என் மலர்tooltip icon

    வழிபாடு

    அஷ்டமி சப்பர தேரோட்டம்: வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

    • சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
    • மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது.

    இதேபோன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது.

    உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளப்பதை குறிக்கும் வகையில் அஷ்டமி சப்பரம் தேரோட்டம் நடத்தப் படுகிறது. அஷ்டமியான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர தேரோட்டம் நடைபெறுகிறது.

    இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதன் பின் காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பக்தர்கள் கோஷம் முழங்க 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பரத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக மதுரையில் விழாக்கோலம் பூண்டிருந்தது.

    தேரோட்டத்தின் போது 2 தேர்களிலும் இருந்த சிவாச்சாரி யார்கள் பூஜை செய்த அரிசியை வழி நெடுகிலும் தூவிச்சென்றனர். அதனை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால் பசி என்னும் நோய் ஒழியும் நம்பிக்கை.

    2 தேர்களும் கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளிவீதி, தெற்குவெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளி வீதி, குட்செட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக நிலையை அடைந்தது.

    அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×