search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் கடத்தல்"

    • இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா, புகையிலை பொருட்கள், கடல் அட்டை போன்றவை கடத்தலின்போது அதிக அளவில் சிக்கி உள்ளன. ஆனால் அண்மை காரணமாக தங்க கட்டிகளை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு தங்க கட்டிகளை கடத்தி வருபவர்கள் கடலில் அதிகாரிகள் ரோந்துவரும்போது பார்சலை அவர்களுக்கு தெரியாமல் கடலில் வீசி விடுகிறார்கள். கடத்தல்காரர்கள் வீசும் பார்சலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது.

    எனவே தைரியமாக கடலில் அதனை வீசும் கடத்தல்காரர்கள், அதிகாரிகள் சென்ற பின் ஆழ்கடலில் குதித்து ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் எடுத்து செல்கிறார்கள். ஆனால் இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 4 மாதங்களில் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி கடத்தல்காரர்கள் 100 கிலோவுக்கும் மேல் தங்க கட்டிகளை கடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர்.
    • நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பின் இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டில் இருந்து கடத்தல்காரர்கள் அதிகளவில் தங்க கட்டிகளை ராமநாதபுரத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை மன்னார் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இந்திய கடலோர காவல்படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட கடல் வழித்தடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது படகில் வந்த கடத்தல்காரர்கள் மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் அதிகாரிகளை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக படகில் இருந்த வேதாளையை சேர்ந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி ஏற்கனவே கடத்தி வேதாளையை சேர்ந்த ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நிபுணத்துவம் பெற்ற நீச்சல் பயிற்சி பெற்ற, வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் வீசப்பட்ட கடலில் இறங்கி தேடும் பணி நடந்தது.

    நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர். ஆனால் 2 நாட்களாக எதுவும் சிக்கவில்லை. இரவு நேரங்களில் வேறு யாரேனும் அந்தப் பகுதிகளில் இறங்கி தங்க கட்டிகளை எடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்க கட்டிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் தற்போது கடல் காற்று அதிகமாக வீசி வருவதால் சில மணி நேரம் பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அதிகாரிகளின் தகுந்த ஆலோசனையோடு வீரர்கள் தொடர்ந்து தங்க கட்டிகளை தேடி வந்தனர். இவர்களோடு நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் இன்று மதியம் ஆழ்கடலில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சலை கடலோர காவல்படை வீரர்கள் கண்டெடுத்து மீட்டனர். மேலே கொண்டு வரப்பட்ட பார்சல் மண்டபம் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பார்சல் கட்டி உடைக்கப்பட்டது. அப்போது அதில் 10 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். தங்கத்தை மீட்ட அதிகாரிகள் அதனை கடத்தி வந்த கும்பல் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
    • கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது.

    இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர்.

    அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி போலியான அடையாள அட்டைகளை காண்பித்தனர்.

    இதனை நம்பி கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் அவர்களை சோதனை நடத்த அனுமதித்தனர். அவர்கள் கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை சரிபார்த்தனர்.

    அப்போது சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.

    அவர்கள் சென்ற பிறகுதான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்த திருட்டு கும்பல் என தெரியவந்தது.

    இது குறித்து கடையின் உரிமையாளர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கும்பல் வந்த கார் பதிவு எண் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் அவர்கள் ரகுமான் கபூர் அதர், ஜாகிர் கனி அதர், பிரவீன் யாதவ் மற்றும் ஆகாஷ் அருண் ஹோவில் என தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 தங்க பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டன.

    மேலும் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளுக்கு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

    அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்று இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று நவீன ஸ்கேனிங் கருவி மீலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்காக விமான நிலைய பகுதியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விரட்டி சென்று பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு ரோந்து படகில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.

    அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளனர்.

    இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.

    அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது இலங்கை பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது. அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக நேற்று 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கடத்தல்காரர்கள் படகில் இருந்து கடலில் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும். அங்கு கடலில் தங்கம் வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் மீனவர்களை வைத்து தங்கத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதியை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கொச்சி விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த தம்பதி முகமது சுபைர் மற்றும் முகமது ஜனுபர் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்களின் உடலில் கேப்ஸ்யூல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சுமார் 1202.55 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதி முகமது சுபைர், முகமது ஜனுபர் இருவரையும் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது.
    • தங்கத்தை கடத்தி வந்ததாக நிஷாத் என்பவரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 570 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக நிஷாத் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    • விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர்.
    • விமானத்தில் வந்த மற்றொரு பயணி பசை வடிவில் மறைத்து கடத்தி வந்த 1,083 கிராம் எடையுள்ள தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வளைகுடா நாடான சார்ஜாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.

    அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர். அப்போது ஒரு பயணி தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்துவந்த 865 கிராம் எடையுள்ள தங்கச் செயின் மற்றும் சிறிய அளவிலான தங்க கட்டியினை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணி பசை வடிவில் மறைத்து கடத்தி வந்த 1,083 கிராம் எடையுள்ள தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த இரண்டு பயணிகளிடமிருந்து 1 கிலோ 948 கிராம் எடையுள்ள ரூ.ஒரு கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 880 மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணியிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்தது.
    • அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு பார்சலில் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்தது. இதனை கண்காணிக்க சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமான பார்சல்களும் அதிகாரிகளால் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்பே அந்தந்த நபர்களுக்கு வழங்கபபடுகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு பார்சலில் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. சமையல் அறை பாத்திரங்களுடன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக பெண் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
    • சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ஐதராபாத்:

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தங்கம் விலை உயர்ந்த போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.

    கடத்தல் பொருட்களை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்து வருகின்றனர்.

    சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சிலர் போதை பொருட்களை டியூப் மாத்திரை வடிவில் விழுங்கியும், ஒரு சிலர் தங்கங்களை வாட்ச், தலைமுடி, ஷூ உள்ளிட்டவைகளில் வைத்தும் கடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து பயணி ஒருவர் விமானத்தின் மூலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கொண்டு வந்த சூட்கேசில் இருந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சூட்கேஸில் எந்தவிதமான கடத்தல் பொருட்களும் இல்லை. சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சூட்கேசின் கைப்பிடி மற்றும் ஸ்க்ரூக்கள் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணியிடம் 1.8 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
    • கடந்த 24 மணி நேரத்தில் இருவரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    அரபு நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதனால் கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் முழுமையாக பரிசோதித்த பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த வகையில் நேற்று அரபு நாட்டில் இருந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அந்த பயணியை முழுமையாக பரிசோதித்தனர்.

    இதில் அந்த பயணியிடம் 1.8 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனை அவர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்தார். இதன் மதிப்பு ரூ.1.6 கோடியாகும். இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது பெயர் முகமது அஷ்ரப். மலப்புரத்தை சேர்ந்தவர்.

    இதுபோல நேற்று முன்தினம் இன்னொரு பயணி உடலுக்குள் கேப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தார். அவரது பெயர் முகமது நசீப். அவரிடம் இருந்து 1.15 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் இருவரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொ டர்பாக 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனர்.
    • தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனர். அப்போது ஒருவர் அவரது உள்ளாடைக்குள் 856 கிராம் தங்கச் செயினை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதேபோல் மற்றொரு பயணி தான் கொண்டுவந்த டி-சர்ட்டின் காலரில் 330 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து மொத்தம் சுமார் 1.08 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×