search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கச்சா எண்ணெய் விலை சரிந்த பிறகும் குறையாத பெட்ரோல், டீசல் விலை- காரணம் தெரிவித்த மத்திய அரசு
    X

    கச்சா எண்ணெய் விலை சரிந்த பிறகும் குறையாத பெட்ரோல், டீசல் விலை- காரணம் தெரிவித்த மத்திய அரசு

    • சர்வதேச சந்தையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்களுக்கும் கீழ் குறைந்தது.
    • அதன் பின்னர் சற்று உயர்ந்து 92.84 டாலர்களாக விற்பனையானது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

    இந்நிலையில் சர்வதேச சந்தையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்களுக்கும் கீழ் குறைந்தது. அதன் பின்னர் சற்று உயர்ந்து 92.84 டாலர்களாக விற்பனையானது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச விலை நிறுவனங்களுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை கடந்த 158 நாட்களாக மாற்றம் செய்யாமல் உள்ளது.

    இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி கூறியதாவது:-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டாமா?.

    வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிலையில் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டபோது டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.20 முதல் 25 வரையும், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14 முதல் 18 வரையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதால் இழப்புகள் குறைந்து வருகின்றன என்றார்.

    இது ஒருபுறம் இருக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2015-2016 மற்றும் 2021-2022-ம் ஆண்டுக்கு இடையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலருக்கும் குறைவாக இருந்த போதும் கடந்த 2014-2015-ல் இருந்து 2021-2022-ம் ஆண்டு வரை பெட்ரோல் மீதான கலால் வரி 194 சதவீதமும், டீசல் மீதான வரி 512 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என கூறப்படுகிறது.

    Next Story
    ×