search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன்"

    • மீனாட்சி அம்மன் வரும் போது சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த குடை சரிந்து விழுந்தது.
    • கொட்டும் மழையில் சுவாமி வீதி உலா வருவதை கண்ட பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் 2-வது நாளான நேற்று மீனாட்சி அம்மன் அன்னவாகனத்திலும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பூதவாகனத்திலும் எழுந்தருளினார்கள்.

    பின்னர் கோவிலில் இருந்து சுவாமி இரவு 7.40 மணிக்கு மேல் வீதி உலாவிற்கு புறப்பட்டது. கீழமாசி வீதி, தெற்குமாசி வீதிகளை தாண்டி மேலமாசிவீதிக்கு சுவாமி வரும் போது திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. உடனே பட்டர்கள் சுவாமியை மழையில் நனைந்து விடாமல் இருக்க வேமாக கொண்டு சென்றனர். ஆனாலும் காற்று பலமாக வீசியதால் மேலமாசி வீதியில் மீனாட்சி அம்மன் வரும் போது சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த குடை சரிந்து விழுந்தது.

    பின்னர் அதனை பட்டர்கள் பிடித்து சரி செய்து சுவாமியை அங்கிருந்து கொண்டுசென்றனர். தொடர்ந்து மழை பெய்ததால் நேதாஜி ரோடு முருகன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமியை நிறுத்தி வைத்தனர். பின்னர் மழை நின்ற பிறகு சுவாமியை மேற்கொண்டு வடக்கு, கீழ மாசி வீதிகளில் கொண்டு செல்லாமல் மேல கோபுரம் வழியாக கோவிலுக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்றனர். கொட்டும் மழையில் சுவாமி வீதி உலா வருவதை கண்ட பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கூறினர்.
    • அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை சித்திரை பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பி.மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பேசும்போது கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தின் அடை யாளங்களில் ஒன்றான சித்திரை பெரு விழா மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா வில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. தேரோட்டம் 3-ந்தேதி நடக்கிறது. கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர் சேவை 4-ந்தேதி நடக்கிறது. வைகை ஆற்றில் எழுந்த ருளல் 5-ந்தேதி நடக்கிறது.

    கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்த ருளல் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலின் காரணமாக உயிரிழப்பு போன்ற வருந்தத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இத்தகைய சம்பவங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அதற்கேற்றாற்போல் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையை அதிக ரித்து வாகன நிறுத்தம், மக்கள் கூட்டம் ஆகிய வற்றை முறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதிய சி.சி.டி.வி காமிராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை செய்திட வேண்டும்.

    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை முறையே பரிசோதித்து அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.

    மேலும் தேரோட்டத் தின்போது தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித் துறையின் சான்றிதழ் பெற்றிட வேண்டும். தேர் செல்லும் வழி, கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளை முறையே கண்காணித்து தாழ்வான நிலையில் மின் விநியோக கம்பிகள் உள்ளனவா? என்பதை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகிய வற்றை உறுதி செய்திட வேண்டும். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய மருத்துவக் குழுக்கள் அமைத்திட வேண்டும். அரசு மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரை பெருவிழாவை மிகச்சிறப் புடன் நடத்திட அனைத்துத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர், மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி பொன்வசந்த், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மதுரை மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன்ஜித் சிங், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , வெங்க டேசன் (சோழவந் தான்) , பூமிநாதன் (மதுரை தெற்கு) ,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சூரியகலா கலாநிதி , துணை மேயர் நாகராஜன், மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் , கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
    • திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது.

    உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக நடப்பது சித்திரை திருவிழா.

    12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், சுந்தரேசுவரரை எதிர்த்து போரிடும் திக்குவிஜயம், மீனாட்சி அம்மன்-சுந்தரே சுவரர் திருக்கல்யாணம், திருத்தேர் வீதி உலா உள்ளிட்டவைகள் நடைபெறும்.

    அதுமட்டுமின்றி திருவிழா நடக்கும் 12 நாட்களும், காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுந்தரே சுவரர் பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து காட்சி அளிப்பார்கள். இதனை காண மாசி வீதிகள் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து இரவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது. சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா நடந்தது. மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் தங்க சப்பரத்தில் மாசிவீதிகளில் உலா வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரர் திக்கு விஜயம் மே 1-ந்தேதியும் நடைபெறுகிறது. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும் நடைபெறுகிறது.

    மே 4-ந்தேதியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெறுகிறது. சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • 30-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • 2-ந்தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும்.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் குறிப்பிடத்தக்கது சித்திரை திருவிழாவாகும். இந்த விழா 12 நாட்கள் கொண்டாடப்படும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மீனாட்சி-சுந்தரேசுவரரை வழிபடுவார்கள்.

    சித்திரை திருவிழா நடக்கும் 2 வாரங்கள் மதுரை மாநகரம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று(23-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன.

    காலை 10 மணி அளவில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பட்டர்கள் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிட்டனர்.

    சித்திரை விழா நடக்கும் நாட்களில் சுவாமி அம்பாள் சகிதம் தினந்தோறும் காலை, இரவு ஆகிய 2 வேளைகளிலும் கற்பக விருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்பட பல்வேறு வாகனங்களில், வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது 4 மாசி வீதிகளிலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வந்தார். மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா புறப்பட்டார். இன்று இரவும் சுவாமிகளின் ரத வீதி உலா நடக்கிறது.

    நாளை (24ந்தேதி) சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 3-ம் நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுவாமி கைலாச பர்வதம் வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் காட்சியளிப்பார்கள். வருகிற 26-ந்தேதி தங்க பல்லக்கு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    27-ந்தேதி வேடர் பரி லீலை நடைபெறும். அப்போது சுவாமிகள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்கள். 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சைவசமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை நடக்கிறது. அன்று சுவாமிகள் ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார்கள். 29-ந்தேதி நந்திகேஸ்வரர் யாளி வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளுவார்கள்.

    வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் உலா வருவார். அடுத்த மாதம்(மே) 1-ந்தேதி(திங்கட்கிழமை) திக் விஜயம், இந்திர விமான உலா நடக்கிறது.

    2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு யானை வாகனம், புஷ்ப பல்லக்கில் சுவாமிகள் வலம் வருவார்கள். 3-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை சுவாமிகள் சப்தவர்ண சப்பரத்தில் உலா வருவார்கள். 4-ந்தேதி(வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.

    • சித்திரை திருவிழா 22-ந்தேதி தொடங்கி மே 4-ந் தேதி வரை நடக்கிறது.
    • மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி நடக்கிறது.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஆகும். இது கோவிலில் உள்ள வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடக்கிறது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதே போல தெற்கு கோபுரம் வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா தரிசனம் என்ற முறையில் அனுமதி வழங்கப்படும். இது யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு அனுமதி என்ற நிலையில் இருக்கும்.

    மீனாட்சி-சுந்தரேசுவரர் கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கட்டண சீட்டு பெற வசதியாக இந்து சமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in-திருக்கோவிலின் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

    இதன் ஒரு பகுதியாக ரூ.500 கட்டண பதிவில் ஒருவர் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும். ரூ.200 கட்டண பதிவில் ஒருவர் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சீட்டு வாங்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி, பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, போட்டோ அடை யாள அட்டை, கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இணைய தளத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தி உரிய நபருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி எண்ணிற்கு வருகிற 26-ந் தேதி தகவல் அனுப்பப்படும்.

    உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்-குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள், வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உறுதி செய்யப்பட்ட தகவலை காட்டி, கட்டணச் சீட்டு தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்பட மாட்டாது.

    வெளியூரில் வசிக்கும் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் உடையவர்களுக்கு மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் அடுத்த மாதம் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச் சீட்டு தரப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜ கோபுரம், மொட்டை முனீ ஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவர். ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு ராஜ கோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

    திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து திருக்கல்யாண காட்சியைக் கண்டு அம்மன்-சுவாமி அருள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.... https://www.maalaimalar.com/devotional

    • மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    • கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது.



    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்ணஆகார்ஷன பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

     மதுரை

    தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்தது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    அவர்கள் அதிகாலை முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்ததால் மீனாட்சி அம்மன் கோவில் வெளியிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இது பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டுச்சேலை- மனோரஞ்சிதம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் தற்காலிக கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதன கோபால சுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    • மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனையானது.
    • கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றனர். அப்போது அவர்கள் மீனாட்சி அம்மன்- சுந்தரே சுவரருக்கு பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் சாத்தி வழிபடுவது வழக்கம். இது தவிர கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலை கள், வேஷ்டி கள், துண்டுகள் சாத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை கோவில் நிர்வாகம் வாரம் ஒரு முறை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டு சேலைகள் விற்பனை மூலம் எவ்வளவு தொகை கிடைத்துள்ளது? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அன்பளிப்பாக வந்த பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் வகை யில் கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் ரூ. 5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 கிடைத்து உள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம், கோவிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது.
    • பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்படாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர்.எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு 4 கால சிறப்பு பூஜை நடக்கிறது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் விமரி சையாக கொண்டாடப்படும். அதன்படி சிவராத்திரியான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சொக்கநாதர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சி அம்மன் சன்னதியில் 108 சங்காபிஷேக வழிபாடும் நடக்கிறது. அதன்பின்னர் சனி பிரதோஷ வழிபாட 4.45 மணிக்கு தொடங்குகிறது.

    சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு தொடங்கி அதிகாலை வரை சுவாமி-அம்பாளுக்கு 4 கால பூஜைகள் நடை பெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மனுக்கு முதல் கால பூஜை இரவு 10 மணிக்கும், 2ம் கால பூஜை 11 மணிக்கும், 3ம் கால பூஜை 12 மணிக்கும், 4ம் கால பூஜை 1 மணிக்கும் நடக்கிறது.

    இதேபோல் சுவாமிக்கு முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2ம் கால பூஜை 12 மணிக்கும், 3ம் கால பூஜை 1 மணிக்கும், 4ம் கால பூஜை 2 மணிக்கும் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடக்கிறது.

    சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி-அம்பாளுக்கு விடிய விடிய அபிஷேக ஆராதனை நடைபெறும். அபிஷே கத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன் ஆகியவற்றை ஏராளமான பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் வழங்கினர்.

    இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

    இதேபோல் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.

    சிம்மக்கல் ஆதி சொக்க நாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் மகா சிவராத்திரி வழிபாடு இன்று இரவு நடக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
    • இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும் இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம். மேலும் அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். எனவே பக்தர்கள் அந்த நேரத்தில் சென்று வழிபாடு நடத்தலாம்.

    சிவராத்திரி விழாவையொட்டி இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேசுவரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதன்பின்னர் சனிபிரதோஷ வழிபாடு 4.45 மணிக்கு மேல் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு மகாசிவராத்திரி 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.

    அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளிறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    அதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவில், நேதாஜி ரோடு முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் குலதெய்வ வழிபாட்டிற்காக நகர் மற்றும் புறநகரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    • 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    • இரவில் நடக்கும் நான்கு கால பூஜைகள் விவரங்களை பார்க்கலாம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    மேலும் இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை, அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை வருகிற 18-ந் தேதி மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம். மேலும், 18-ந் தேதி இரவு முதல் மறுநாள் காலை வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    சிவராத்திரி விழாவையொட்டி அன்று இரவு 4 கால பூஜைகள் நடைபெறும். அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும். அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்த சாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், காசி விசுவநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈசுவரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • மார்ச் 16-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
    • 25-ந்தேதி சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதில் மாசி திருவிழா தான் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் விநாயகர், முருகன், முதல் மூவர், சந்திரேசகர் என ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக திருவிழா நடைபெறும்.

    இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழாவின் கொடியேற்றம் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்தின் அருகே யாகசாலை வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது. அப்போது அங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். அதைதொடர்ந்து காப்பு கட்டிய பட்டர் கொடிமரத்திற்கு பூஜை செய்தார்.

    அதைதொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரால் கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து காலை 9.20 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கும், மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர், சந்திரசேகர் சுவாமிகள் காலை, மாலையில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வருவர். அதை தொடர்ந்து வருகிற 25-ந் தேதி காலை சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றியுள்ள கொடிமரத்திற்கு சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும்.

    அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதை தொடர்ந்து அடுத்த மாதம் 16-ந் தேதி பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெறும் திருவிழா நிறைவு பெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாச்சலம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×