search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவிய 2 ஊழியர்கள் கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவிய 2 ஊழியர்கள் கைது

    • தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது.
    • வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக கிலோ கணக்கில் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் தங்கம் கடத்தல் குறையவில்லை. மேலும் தங்கம் கடத்தலுக்கு சென்னை விமான நிலையம் முக்கிய இடமாக மாறி வந்தது.

    இந்த நிலையில் தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கு துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிலர் உதவி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வரும் சீனிவாசன் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரிடம் சோதனை நடத்தினர். அவர், தனது உள்ளாடைக்குள் ஒரு கிலோ தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 3.70 கிலோ தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் கடத்தல் கும்பலிடம் சென்னை விமான நிலையத்துக்குள் சீனிவாசன் தங்க கட்டிகளை வாங்கி அதனை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொடுத்து உதவி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும்.

    மேலும் இந்த தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைதான சீனிவாசன், தினகரன் எந்தெந்த தங்கம் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தனர், அவர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்து சென்றவர்கள் யார்? அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேறு எந்த ஊழியர்களும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×