search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் விரட்டியடிப்பு"

    • 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    அந்த வகையில் கடந்த மாதம் 14 மற்றும் 28-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.

    அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 8-ந்தேதி 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    அடுத்ததாக கடந்த 9-ந்தேதி 38 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்த இலங்கை மன்னார் நீதிமன்றம், இந்த தண்டனையை 5 வருடம் சென்ற பிறகு அனுபவிக்க வேண்டும் என்ற விநோத நிபந்தனையுடன் விடுதலை செய்தது.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மீதமுள்ள ஒருவரான முருகன் என்பவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. அதன் பின்னரும் எல்லை தாண்டினால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரித்துள்ளது.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 22 பேரும் விடுதலையாவார்கள் என்று அவர்களது உறவினர்கள் காத்திருந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்ட 26 பேர் இன்று 3-வது முறையாக ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சில நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற மீனவர்கள் 64 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்ட 26 பேர் இன்று 3-வது முறையாக ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 22 மீனவர்களுக்கு வருகிற 15-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். 4 மீனவர்களை மட்டும் நீதிபதி விடுதலை செய்தார்.

    அப்போது மீண்டும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சில நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.

    இலங்கைக்கு தானமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், சர்வதேச எல்லையை சரியாக அடையாளம் காண முடியாததாலும், கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை பாரம்பரிய மீன்பிடி இடம் என நினைத்தும் மீன்பிடிக்க அந்த பகுதிக்குள் செல்கின்றனர்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அச்சுறுத்தி விரட்டுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். மேலும் பல சமயங்களில் மீனவர்களை சிறைபிடித்து செல்கின்றனர். சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மேலும் 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு, கிழக்கு பகுதி மீனவர்கள் தலைமன்னார், யாழ்ப்பாணம் பகுதியில் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதன் காரணமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் எல்லை தாண்டி மீன் பிடிப்பது சற்று குறைந்தாலும் முழுமையாக முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

    இதனை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும், அவர்களை சிறைபிடித்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் கச்சத்தீவு பகுதியில் 6 கடற்படை கப்பல்களை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிலையில் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8, 9 ஆகிய நாட்களில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், மதன், சிவகுமார், நித்தியகுமார். இவர்கள் 4 பேரும் நேற்று இரவு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்கள் படகில் ஏறி 4 பேரையும் கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கு மீனவர்கள் கொடுக்க மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் 4 பேரையும் மூங்கில் கட்டையால் சரமாரியாக தாக்கி மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புடைய மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை சக மீனவர்கள் மீட்டு வேகவேகமாக கரைக்கு திரும்பினர். பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அடிக்கடி தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.
    • இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துரமலிங்கதேவரின் நினைவிடத்தில் அவரது குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தார். அப்போது தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைத்து கொடுத்ததும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடத்தை புதுப்பித்து கொடுத்ததும், ரூ.9 லட்சத்தில் நூற்றாண்டு விழா வளைவு, ரூ.9 லட்சம் செலவில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி அமைத்து கொடுத்ததும், ரூ.4 லட்சம் செலவில் நூலகம், ரூ.5 லட்சத்தில் முடியிறக்கும் மண்டபம், ரூ.5 லட்சத்தில் பால்வள மண்டபம், ரூ.5 லட்சத்தில் முளைப்பாரி மண்டபம் இப்படி அனைத்தையும் அமைத்து கொடுத்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர்தான்.

    தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    அதுமட்டுமல்லாமல் மதுரையில் கம்பீரமாக தேவர் சிலை அமைந்துள்ளது என்றால் பி.கே.மூக்கையா தேவர் முயற்சியால் அமைக்கப்பட்டு அந்த சிலை திறப்பு விழாவுக்கு அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரியை அழைத்து வந்து கலைஞர் தலைமையில் அரசு விழாவாக நடத்தியவர் தலைவர் கலைஞர்.

    மேலும் மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு முத்துராமலிங்கதேவர் பாலம் என பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர்தான். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பில் அறக்கட்டளையை உருவாக்கியவர் கலைஞர். மேலும் கழக ஆட்சி முதன் முதலாக உருவானதும் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் சமூக மக்களின் வசதிக்காக கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டனர்.

    அதனை உருவாக்க அனுமதி அளித்ததும் நமது கழக அரசுதான். அதன்படி கமுதி, உசிலம்பட்டி, மேல நீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர். இதில் மேலநீலிதநல்லூரில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த கல்லூரியை 2021-ம் ஆண்டு கழக அரசு அமைந்ததும் அதனை கைப்பற்றி மீட்டு கொடுத்துள்ளோம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ரூ.1.5 கோடியில் 2 நிரந்தர மண்டபங்கள் அமைக்கப்படும் என நான் வெளியிட்டு இருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    1989-ம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று புது இடஒதுக்கீடு கொள்கையை உருவாக்கி கல்வி, வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    ஆகவே முத்துராமலிங்கத் தேவர் வீரராகவே பிறந்தார். வீரராகவே வாழ்ந்தார். வீரராகவே மறைந்தார். அவர் மறைவுக்கு பிறகும் வீரராகவே போற்றப்படுகிறார். இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கூறியுள்ளார். எனவே அவரது சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தேவருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறோம். மேலும் வெளியுறவுதுறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் பேசி அவ்வப்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ராமநாதபுரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை இது தொடர்பாக பேச டெல்லிக்கு அனுப்பி உள்ளேன். இதுகுறித்து அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவார். மேலும் ராமநாதபுரம் மீனவர் சங்க பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து சென்று இப்பிரச்சனை தொடர்பாக பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம். இந்த வித்தியாசத்தை உணர்ந்து ஆளுநர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வெளியே தெருவில் தான் வீசப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் காண்பித்து உண்மையை வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார் என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி. கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகை பாரதிய கட்சி அலுவலகமாக மாறி உள்ளது. இது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம், அக்.30-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல் லும்போது அவர்களை இலங்கை கடற்படை தாக்கி விரட்டி அடிப்பதும், எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது அதிகரித்துள்ளது.

    கடந்த 14-ந்தேதி இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 27 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை கண்டித்தும் மீன வர்களை விடுதலை செய்யக் கோரியும் கடந்த 2 வாரங் களாக ராமேசுவரம் மீனவர் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை கருதி வேலை நிறுத்தம் கடந்த சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. அன்றைய தினமே காலையில் ராமேசு வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்ற னர். ஆனால் அவர்களுக்கு கடலுக்கு சென்ற முதல் நாளே அதிர்ச்சி காத்திருந் தது.

    ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 37 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர். இது ராமேசுவரம் பகுதி மீன வர்களிடையே கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

    அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 64 பேர் இலங்கை கடற்படை யால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய் யப்பட்ட விசைப்ப டகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று (திங் கட்கிழமை) முதல் ராமேசு வரத்தில் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத் தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் வருகிற 3-ந்தேதி மண்டபம் ரெயில் நிலை யத்தில் சென்னை எக்ஸ்பி ரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது, 6-ந்தேதி தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ராமேசுவரத் தில் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசு வரம் துறைமுகத்தில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறை முகம் இன்று வேலை நிறுத் தம் காரணமாக வெறிச் சோடி காணப்பட்டது.

    இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்வது அதிகரித் துள்ளது. இதற்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் வேலை நிறுத்தம் காரணமாக எங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.

    • தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன், குமரவேல், நெடுஞ்செழியன் ஆகிய 4 பேரும் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பைபர் படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கத்தி முனையில் மீனவர்களை மிரட்டி படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை ஆறுகாட்டுதுறைக்கு கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையை அளிக்கிறது.
    • மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.

    இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையை அளிக்கிறது.

    தொடர்ச்சியாக இது போன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    • சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 27 மீனவர்களுடன் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும் வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் பாலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் ராமேசுவரம் சுடுகாட்டம்பட்டி பகுதியை சேர்ந்த செங்கோல் பிராங்க்ளின் (வயது 34), ஜஸ்டின், அஸ்வால்ட் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்த மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் அவர்களை அங்கு மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இலங்கை கடற்படையினர் கற்களை வீசியதில் மீனவர் செங்கோல் பிராங்கிளினின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், படகில் இருந்த மற்ற 3 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 4 மீனவர்களும் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    இதையடுத்து நேற்று காயம் அடைந்த செங்கோல் பிராங்கிளினை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

    இதற்கிடையே மீன்துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் காயமடைந்த மீனவரை சந்தித்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த நிலையில் தற்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே கோடியக்கரை அருகே 10 நாட்டிக்கல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை செருதூர் மீனவர்கள் 5 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறித்து சென்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 7 ரோந்து கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பது தெரியவந்தது.
    • ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படை அவர்களை தாக்கி சிறை பிடிப்பதும், விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்ல 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறையிடம் இருந்து அனுமதி டோக்கன் பெற்றிருந்தது. நேற்று காலை முதல் 100-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு புறப்பட்டு சென்றன.

    அப்போது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 7 ரோந்து கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பது தெரியவந்தது. இதுகுறித்து கரையில் இருந்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் 300 படகுகள் செல்ல வேண்டிய நிலையில் 50 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். அதோடு மட்டுமல்லாமல் படகுகளில் இறங்கிய கடற்படை வீரர்கள் வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். தொடர்ந்து இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடிப்போம் என இலங்கை கடற்படை எச்சரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு இன்று அதிகாலை ராமேசுவரத்திற்கு திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படை தாக்குதல் அதிகமாக உள்ளன. இதனால் மீன்பிடிக்க செல்ல அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்ல குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். ஆனால் அதற்கு போதுமான பலன் கிடைப்பதில்லை.

    பல நேரங்களில் இலங்கை கடற்படை விரட்டியடிப்பதால் பாதியிலேயே திரும்ப வேண்டி உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை விரட்டிய நிலையில் இன்று 2-வது முறையாக ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள்.

    ராமேசுவரம்:

    கடலுக்கு செல்லும் மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடுகளுடன் கரை திரும்ப வேண்டும் என்று வேண்டிய காலம் போய், இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று வேண்டும் காலம் வந்து விட்டது. அந்த அளவுக்கு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மொத்தம் 650 விசைப்படகுகள் உள்ளன. இதில் நேற்று காலை மீன்வளத்துறை அனுமதியுடன் 352 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை மிரட்டும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்தனர். இதனால் மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

    அதேபோல் இன்று அதிகாலை மீண்டும் சிங்கள கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நமது மீனவர்கள் கடலில் வலைகளை வீசி எதிர்திசையில் இழுத்துச் சென்று மீன் பிடிப்பார்கள். ஆனால் இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள். இன்று காலையும் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த சிங்கள கடற்படையினர் ராட்சத விளக்குகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி, மீனவர்கள் மீது தங்களது ரோந்து படகில் குவித்து வைத்திருந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசியுள்ளனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் சில கி.மீ. தூரம் வரை இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகில் மீனவர்களை துரத்தி வந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து காயங்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதுபற்றிய தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கடலுக்குள் சென்று சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    ×