search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் பறிமுதல்"

    • மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் கடத்தல் கும்பல் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் ஊழியர்கள் சிலரது உதவியுடன் தங்கத்தை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு செல்வது தெரிந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் இருந்து சென்னை விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது விமான நிலையத்தில் ஓப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வரும் பல்லாவரம், குரோம்பேட்டையை சேர்ந்த சினேகா, சங்கீதா ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பணிமுடிந்து வீட்டுக்கு சென்ற பெண் ஊழியர்களை பின் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் பெண் ஊழியர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சினேகா, சங்கீதா ஆகியோரது வீடுகளில் கழிவறை மற்றும், பீரோக்களில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர். மொத்தம் 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

    விசாரணையில் அவர்கள், விமானங்களில் தங்கம் கடத்தி வரும் கும்பலிடம் தங்கத்தை ரகசியமாக வாங்கி, தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, சுங்க அதிகாரிகளின் சோதனை இல்லாமல், வீடுகளுக்கு கொண்டு வந்து உள்ளனர். பின்னர் கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகள் பெண் ஊழியர்களின் வீட்டுக்கு வந்து கடத்தல் தங்கத்தை வாங்கிச் செல்வது விசாரணையில் தெரியவந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின் படி நேற்று அதிகாலை மண்ணடியில் தங்கம் கடத்தலில் குருவியாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹர்ஷத் என்பவர் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்திய போது 1½ கிலோ தங்கம், ரூ. 45 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் என்வரது வீட்டில் தங்கியிருந்தது தெரிந்தது. மேலும் கலையரசன் தங்கம் கடத்தும் ஆசாமிகளை பெண் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரையும் மத்திய வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை மண்ணடியில் உள்ள அஷ்ரப்பின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • அஷ்ரப்பை அதிகாரிகள் விசாரணைக்காக மத்திய வருவாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    ராயபுரம்:

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து உள்ளது. இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் குருவிகளாக சென்று வருபவர்கள் என்பதால் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சிக்குவதில்லை.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த மண்ணடி மரக்காயர் தெருவை சேர்ந்த அஷ்ரப் (வயது 30) என்பவர் உள்பட சிலர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள் குருவியாக சென்று தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை மண்ணடியில் உள்ள அஷ்ரப்பின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் 1 ½ கிலோ தங்கம், ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அஷ்ரப்பை அதிகாரிகள் விசாரணைக்காக மத்திய வருவாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் தங்கம் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கே.கே.நகர்:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த சுங்கத்துறை டிரைவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தங்கம் கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புருனே நாட்டில் பணியாற்றி வந்த மீமிசல் பகுதியைச் சேர்ந்த முஸ்தமி (வயது22), அதே பகுதியைச் அசாருதீன்( 24) ஆகிய 2 பேர் மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்தனர்.

    அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தார்கள்.

    அப்போது முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் தனது உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.84.02 லட்சம் ஆகும்.

    • கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் வரி ஏய்ப்புக்காக தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் சுங்கா இலாகாவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (வயது 42) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சல்லடை போட்டு சோதித்தனர். இதில் கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 930 மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது.
    • வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக கிலோ கணக்கில் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் தங்கம் கடத்தல் குறையவில்லை. மேலும் தங்கம் கடத்தலுக்கு சென்னை விமான நிலையம் முக்கிய இடமாக மாறி வந்தது.

    இந்த நிலையில் தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கு துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிலர் உதவி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வரும் சீனிவாசன் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரிடம் சோதனை நடத்தினர். அவர், தனது உள்ளாடைக்குள் ஒரு கிலோ தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 3.70 கிலோ தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் கடத்தல் கும்பலிடம் சென்னை விமான நிலையத்துக்குள் சீனிவாசன் தங்க கட்டிகளை வாங்கி அதனை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொடுத்து உதவி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும்.

    மேலும் இந்த தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைதான சீனிவாசன், தினகரன் எந்தெந்த தங்கம் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தனர், அவர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்து சென்றவர்கள் யார்? அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேறு எந்த ஊழியர்களும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையின் பின்பகுதியில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

    விசாரணையில் அந்த பெண் பயணி பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 909.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 55.07 லட்சம் ஆகும்.

    • மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்கப் பசையுடன் ஒருவரை கைது செய்தனர்.
    • 3 வயது குழந்தை டயப்பரிலும் மறைத்து வைத்திருந்தனர்.

    சிங்கப்பூரில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த இந்திய குடும்பத்தினரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க துகள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மும்பை சுங்கத்துறை அதிகாரி கூறுகையில், " சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்த தம்பதி மற்றும் அவர்களது குழந்தையின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 1,05,27,331 மதிப்புள்ள தங்க துகள் பேக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து பயணித்த இந்தியக் குடும்பத்திடமிருந்து 2 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத் தூளைக் கைப்பற்றினர். தங்கத்தை இரு பயணிகளும் தங்கள் உள்ளாடைகளிலும், அவர்களது 3 வயது குழந்தை டயப்பரிலும் மறைத்து வைத்திருந்தனர்" என்றார்.

    முன்னதாக, கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கஸ்டம்ஸ் புலனாய்வுப் பிரிவினர், மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்கப் பசையுடன் ஒருவரை கைது செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.
    • விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் துபாயிலிருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    இந்த விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.

    பின்னர் அந்த பொருட்களை திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள வந்த போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களது உடமைகளின் மீது துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக முற்பட்ட போது அந்த இரு நபர்களில் ஒருவர் முனைய வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார்.

    அதிர்ச்சியடைந்த சுங்கத்திரை அதிகாரிகள் அவரை 2 கி.மீ. தூரம் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்து மீண்டும் விசாரணைக்காக அழைத்து வந்தனர் .

    விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து சுமார் 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ. 55 லட்சத்து 22 ஆயிரம் என தெரிய வருகிறது.

    • சிலர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 5 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சிலர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.2.56 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்று தங்கத்தை கொண்டு வந்திருந்தனர். இது தொடர்பாக 5 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    திருமலை:

    சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக தங்கம் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் நேற்று இரவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த கார் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.79 கிலோ வெளிநாட்டு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கடத்திச் செல்ல வேறொரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த 2.471 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டி.ஆர்.ஐ. அதிகாரிகள், தங்கம் கடத்திய 2 பேர் மற்றும் அதனை வாங்க வந்த ஒருவர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர்.

    சென்னையில் கடத்தல் தங்கம் எப்படி கிடைத்தது என விசாரித்து வருகின்றனர்.

    • சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
    • கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது.

    இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர்.

    அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி போலியான அடையாள அட்டைகளை காண்பித்தனர்.

    இதனை நம்பி கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் அவர்களை சோதனை நடத்த அனுமதித்தனர். அவர்கள் கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை சரிபார்த்தனர்.

    அப்போது சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.

    அவர்கள் சென்ற பிறகுதான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்த திருட்டு கும்பல் என தெரியவந்தது.

    இது குறித்து கடையின் உரிமையாளர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கும்பல் வந்த கார் பதிவு எண் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் அவர்கள் ரகுமான் கபூர் அதர், ஜாகிர் கனி அதர், பிரவீன் யாதவ் மற்றும் ஆகாஷ் அருண் ஹோவில் என தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 தங்க பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டன.

    மேலும் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளுக்கு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

    அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.
    • 4 பெண்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த விமலா ராணி (வயது 30), ஜுவானி (28) உள்பட 3 பெண்களும், தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் என 4 பெண்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

    அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 4 பேரிடம் இருந்து ரூ.61 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 4 பெண்களை கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×