search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மீனாட்சி அம்மன் கோவில் மாசி மண்டல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    மீனாட்சி அம்மன் கோவில் மாசி மண்டல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • மார்ச் 16-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
    • 25-ந்தேதி சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதில் மாசி திருவிழா தான் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் விநாயகர், முருகன், முதல் மூவர், சந்திரேசகர் என ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக திருவிழா நடைபெறும்.

    இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழாவின் கொடியேற்றம் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்தின் அருகே யாகசாலை வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது. அப்போது அங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். அதைதொடர்ந்து காப்பு கட்டிய பட்டர் கொடிமரத்திற்கு பூஜை செய்தார்.

    அதைதொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரால் கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து காலை 9.20 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கும், மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர், சந்திரசேகர் சுவாமிகள் காலை, மாலையில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வருவர். அதை தொடர்ந்து வருகிற 25-ந் தேதி காலை சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றியுள்ள கொடிமரத்திற்கு சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும்.

    அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதை தொடர்ந்து அடுத்த மாதம் 16-ந் தேதி பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெறும் திருவிழா நிறைவு பெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாச்சலம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×