search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் டீசல் விலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது.
    • மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது.

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி கிலோ ரூ.780 ஆக உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.9.60 உயர்த்தப்பட்டு ரூ.196.68-க்கு விற்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. அதே போல் பொது விற்பனை வரி 17 சதவீதமாக இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    • 2022 ஏப்ரல் 6-ந்தேதிக்கு பிறகு கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    • தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக்கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனாலும், சில்லரை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    2022 ஏப்ரல் 6-ந்தேதிக்கு பிறகு கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக்கொண்டிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6 லாபம் கிடைத்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலைகளையும் லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால், திடீரென அம்முடிவு கைவிடப்பட்டதன் காரணம் புரியவில்லை.

    மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக்கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இரண்டு முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
    • சமையல் எரிவாயு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.27276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன.

    சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நவம்பர் 2021 மற்றும் மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.

    எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வாட் வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வரியை குறைக்காததால் அங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மாநிலங்களில் வரியை குறைக்கச் சொல்லவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மந்திரியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • கடந்த மே மாதத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.92.24 ஆகவும் விற்கப்பட்டது. அதன்பிறகு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
    • 201 நாட்களாக பெட்ரோல், டீசல் மாற்றமின்றி அதே விலையிலேயே நீடிக்கிறது. 7 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படவில்லை.

    சென்னை:

    கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை ரூ.10-ம் குறைக்கப்பட்டது. அன்று சென்னையில் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்றது.

    அதன்பிறகு ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பெட்ரோல்-டீசல் விலையும் கடுமையாக அதிகரித்தது.

    கடந்த மே மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் விலையும் குறைந்தது.

    அதன்படி கடந்த மே மாதத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.92.24 ஆகவும் விற்கப்பட்டது. அதன்பிறகு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 201 நாட்களாக பெட்ரோல், டீசல் மாற்றமின்றி அதே விலையிலேயே நீடிக்கிறது. 7 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படவில்லை.

    அதே நேரத்தில் கடந்த மாதம் பெட்ரோல்-டீசல் விற்பனை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 11.7 சதவீதம் உயர்ந்து 26.6 லட்சம் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 23.8 லட்சம் டன்னாக இருந்தது.

    கடந்த நவம்பர் மாத பெட்ரோல் விற்பனை 2020-ம் ஆண்டு நவம்பர் மாத விற்பனையைவிட 10.7 சதவீதம் அதிகமாகவும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தைவிட 16.2 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.

    அதேபோல் டீசல் விற்பனை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 27.6 சதவீதம் அதிகரித்து 73.2 லட்சம் டன்னாக இருந்தது.

    இது கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை விட 17.4 சதவீதம் அதிகமாகும். 2019-ம் ஆண்டை விட 9.4 சதவீதம் அதிகமாகும். டீசல் மாதாந்திர விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாத டீசல் விற்பனையான 62.5 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பரில் 17.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

    விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான தேவை கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 21.5 சதவீதம் உயர்ந்து 5 லட்சத்து 72 ஆயிரத்து 200 டன்னாக இருந்தது.

    கடந்த நவம்பர் மாதத்தில் சமையல் கியாஸ் விற்பனை முந்தைய ஆண்டின் நவம்பர் மாத விற்பனையைவிட 7.8 சதவீதம் அதிகரித்து 25.5 லட்சம் டன்னாக இருந்தது.

    • பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
    • பணவீக்கம் காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வரி வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் மத்திய அரசோ பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை என்று கூறியுள்ளார். பணவீக்கம் காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வரி வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மே 16, 2014 அன்று (டெல்லி) - ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 107.09 அமெரிக்க டாலர். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.71.51, டீசல் விலை ரூ.57.28 ஆக இருந்தது. டிசம்பர் 1, 2022 அன்று - ஒரு பேரல் கச்சா எண்ணெய் 87.55 அமெரிக்க டாலர்களாக இருந்தது. பெட்ரோல் விலை ரூ.96.72, டீசல் விலை ரூ 89.62 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலையானது 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது, ஆனால் பாஜகவின் கொள்ளை அதிகமாக உள்ளது' என கூறி உள்ளார்.

    • 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
    • சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    அந்த வகையில், கடந்த 190 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

    இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது;
    • டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக சமையல் எரிவாயு உற்பத்திச் செலவும் பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ.615 குறைத்துள்ளன. ஆனால், வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. மாறாக, மே, ஜூலை காலத்தில் இந்த வகை சமையல் எரிவாயு விலை ரூ.103 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சர்வதேச சந்தையில் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது; டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது. சமையல் எரிவாயு விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ரூ.22,000 கோடி மானியம் கொடுத்து மத்திய அரசு ஈடு செய்து விட்ட நிலையில், இப்போது எரிவாயு விற்பனையில் ஓரளவு லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக எரிபொருள் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் நிலையில் அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

    விலைவாசி உயர்வால் இந்திய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் துயரத்தைப் போக்க வேண்டியது எண்ணெய் நிறுவனங்களின் கடமையாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் அக்கடமையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது.
    • 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

    சர்வதேச சந்தையில், 2021ல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது.

    அப்போது தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது.

    இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

    பின்னர், தமிழகத்தில் மே 21-ந்தேதி லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 104.77 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்று, மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8, டீசல் மீதான வரியை ரூ.6 குறைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை, 102.63, டீசல் விலை ரூ.94.24 ஆக குறைந்தன.

    இதுவரை 150 நாட்கள் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் அடுத்த மாதமும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்தாண்டின் இறுதியிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    எனவே, மத்திய அரசு, வருகிற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சர்வதேச சந்தையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்களுக்கும் கீழ் குறைந்தது.
    • அதன் பின்னர் சற்று உயர்ந்து 92.84 டாலர்களாக விற்பனையானது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

    இந்நிலையில் சர்வதேச சந்தையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்களுக்கும் கீழ் குறைந்தது. அதன் பின்னர் சற்று உயர்ந்து 92.84 டாலர்களாக விற்பனையானது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச விலை நிறுவனங்களுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை கடந்த 158 நாட்களாக மாற்றம் செய்யாமல் உள்ளது.

    இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி கூறியதாவது:-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டாமா?.

    வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிலையில் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டபோது டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.20 முதல் 25 வரையும், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14 முதல் 18 வரையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதால் இழப்புகள் குறைந்து வருகின்றன என்றார்.

    இது ஒருபுறம் இருக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2015-2016 மற்றும் 2021-2022-ம் ஆண்டுக்கு இடையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலருக்கும் குறைவாக இருந்த போதும் கடந்த 2014-2015-ல் இருந்து 2021-2022-ம் ஆண்டு வரை பெட்ரோல் மீதான கலால் வரி 194 சதவீதமும், டீசல் மீதான வரி 512 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என கூறப்படுகிறது.

    மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநில அரசு வாட் வரியை குறைத்துள்ளது.
    மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தீபாவளிக்கு முந்தைய தினம் அதிரடியாக குறைத்தது. டீசல் மீதான வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும், பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு 5 ரூபாயும் குறைத்தது. மக்கள் முழுமையான பலனை பெற, மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

    மத்திய அரசை தொடர்ந்து, பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் சில மாநில அரசுகளும் குறைத்தன. சுமார் 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வரியை குறைத்துள்ளன.

    ஆனால் தமிழகம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் இருந்தன. இந்த நிலையில் சத்தீஸ்கர் அரசு இன்று டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதமும், பெட்ரோல் மீதான வாட் வரியை 1 சதவீத அளவிலும் குறைத்துள்ளது. இதனால் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சாத்தியமில்லை என நிதியமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு பத்து ரூபாயும் குறைத்துள்ள நிலையில், அதனை பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியினை கணிசமாக குறைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை தமிழ்நாடு அரசு குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 2014-ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்துவிடும் என்றும் நிதியமைச்சர்  கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்தத் தருணத்தில், கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, 06-06-2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர்  தமிழ்நாடு அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்திற்குட்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அடித்தட்டு மக்களையும், குறிப்பாக, தாய்மார்களையும் பெரிதும் பாதிக்கக்கூடிய வகையிலே இருக்கிற காரணத்தாலே இதுபற்றி உடனடியாக அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார்.

    கேரளாவை விட தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருந்தத் தருணத்தில், அந்த மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் தற்போதைய முதலமைச்சர். ஆனால், இன்று மத்திய அரசு குறைத்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் தமிழ்நாட்டை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் அதைச் செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று  நிதி அமைச்சர் அறிவித்திருப்பது வேதனைக்குரியது.

    நிதி அமைச்சர் தனது அறிக்கையில் 01-08-2014, 02-11-2021 மற்றும் 04-11-2021 ஆகிய தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரிகள், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மத்திய அரசின் வரி அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என்று கூறியிருக்கிறார்.

    மத்திய அரசின் வரி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்கிற நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் வரியைக் குறைத்திருக்கும்போது தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது என்றே தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசின் இந்த வரி விதிப்பு என்பது தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு தானே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு  இருந்தது. அதில் ஏதாவது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததா? இல்லையே!

    கோப்புப்படம்

    ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோலுக்கு மட்டும்தானே லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினால், 2014-ம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நிதி அமைச்சர். அப்பொழுதும் மாநில அரசின் வரி விகிதத்தை குறைப்பேன் என்று சொல்லாமல், மத்திய அரசின் வரிக் குறைப்பால் மாநில அரசின் வரிவிதிப்புதானாக குறைந்துவிடும் என்று கூறுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். அதேசமயத்தில், வாக்குறுதியே அளிக்காத பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கணிசமாக குறைத்துள்ளன.

    தி.மு.க.வின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    இந்தத் தருணத்தில், "சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். அவன் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்கிற வித்தியாசம் அவனுக்குத் தெரியும்" என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    பெட்ரோல் மற்றும் டீசல் மீதுான வரி குறைப்பு குறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி, மக்களின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    இதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காத நிலையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில்,  நமது நாட்டிற்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டர் ஒன்றிற்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்தோம்.

    இதனால், ஆண்டு ஒன்றிற்கு மாநில அரசிற்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. கடந்த அரசு விட்டுச்சென்ற நிதி நெருக்கடிச் சூழலிலும் இதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

    பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் ஏற்பட்ட விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவும் (Monetary Policy Committee) வலியுறுத்தி வந்தது. பல மாநில அரசுகளும் இக்கோரிக்கையை முன்வைத்தன. 

    ஒன்றிய அரசும் 3.11.2021 அன்று பெட்ரோல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூபாய் 5 மற்றும் டீசல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூபாய் 10 எனவும் குறைத்துள்ளது. ஒன்றிய வரிவிதிப்பிற்குப்பின் ‘Ad valorem’ வரிகளை தமிழ்நாடு விதிப்பதால், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் கூடுதலாக 0.65 ரூபாயும்  (மொத்தம் 5.65 ரூ.), டீசலின் சில்லறை விற்பனை விலையில் கூடுதலாக  1.10 ரூபாயும் (மொத்தம் 11.10 ரூ.) குறையும். இதனால், மாநில அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    ஒன்றிய அரசானது மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை மேலும் இதற்கு நிகராகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது, ஒரு ஏற்றுக்கொள்ள இயலாத கோரிக்கை.

    ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது ஒரு லிட்டர் டீசல் வாங்கும்பொழுது, அதன் சில்லறை விற்பனை விலையை நிர்ணயிப்பதில் பல அம்சங்கள் உள்ளன- அடிப்படை விலை (கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு விலையைச் சார்ந்தது), அதன்மீது ஒன்றிய அரசின் கலால் மற்றும் மேல்வரிகள் / கூடுதல் கட்டணங்கள், போக்குவரத்துச் செலவுகள், மாநில அரசின் வரிகள் மற்றும் முகவர் கட்டணங்கள்.

    1.8.2014 அன்று பெட்ரோல் மற்றும் டீசலின் அடிப்படை விலை மற்றும் உலக அளவில் இறக்குமதி விலை, ரூபாய் மதிப்பில்  இன்றைய இறக்குமதி விலைக்கு நிகராக இருந்தது. பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டர் ஒன்றிற்கு 48.55 ரூபாய் மற்றும் டீசலின் அடிப்படை விலை லிட்டர் ஒன்றிற்கு 47.27 ரூபாயாக இருந்தது. 4.11.2021 அன்று பெட்ரோலின் அடிப்படை விலை 48.36 ரூபாய் மற்றும் டீசலின் அடிப்படை விலை லிட்டர் ஒன்றிற்கு 49.69 ரூபாயாக இருந்தது. 1.8.2014ல், ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோலைப் பொறுத்த அளவில் லிட்டர் ஒன்றிற்கு 9.48 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 3.57 ரூபாயும் இருந்தன. அச்சமயத்தில், மாநில அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 15.47 ரூபாயும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 10.23 ரூபாயாகவும் இருந்தன.

    ஒன்றிய அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி குறைப்பதற்கு முன்பாக, பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு 32.90 ரூபாயாகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்கு 31.80 ரூபாயாகவும் இருந்தன. இதை, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 27.90 ரூபாயாகவும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 21.80 ரூபாயாகவும் ஒன்றிய அரசு தற்போது குறைத்துள்ளது. அதாவது, 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, (அடிப்படை விலை ஏறத்தாழ சமமாக இருந்தபொழுது) பெட்ரோலுக்கு 18.42 ரூபாயும், டீசலுக்கு 18.23 ரூபாயும் இன்னும் ஒன்றிய அரசு கூடுதலாக விதித்து வருகிறது.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்பொழுது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு ரூ.21.46 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்குரூ.17.51 ஆகவும் உள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்தக் கூடுதலான வரியை (பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 9 ரூபாய் – இதில், 3 ரூபாய் நாங்கள் ஆகஸ்ட் மாதத்தில் குறைத்தோம் மற்றும் டீசல் மீது ஒரு லிட்டருக்கு 7.25 ரூபாய்) கடந்த அதிமுக அரசு தான் செலுத்தியது.

    முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு ஏற்கெனவே பெட்ரோல் மீதான வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ.3 அளவிற்கு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு 14 ஆகஸ்ட் 2021 முதல் அமல்படுத்தப்பட்டது.

    ஒன்றிய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தது. இதை, மீண்டும் 2014-ல் இருந்த அளவிற்குக் குறைத்துக்கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்துவிடும். ஏனென்றால், இந்த வரி விதிப்பு அடிப்படை விலை மற்றும் ஒன்றிய அரசின் வரி விதிப்பின் மீது விதிக்கப்படும் வரியாகும். சில்லறை விற்பனை விலையின் விவரங்கள் – 01 ஆகஸ்ட் 2014 அன்று, நவம்பர் 2, 2021 அன்று (ஒன்றிய வரி குறைப்பிற்கு முன்) மற்றும் நவம்பர் 4, 2021 (வரி குறைப்பிற்கு பின்) பின்வருமாறு:-

    பெட்ரோல்

    டீசல்


    எனவே, ஒன்றிய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல, சாத்தியமும் அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு, 2014-ம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இதுவே, அனைவரும் பயனடையும் எளிமையான, நியாயமான ஒரே தீர்வாகும். இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்துவிடும் (பெரும்பாலான மாநிலங்கள் ‘Ad valorem’ வரி முறையைப் பின்பற்றுகின்றன).

    இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
    ×