலைவீசி தெப்பக்குளம் பகுதிக்கு செல்வர். அங்கு லீலை முடிந்து மீண்டும் கோவிலை வந்தடைவது வழக்கம்.

    ஆனால் கடந்த கொரோனா காலக்கட்டமான 2021, 2022-ம் ஆண்டு சுவாமி அங்கு செல்லவில்லை. தற்போது அந்த இடத்தில் வேறு ஒரு நிகழ்வு நடப்பதால் சுவாமி அங்கு செல்லாமல் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வலைவீசி அருளிய திருவிளையாடல் லீலை நேற்று காலை நடந்தது. அப்போது பெரிய தாம்பூலத்தில் 2 வெள்ளி மீன்களை வலைவீசி பிடிப்பது போன்று பிடித்து அதனை சுந்தரேசுவரர் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சுவாமி-பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ளும் மச்சகந்தி விவாகம் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி, சுந்தரேசுவரரை வணங்கி சென்றனர்.

    விழாவில் தை தெப்பத்திருவிழா வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்காக காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை (வியாழக் கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை தெப்பத்திருவிழா விமரிசை யாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று (24-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கொடிமரம் முன்பு சிம்ம வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

    அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் ஓத அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டினர். தொடர்ந்து தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு சிம்ம வாகனத்தில் அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகின்றனர். 4-ந் தேதி வரை நடக்கும் 12 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் அன்னம், பூதம், காமதேனு, கைலாச பர்வதம், தங்கக்குதிரை, ரிஷப வாகனம், யாழி, நந்திகேசுவரர் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    விழாவில் 8ம் நாளான வருகிற 31-ந்தேதி காலை 9 மணிக்கு தங்க பல்லக்குகளில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் சித்திரை வீதி, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், மகபூப்பாளையம் வழியாக வலைவீசி தெப்பக்குளத்தில் எழுந்தருளுகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தை தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணியளவில் வெள்ளி அவுதா தொட்டில் அம்மனும், சிம்ம வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளுகின்றனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகின்றனர். அதன் பின் தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்ப உற்வசம் நடக்கிறது.

    தெப்பத்தை சுவாமி-அம்பாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இங்கு மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்பின் இரவு சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புவார்கள்.

    • தெப்பத்திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவிற்காக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், துணை கமிஷனர் அருணாச்சலம் உள்பட கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தெப்பத் திருவிழா கொடியேற்றம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடை பெறுகிறது.

    முன்னதாக, கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளு கின்றனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காம தேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். பிப்ரவரி 3-ந் தேதி 11-ம் நாள் விழாவையொட்டி, சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பா டாகி கீழ மாசி வீதி வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

    அங்கு, கதிரறுப்பு திருவிழா நடைபெறும். பிப்ரவரி 4-ந் தேதி சுவாமி யும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்று காலையில் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் 2 முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வருகின்றனர். தொடர்ந்து, அன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தரு ளுகின்றனர்.

    பின்னர், மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். அதன்பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளுகின்றனர்.

    விழாவையொட்டி, பிப்ரவரி 4- ந் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும்.

    மேற்கண்ட நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு உகந்த மார்கழி மாதத்திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு்க்கான விழா இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி நாளை (6-ந் தேதி) அதிகாலை வரை நடைபெறும். அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.

    மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும்தான், பஞ்ச உலோகத்தினால் ஆன பஞ்சசபைக்குரிய 5 உற்சவர்கள் உள்ளனர். பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திர சபை என பஞ்ச சபைக்கும் இத்திருக்கோவிலில் தனித்தனியாக உற்சவர்கள் உள்ளனர்.

    ஆருத்ரா விழாவையொட்டி நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பலக்கோல நடராஜர்), சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரது உற்சவ மூர்த்திகள் 6-கால் பீடத்திலும், இதர 4 சபைகளுக்கான நடராஜர், சிவகாமி அம்மன் உற்சவர்கள் 100 கால் மண்டபம் என இரு இடங்களில், இந்த விழாவில் இன்று இரவில் எழுந்தருள்கிறார்கள்.

    அப்போது பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.

    நாளை, காலை பஞ்ச சபைக்குரிய 5 உற்சவ நடராஜரும், சிவகாமி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

    அபிஷேகத்திற்கான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வழங்க விரும்பினால், இன்று இரவு 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் கொடுக்கலாம் என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
    • மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது.

    இதேபோன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது.

    உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளப்பதை குறிக்கும் வகையில் அஷ்டமி சப்பரம் தேரோட்டம் நடத்தப் படுகிறது. அஷ்டமியான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர தேரோட்டம் நடைபெறுகிறது.

    இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதன் பின் காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பக்தர்கள் கோஷம் முழங்க 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பரத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக மதுரையில் விழாக்கோலம் பூண்டிருந்தது.

    தேரோட்டத்தின் போது 2 தேர்களிலும் இருந்த சிவாச்சாரி யார்கள் பூஜை செய்த அரிசியை வழி நெடுகிலும் தூவிச்சென்றனர். அதனை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால் பசி என்னும் நோய் ஒழியும் நம்பிக்கை.

    2 தேர்களும் கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளிவீதி, தெற்குவெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளி வீதி, குட்செட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக நிலையை அடைந்தது.

    அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு லட்சதீபம் நடக்கிறது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று இரவு, கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்தாய்ப்பாக இன்று இரவு மீனாட்சி கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. குறிப்பாக பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    • அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றவை.
    • அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா அன்று சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், பெரிய சப்பரம் போன்ற தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர். இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி சப்பர திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 16-ந்தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மார்கழி 1-ந் தேதி தொடங்குவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    அஷ்டமி திருவிழா நடைபெற உள்ளதால் சப்பரம் உலா வரும் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம் நடைபெறாது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றுவார்கள்.

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மாசி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை சுவாமி சன்னதி கொடிமரத்தின் அருகே யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் திருவிழாவிற்கு காப்பு கட்டிய, சங்கர் பட்டர், திருவிழா கொடியினை 10.44 மணிக்கு ஏற்றி வைத்தார்.

    அதை தொடர்ந்து புனிதநீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்து, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அப்போது அங்கு சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரரேசுவரர் எழுந்தருளினர். பின்னர் 2-ம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவில் முக்கிய நாளான 6-ந் தேதி கார்த்திகை தீப தினத்தன்று மாலையில், கோவில் வளாகம், பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றுவார்கள்.

    மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்வார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கீரிடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கார்த்திகை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • தீப தினத்தன்று லட்சதீபங்கள் ஏற்றப்படுகின்றன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவின் முக்கிய நாளான 6-ந் தேதி கார்த்திகை தீபதினத்தன்று மாலையில், கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

    மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்கிறார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டது.
    • 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மதுரை

    சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணி வரை ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆகம விதிப்படி கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று சந்திர கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி- சாயரட்சை பூஜைகள் முடிந்த பிறகு கோவில் நடை இன்று காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரகண நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.

    சந்திர கிரகணம் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி 22 உப கோவில்களின் நடைகளும் இன்று சாத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மத்திம காலத்தில் சுவாமிகளுக்கு மாலை 4.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பிறகு சந்திரசேகரர் புறப்பாடு நடக்கும். இரவு 7 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கும். 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×