search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கவில்லை- மக்களவையில் சுட்டிக்காட்டிய மத்திய மந்திரி
    X

    பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி

    தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கவில்லை- மக்களவையில் சுட்டிக்காட்டிய மத்திய மந்திரி

    • இரண்டு முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
    • சமையல் எரிவாயு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.27276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன.

    சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நவம்பர் 2021 மற்றும் மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.

    எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வாட் வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வரியை குறைக்காததால் அங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மாநிலங்களில் வரியை குறைக்கச் சொல்லவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மந்திரியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    Next Story
    ×