search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி"

    • குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பொள்ளாச்சி,

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதனால் எப்போதுமே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருகிற 27-ந் பழனி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளனர். தற்போது தைப்பூச திருவிழாவும் வர உள்ளது.

    இதனையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதுதவிர பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அடுத்த மாதம் 5-ந் தேதி பழனியில் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. இதனை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழனிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சுழற்சி முறையில் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த நேரத்தில் கூட்டத்தை பொறுத்து அதிக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
    • பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பள்ளிக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிக்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினர். ஆனால் மாணவி பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் கூறி விட்டனர்.

    இதனால் பயந்த பெற்றோர் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி தனது காதலனுடன் கோவைக்கு படம் பார்க்க சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவைக்கு வந்து மாணவியை தேடினர். அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் காதலனுடன் சுற்றித்திரிந்த மாணவியை மீட்டனர். பின்னர் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்ற போலீசார் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மாணவியை படத்துக்கு அைழத்து சென்ற வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி.
    • சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை

    கோவை சூலூரை சேர்ந்தவர் கார்த்திபன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கார்த்திபன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    கோவை இருகூரை சேர்ந்தவர் சக்தி வடிவேல். இவரது மகள் சுவாதி (20). இவர் கள்ளிமடை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுவாதி செல்போனில் யாரிடமே பேசி கொண்டு இருந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாதியை தேடி வருகின்றனர்.

    கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பவித்ரா (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்றனர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் பீளமேடு போலீசார் பவித்ராவை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சிறுமி உள்பட 4 பேர் மாயமானதாக புகார் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    • தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது.

    பொள்ளாச்சி,

    பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் உள்ளன.

    இதில் பரம்பிக்குளம் அணை திட்டத்தில் உள்ள தொகுப்பு பி.ஏ.பி அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை ஒருமுறை நிரம்பி விட்டால் ஓர் ஆண்டுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 22 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர தமிழகத்தில் கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும், கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்துக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த திட்டம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20-ந் தேதி பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் அணையிலிருந்து 6 டி.எம்.சி தண்ணீர் வெளியேறியது. மதகு உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரை முருகன் நேரில் ஆய்வு செய்து மதகு உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை அடுத்து ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய மதகு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.புதிதாக பொருத்தப்பட்டுள்ள மதகு 42 அடி அகலமும், 27 அடி உயரமும் கொண்டது. இதன் எடை 42 டன் ஆகும்.

    மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இதில் மதகு மேலும், கீழும் இயக்கப்பட்டு சங்கிலிகளின் தன்மையும் சோதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் தேக்குவதற்கு தயாராக மதகு பொருத்தப்பட்டுள்ளது.

    சோதனை ஓட்டத்தி ன்போது சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கடந்த சில வாரங்களாக 41 அடிக்கும் கீழ் இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 44 அடியாக உயர்ந்துள்ளது. இதற்கு மேல் உயரும் நீர்மட்டம் புதிய மதகில் தடுக்கப்பட்டு தேக்கப்படும்.

    இது குறித்து பி.ஏ.பி அதிகாரிகள் கூறும்போது, மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது. சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது என்றனர்.

    • 14 வயது மாணவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி பள்ளியில் 2-வது திருப்புதல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவில் மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனை தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என அவர் நினைத்தார். இதனால் பயந்த மாணவர் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கு இருந்த எறும்பு பொடியை கரைத்து குடித்தார். வெளியே வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக தனது மகனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வாலிபர் போக்சோவில் கைது
    • வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி :

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் பொள்ளாச்சி எஸ்.புரவி பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கபில்தேவ் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம்.

    இந்தநிலையில் கபில்தேவ் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி என்னை கடத்தி சென்றார். பின்னர் மீனாட்சிபுரம் அருகே உள்ள ராமர் பண்ணையில் உள்ள கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். பின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்று என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தற்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வருகிறார். இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் செய்த கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 7 மாதங்களாக பலாத்காரம் செய்த கபில்தேவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
    • அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

    கோவை,

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.

    இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், கோவை- கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்னைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சியில் தமிழகம்- கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபால புரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர்.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-

    பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களின் டயர்களில் ரசாயன மருந்துக் கலவை தெளிக்கப்படுகிறது.

    தமிழகம்- கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளன என்றனர்.

    • காந்தபிரகாஷ் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
    • காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கோவை

    பொள்ளாச்சியை அடுத்த மேற்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் காந்தபிரகாஷ் (வயது 43). இவர் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டி செல்வி (33).

    இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காந்தபிரகாசிடம் ரூ.50 ஆயிரத்துக்கு வேர்க்கடலை வாங்கி உள்ளார். அதற்கான பணத்தை அவர் இதுவரை தரவில்லை என தெரிகிறது.

    சம்பவத்தன்று பாண்டி செல்வி, வீராசாமியிடம் பணத்தை கேட்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை தருவதாக கூறினார்.

    இதையடுத்து பாண்டி செல்வி வீடு திரும்பினார். சிறிது நேரம் கழித்து வீராசாமியின் மகன் டிரைவர் வேலை செய்து வரும் கார்த்தி (26)என்பவர் குடிபோதையில் காந்தபிரகாசின் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டு இருந்தார். சத்தத்தை கேட்டு பாண்டி செல்வி வெளியே வந்து கார்த்தியிடம் எதற்காக சத்தம் போட்டு கொண்டு இருக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் எதற்காக எனது வீட்டுக்கு வந்து பணம் கேட்டாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பாண்டி செல்வியை தாக்கினார். இதைகண்டு அதிர்ச்சி அைடந்த காந்தபிரகாஷ் ஓடி வந்து அவரை தடுத்தார். அப்போது அவரையும் அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கினார்.

    கணவன்-மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பாண்டி செல்வி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்கு சென்று விஷத்தை குடித்தார்.

    கோவை 

    பொள்ளாச்சி கோட்டூர் கரையான் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் முருகேஷ் (20). கூலி தொழிலாளி.

    முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார். இதனை அவரது தந்தை, மகன் முருகேசுக்கு அறிவுரை கூறி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார்.

    ஆனாலும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முருகேஷ் தவணைக்கு புதியதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர்.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்கு சென்று விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வாங்கியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
    • பார்த்தசாரதி தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார்.

    கோவை

    பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது சங்கீதா அவரை கண்டித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சங்கீதா கோபித்து கொண்டு எம்.ஜி.புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    சம்பவத்தன்று பார்த்தசாரதி, சங்கீதாவை பார்ப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு 2 பேரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதை பார்த்து பார்த்தசாரதி சங்கீதாவை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து சங்கீதா வடக்கிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.

    • 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம்.
    • 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    கோவை

    கோவை மாவட்டம் ெபாள்ளாச்சி குமரன் நகரில் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வாகனங்கள் கடந்த 22-ந் தேதி சேதப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.

    ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம், நாங்கள் அமைதியான வழியில் சென்று கொண்டு இருக்கிறோம். போலீசார் எங்களுக்கு எதிரியல்ல. நாங்கள் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம். போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொள்ளவும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு ஒரு அமைப்பின் பெயரும் அதில் எழுதப்பட்டு இருந்தது.

    இந்த மிரட்டல் கடிதத்தை யார் அனுப்பியது என்ற விவரங்கள் எதுவும் இல்லாமல் போலீஸ் நிலையத்துக்கு தபாலில் வந்தது. இந்த மிரட்டல் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதனை யார் அனுப்பியது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 

    • சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    அன்னூர்,

    கோவை நரசீபுரம் ராமதேவி கோவில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்.

    இவர் தனது காரில் உறவினர் ரங்கசாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சென்று, மீண்டும் அங்கிருந்து கோவை நோக்கி வந்தனர்.

    இந்த காரை சிவக்குமார் இயக்கினார். கார் அன்னூர்-சத்தி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பயணிகள் ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பிக்கப் வாகனம் குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை இயக்கி வந்த சிவகுமார் பலத்த காயம் அடைந்தார். மற்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சிவக்குமார் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ெசல்லும் மற்ற வாகனங்கள் மீது மோதும் காட்சிகள் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×