search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
    X

    ராமேசுவரம் மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

    • பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.
    • இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துரமலிங்கதேவரின் நினைவிடத்தில் அவரது குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தார். அப்போது தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைத்து கொடுத்ததும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடத்தை புதுப்பித்து கொடுத்ததும், ரூ.9 லட்சத்தில் நூற்றாண்டு விழா வளைவு, ரூ.9 லட்சம் செலவில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி அமைத்து கொடுத்ததும், ரூ.4 லட்சம் செலவில் நூலகம், ரூ.5 லட்சத்தில் முடியிறக்கும் மண்டபம், ரூ.5 லட்சத்தில் பால்வள மண்டபம், ரூ.5 லட்சத்தில் முளைப்பாரி மண்டபம் இப்படி அனைத்தையும் அமைத்து கொடுத்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர்தான்.

    தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    அதுமட்டுமல்லாமல் மதுரையில் கம்பீரமாக தேவர் சிலை அமைந்துள்ளது என்றால் பி.கே.மூக்கையா தேவர் முயற்சியால் அமைக்கப்பட்டு அந்த சிலை திறப்பு விழாவுக்கு அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரியை அழைத்து வந்து கலைஞர் தலைமையில் அரசு விழாவாக நடத்தியவர் தலைவர் கலைஞர்.

    மேலும் மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு முத்துராமலிங்கதேவர் பாலம் என பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர்தான். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பில் அறக்கட்டளையை உருவாக்கியவர் கலைஞர். மேலும் கழக ஆட்சி முதன் முதலாக உருவானதும் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் சமூக மக்களின் வசதிக்காக கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டனர்.

    அதனை உருவாக்க அனுமதி அளித்ததும் நமது கழக அரசுதான். அதன்படி கமுதி, உசிலம்பட்டி, மேல நீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர். இதில் மேலநீலிதநல்லூரில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த கல்லூரியை 2021-ம் ஆண்டு கழக அரசு அமைந்ததும் அதனை கைப்பற்றி மீட்டு கொடுத்துள்ளோம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ரூ.1.5 கோடியில் 2 நிரந்தர மண்டபங்கள் அமைக்கப்படும் என நான் வெளியிட்டு இருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    1989-ம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று புது இடஒதுக்கீடு கொள்கையை உருவாக்கி கல்வி, வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    ஆகவே முத்துராமலிங்கத் தேவர் வீரராகவே பிறந்தார். வீரராகவே வாழ்ந்தார். வீரராகவே மறைந்தார். அவர் மறைவுக்கு பிறகும் வீரராகவே போற்றப்படுகிறார். இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கூறியுள்ளார். எனவே அவரது சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தேவருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறோம். மேலும் வெளியுறவுதுறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் பேசி அவ்வப்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ராமநாதபுரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை இது தொடர்பாக பேச டெல்லிக்கு அனுப்பி உள்ளேன். இதுகுறித்து அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவார். மேலும் ராமநாதபுரம் மீனவர் சங்க பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து சென்று இப்பிரச்சனை தொடர்பாக பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம். இந்த வித்தியாசத்தை உணர்ந்து ஆளுநர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வெளியே தெருவில் தான் வீசப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் காண்பித்து உண்மையை வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார் என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி. கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகை பாரதிய கட்சி அலுவலகமாக மாறி உள்ளது. இது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×