search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் அவதி"

    • மதுரையில் அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • சாதாரண கட்டண ேபருந்தை அதிகளவில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மதுரை

    தென் மாவட்டங்களில் முக்கிய நகரமாக விளங்கும் மதுரைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் செல்ல போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.

    இதேபோல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இயக்கப்படும் பல டவுன் பஸ்களில் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 60 சதவீத பஸ்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அந்த பஸ்களிலும் பயணிகள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.

    ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.

    தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்களை ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது.

    மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிர், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

    • பேருந்துகளில் பெரும்பான்மையானவை பழுதடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • ஆவடியில் இருந்து ஆரணி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பழுது நீக்கி சீராக இயக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இருந்து ஆரணி வரையில் தடம் எண்: 580 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பேருந்துகளில் பெரும்பான்மையானவை பழுதடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி சென்ற தடம் எண்: 580 பேருந்து ஒன்று வெங்கல் அருகே வந்தபோது இடது புற முன் பக்க டயர் பஞ்சர் ஆகி நடு ரோட்டில் நின்று விட்டது. இதனால் இந்த பேருந்தில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், இவர்கள் காத்திருந்து மற்றொரு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பழுது நீக்கி சீராக இயக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் உடனடியாக புளியமங்கலத்திற்கு விரைந்து வந்தனர்.
    • ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே ஊழியர்கள் கோபால், மரியம்தாஸ் இன்று காலை தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது புளியமங்கலம் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டிருந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கிருந்து தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் உடனடியாக புளியமங்கலத்திற்கு விரைந்து வந்தனர்.

    அந்த நேரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக அந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வேலூர் கண்ட்டோன்மென்ட் மின்சார ரெயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    புளியமங்கலம் பகுதியில் தண்டவாள விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு செய்ததால் மறுபுறமும் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த நேரத்தில் சென்னையில் இருந்து சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ், திருத்தணி மின்சார ரெயில்கள் ஆகியவை நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஜோலார்பேட்டையில் இருந்து செல்லக்கூடிய ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மின்சார ரெயில்களில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் சென்னைக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். சுமார் 10 ஆயிரம் பயணிகள் வரை ரெயில் தாமதத்தால் அவதியடைந்துள்ளனர்.

    சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும்பனி மூட்டம் நிலவுகிறது.

    அதன் காரணமாக அதிகாலை நேரத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

    • பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
    • துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பழைய பேருந்து நிலைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கழிவறையை இடித்த போதும், செப்டிக் டே ங்க் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பஸ் ஏற வரும் பொது மக்களுக்கும் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

    குறிப்பாக, துர்நா ற்றத்தால் வயதானவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறது, இங்கு பஸ் ஏற ஏராளமான பள்ளி மாணவர்கள் வருவதால், அவர்கள் தவறி செப்டிக் தொட்டியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். செப்டிக் டேங்க்கை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மந்தமாக நடந்து வரும் பஸ் நிலைய கட்டுமான பணியினை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக கழிவறை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மத்திய ரெயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    • கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது எப்போதுமே அரிதிலும் அரிதாக உள்ளது.

    திருப்பூர் : 

    கோவைக்கும் மும்பைக்குமான வர்த்தக தொடர்புகள் அதிகம். அதனால் தான் கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது எப்போதுமே அரிதிலும் அரிதாக உள்ளது. இந்த ரெயில் முன்பு மும்பையின் குர்லாவிலிருந்து பெங்களூரு வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

    கொங்கன்க்ஷக்ஷயில்வே அமைத்த பின் கோவை வழியிலான ரெயில்கள் திருப்பப்பட்டன. அதை ஈடுகட்டும் வகையில் 1998ல் அப்போதைய கோவை எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் முயற்சியால்இந்த ரெயில் கோவை வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த ரெயிலில் முன்பு 11 பெட்டிகள் சாதாரண ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளாக இருந்தன. இதனால் நடுத்தட்டு மக்கள், வர்த்தகர்கள் பலரும் இந்த ரெயிலில் தொடர்ந்து பயணித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 26ந்தேதியில் இருந்து இந்த ரெயிலில் அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி., எனப்படும் அதி நவீன வசதிகளுடைய பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும் இதில் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேலே குறைக்கப்பட்டுள்ளது.

    முன்பு 11 பெட்டிகளில் 720 ஸ்லீப்பர் இருக்கைகள் இருந்தன. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.எச்.பி., பெட்டிகளில் நான்கு பெட்டிகள் மட்டுமே ஸ்லீப்பர் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 80 இருக்கைகள் என்பதால் 320 ஸ்லீப்பர் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வகுப்பினரை பாதிப்பதாக உள்ளது.

    இதேபோல வேறு சில  ரெயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உதாரணமாக தூத்துக்குடி - மைசூரு -மயிலாடுதுறை ரெயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும் ஸ்லீப்பர் பெட்டிகள் அதே எண்ணிக்கையில் தான் உள்ளது. அந்த ரெயில் தென்மேற்கு ரெயில்வேயால் இயக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், மத்திய  ரெயில்வேயால் இயக்கப்படுகிறது. எனவே, தூத்துக்குடி-மைசூரு-மயிலாடுதுறை ரெயிலில் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்தது போல குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், தொலைதூர ரெயில் என்பதால் ஏ.சி.,பெட்டிகளை அதிகம் சேர்த்திருப்பதாக ரெயில்வே அதிகாரிகளால் விளக்கம் தரப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது. இதை மத்திய ரெயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    • புதிய பஸ் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 2000-ல் திறக்கப்பட்டது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட அன்னூர் புதிய பஸ் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 2000-ல் திறக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையத்தில் இருந்து கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், மற்றும் அவினாசி போன்ற முக்கிய பகுதிகள் மற்றும் அன்னூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் என 500க்கும் அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன.

    இந்த பஸ் நிலையத்தில் வேலைக்கு செல்வோர் மற்றும் பஸ் நிலையம் வருவோர், மக்கள் நடக்கும் நடைபாதையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர்.

    மேலும் மழைக்காலத்தில் பயணிகள் உள்ளே அமர்வதிலும் மற்றும் நிற்பதிலும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மழைக்காலம் என்பதினால் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இங்கு வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதி இல்லை என்ற வாசகத்தை எழுதி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர்.
    • பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    கடலூர்:

    கடலூரிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர். இவ்வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பல்வேறு பஸ்கள் தினசரி செல்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் மந்தாரக்குப்பத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், முதியவர்கள் மழை, வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் மழை க்காலத்தை சமாளிக்க ஏதுவாக பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • அலங்காநல்லூரில் பாலம் கட்டும் பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்து.
    • இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர், பஸ் நிலையத்திலிருந்து கேட்டுக்கடை செல்லும் சாலையில் முனியாண்டி கோவில் முன்பு மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அலங்காநல்லூர் பகுதியில் மழைக்காலங்க ளில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தற்போது மழை நீர் தேங்காமல் செல்வதற்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு பஸ்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறைக்கப்பட்டது.

    பஸ் நிலையத்தை தாண்டி செல்லும் ஓரிரு அரசு பஸ்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. மேலும் பால வேலைகள் நடைபெறுவதால் அவ்வப்போது அந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கிராமப்புற பகுதியிலிருந்து வரும் அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் கேட்டுக்கடை வழியாக மதுரை செல்வதால் பயணிகள் கேட்டுக்கடையில் இருந்து அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு நடந்தே செல்கின்றனர்.

    அரசு மருத்துவமனை இந்த வழித்தடத்தில் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    பால வேலையும் தாமதமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • பஸ்கள் கிடைக்காததால் மதுரை பஸ் நிலையத்தில் பயணிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
    • மாணவ, மாணவிகளும் காத்திருந்ததால் சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    பெரியார் பஸ் நிலையத்தில் இன்று காலை போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகளும் தவித்தனர்.

    மதுரை இதய பகுதியான பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்து பிற இடங்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பெரியார் பஸ் நிலையப் பகுதி எப்போதுமே பயணிகள் கூட்டத்தால் அலை மோதும்.

    இந்த நிலையில் இன்று காலை "பீக் அவர்" என்று சொல்லப்படும் காலை 8 மணி முதல் 9 மணி வரை பஸ் நிலையத்துக்குள் ஒரு சில பஸ்கள் மட்டுமே காணப்பட்டன.

    முக்கியமாக அழகர் கோவில், நாகமலை புதுக்கோட்டை, விளாங்குடி, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் வராததால் பயணிகள் அலைமோதினர். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பஸ்கள் வராததால் தவித்தனர்.

    சிலர் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்றனர். நீண்ட நேரம் பஸ்கள் வராதால் பெரியார் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கடும் ஆதங்கத்துடன் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர்.இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் வழக்கமான அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், பஸ்கள் இயக்கப்பட்டதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தனர்.

    ஆனாலும் பெரியார் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 9 மணி வரை குறைந்த அளவு பஸ்களே வந்ததால் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    • சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு அரசு விரைவு குளிர்சாதன பஸ் 60 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.
    • மதுரைக்குச் சென்ற குழந்தையுடன் பெண் உட்பட பயணிகள் நடு–ரோட்டில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு அரசு விரைவு குளிர்சாதன பஸ் 60 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதி யில் சுமார் 12 மணி அள வில் திடீரென ஏசி பழுதானதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற குழந்தையுடன் பெண் உட்பட பயணிகள் நடுரோட்டில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நின்றனர். திண்டிவனத்தில் உள்ள பணி மனையில் இருந்து பஸ்சை பழுது நீக்கி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு சென்றது. 

    • நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாணவ-மாணவிகள், பூ வியாபாரிகள் ,வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் அரசு டவுன்பஸ்சில் சென்று வருகின்றனர்.
    • பஸ் சேவை குறைப்பால் தற்போது ஒரு மணிநேரத்திற்கு மேலாக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து திண்டுக்கல்லுக்கு மாணவ-மாணவிகள், பூ வியாபாரிகள் ,வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் அரசு டவுன்பஸ்சில் சென்று வருகின்றனர்.

    தமிழக அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்தது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடைந்தனர். ஆனால் தற்போது பஸ்சேவை குறைக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இங்கு அரைமணிநேரத்திற்கு ஒரு பஸ் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வந்தனர்.

    ஆனால் தற்போது ஒரு மணிநேரத்திற்கு மேலாக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் நீண்டநேரமாக காத்திருக்கும் பெண் பயணிகள் தனியார் பஸ்சில் கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

    தமிழக அரசு பெண்களுக்கு டவுன்பஸ்சில் சிறப்பு சலுகை வழங்கியது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பூ வியாபாரிகள் பயனடைந்தனர். ஆனால் தற்போது பஸ்சேவை குறைக்கப்பட்டுள்ளது. அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வேண்டுமென்றே சேவையை குறைக்கின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கு தீர்வு காணாவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானம் 45 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி மீண்டும் புறப்படுவதற்கு தயாராகியது.
    • விமானத்தின் கதவு மூடப்பட முடியாத காரணத்தினால் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளில் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புது டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர விமான சேவையாக பெங்களூரில் இருந்து இண்டிகோ விமானம் இரவு 10.05 மணிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று இரவு பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானம் 45 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி மீண்டும் புறப்படுவதற்கு தயாராகியது.

    அந்த நிலையில் விமானம் புறப்படுவதற்காக பயணிகள் ஏறுவதற்காக பயன்படுத்தப்பட்ட முன்பக்க கதவுகளை மூடுவதற்காக விமானி முற்பட்டபோது விமான கதவுகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த கதவானது மூட முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் இந்த விமானத்தில் உயர் அதிகாரிகள் பயணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கதவு மூடப்பட முடியாத காரணத்தினால் உடனடியாக இண்டிகோ விமானத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து அதனை சீர் செய்யும் பணியில் விமான நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி நள்ளிரவு ஒரு மணி அளவில் தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டு கதவு மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு1.10 மணிக்கு பெங்களூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

    இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    ×