search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட் போட்டி"

    • சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் நாட்டின் பிரதமர் படத்தை போடாததில் இருந்தே தி.மு.க.வின் மனநிலை தெரிந்துவிட்டது.
    • பண்பாடு, நாகரீகம், மரியாதை கொடுக்க தெரியாத தி.மு.க. அரசால் தமிழ்நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கும் நிலையில் அரசு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-

    சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டுக்கு பெருமை. ஆனால் இந்த பெருமை கிடைக்க உதவியது மத்திய அரசு. மத்திய அரசு அனுமதித்து இருக்காவிட்டால் போட்டி இங்கு நடந்திருக்குமா?

    சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் நாட்டின் பிரதமர் படத்தை போடாததில் இருந்தே தி.மு.க.வின் மனநிலை தெரிந்துவிட்டது.

    மோடி பா.ஜனதாவுக்கு மட்டுமல்ல. தி.மு.க. உள்பட இந்த நாட்டுக்கே பிரதமர். நாங்கள் போட செல்வது பா.ஜனதா தலைவர் படத்தை அல்ல. நாட்டின் பிரதமர் படத்தை. பிரதமருக்கு மரியாதை கொடுக்க தெரியாத அரசாக இந்த அரசு உள்ளது. பண்பாடு, நாகரீகம், மரியாதை கொடுக்க தெரியாத தி.மு.க. அரசால் தமிழ்நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை.

    அவருக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் பகிரங்கமாக வெளிக்காட்டினார். தி.மு.க அரசு மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
    • விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டியிருக்கின்றனர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டியிருக்கின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு வர்ணத்தை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலக அரங்கில் நமது இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரமாண்டமான செஸ் போட்டி நம் நாட்டில் குறிப்பாக நம் தமிழ் மண்ணில் நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டில், பல்லவ மன்னன் கலைச் சிற்பங்கள் இருக்கின்ற மாமல்லபுரத்தில் உலகமே கூடிவந்து சதுரங்கம் ஆடுவது, தமிழ் மண்ணுக்குப் பெருமை தருவதாகும்.

    சென்னை:

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று தொடங்குவதையொட்டி தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    உலக அரங்கில் நமது இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரமாண்டமான செஸ் போட்டி நம் நாட்டில் குறிப்பாக நம் தமிழ் மண்ணில் நடைபெறுகிறது.

    எப்போதுமே விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட இருக்கும் செஸ் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள்.

    நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செஸ் நான் மிகவும் விரும்பும் உள் அரங்க விளையாட்டு. செஸ் வீரர்கள் சிறப்பாக ஆட வாழ்த்துகிறேன். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

    தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-

    தமிழ்நாட்டில், பல்லவ மன்னன் கலைச் சிற்பங்கள் இருக்கின்ற மாமல்லபுரத்தில் உலகமே கூடிவந்து சதுரங்கம் ஆடுவது, தமிழ் மண்ணுக்குப் பெருமை தருவதாகும். இந்த உலக வரலாற்று நிகழ்வுதனைத் துவக்கி வைக்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியையும், இப்பெருவிழாவை மிகப் பிரமாண்டமாக நடத்து கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
    • செஸ்சுடன் பெருமைமிக்க தொடர்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவது நமக்கு பெருமையாகும்.

    புதுடெல்லி:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பிரமாண்ட தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதற்காக குஜராத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை வருகிறார்.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இந்தியாவிலேயே அதுவும் செஸ்சுடன் பெருமைமிக்க தொடர்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவது நமக்கு பெருமையாகும்.

    இவ்வாறு மோடி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் அமைந்துள்ள மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் 44-வது சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி 14 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த போட்டிகளில் பங்கேற்க 180 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

    இதையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான தொடக்க விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக இன்று பிற்பகல் 2.20 மணி அளவில் குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் மோடி மாலை 4.45 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர்.

    பின்னர் விமான நிலையத்தில் பிரதமர் மோடி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் மோடி மாலை 5.45 மணி அளவில் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை வளாகத்தை வந்தடைகிறார்.

    அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு செல்கிறார். சுமார் 5 கி.மீ. தூரம் காரில் பயணித்து மாலை 6 மணி அளவில் நேரு ஸ்டேடியத்தை அவர் சென்றடைகிறார். வழி நெடுக பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சாலையோரமாக திரண்டு நின்று மோடியை வரவேற்கிறார்கள். இதையொட்டி பிரதமர் செல்லும் வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி நேரு ஸ்டேடியத்தை சென்றடைந்ததும் அங்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். தொடக்க விழா முடிவடைந்ததும் பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இன்று இரவு அங்கு தங்கும் அவர் நாளை காலை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் நாளை மதியம் 12 மணி அளவில் அவர் புறப்பட்டு குஜராத் செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் காரில் புறப்பட்டு நேரு ஸ்டேடியத்துக்கு செல்லும் பாதைகளில் அவரை வரவேற்று பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் உள்ளிட்டவைகளுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் சாலை பயணத்தின் போது ஆர்வம் மிகுதியில் தொண்டர்கள் பிரதமரின் கார் மீது மாலை உள்ளிட்ட பொருட்களை எடுத்து வீசக்கூடாது என்றும் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    பிரதமர் காரில் பயணம் செய்யும் நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பல்லவன் இல்லம், சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்புறம் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாநகராட்சி சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    டிரோன்கள், பலூன்கள் ஆகியவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பிரதமர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வான்வெளி பாதையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் மத்திய போலீஸ் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் அமைந்துள்ள மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விழிப்புடன் பணியாற்ற போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • இந்தியாவின் 'செஸ் ராஜா', முதல் கிராண்ட்மாஸ்டர், முதல் மற்றும் ஒரே உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் ஊர் சென்னை.
    • இந்தியாவின் மற்றொரு இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷும், பிரக்ஞானந்தாவும் சென்னையின் ஒரே பள்ளியின் மாணவர்கள்.

    உலக செஸ் திருவிழா, மாமல்லையில் இன்று தொடங்குகிறது. சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் முதல் முறையாக 'செஸ் ஒலிம்பியாட்' நடைபெறுவது சிறப்பு. அதிலும் இந்தியாவின் செஸ் தலைநகரமான தமிழகத்தில் உலக செஸ் ஜாம்பவான்களின் மோதல் அரங்கேறுவது ஏகப் பொருத்தம்.

    செஸ் தலைநகரம் தமிழகம் என்பது ஒருவேளை உங்களுக்கு மிகைப்படுத்தலாக தோன்றலாம். ஆனால் அதன் அர்த்தம், கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்தாலே புரியும்...

    இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர், மனுவேல் ஆரோன் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்.

    நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி, சென்னையின் புதல்வி.

    இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் நடுவர் வெங்கடாச்சலம் காமேஸ்வரன், சென்னையின் மதிப்புமிக்க மூத்த குடிமகன்.

    இந்தியாவின் இன்றைய இரு இளம் கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, சென்னை செல்லங்கள்.

    நாட்டில் தற்போதுள்ள கிராண்ட்மாஸ்டர்கள் 74 பேரில் 26 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் 'செஸ் ராஜா', முதல் கிராண்ட்மாஸ்டர், முதல் மற்றும் ஒரே உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் ஊர் சென்னை.

    1972-ம் ஆண்டு சென்னையில் ரஷிய கலாசார மையத்தால் நிறுவப்பட்ட டால் செஸ் கிளப்பில் பயிற்சி பெறத் தொடங்கிய ஒரு சிறுவன்தான், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செஸ் புரட்சிக்கு வித்திட்டவர்.

    அவர்... நீங்கள் நினைப்பது சரி, 'விஷி' எனப்படும் விஸ்வநாதன் ஆனந்தேதான்.

    செஸ் விளையாடத் தொடங்கிய சிறிது காலத்திலேயே இந்த 'மின்னல் குழந்தை' தனது வேகத்தாலும், வியூகத்தாலும் எதிராளிகளை விய(ர்)க்கவைத்தது.

    புத்தாயிரம் ஆண்டில், புதிய உலக சாம்பியனாக, ரஷியர்கள் ஆதிக்கம் செலுத்திய செஸ் அரங்கில் புயலாய் பிரவேசித்தார் ஆனந்த்.

    2000-ல் ஆனந்த் முதல் முறையாக உலக சாம்பியன் மகுடம் சூடிவந்தபோது அவரை விமான நிலையத்தில் இருந்து வீடு வரை சாரட் வண்டியில் அழைத்துச்சென்று சிலாகித்துக்கொண்டாடியது சென்னை.

    ஆனந்தை பார்த்து உத்வேகம் பெற்ற பலரும் செஸ் பலகை முன் அமர, சரமாரியாய் இங்கிருந்து கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகத் தொடங்கினார்கள். சென்னையை 'கிராண்ட்மாஸ்டர் தொழிற்சாலை' என்றே வர்ணிக்கத் தொடங்கினார்கள் செஸ் வல்லுநர்கள்.

    அதிலும் சமீப ஆண்டுகளில் இளம் வீரர்கள் சென்னையின் செஸ் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். அவர்களில் 'பளிச்'சென்று ஞாபகத்துக்கு வருபவர், பிரக்ஞானந்தா.

    செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (10) சர்வதேச மாஸ்டர் ஆனவர், 'பிராக்' (பிரக்ஞானந்தாவின் சுருக்க செல்லப் பெயர்). பக்கத்து வீட்டு பையன் போல தோற்றம் காட்டும் பிரக்ஞானந்தா, தற்போது உலகின் 5-வது இளம் கிராண்ட்மாஸ்டர்.

    இந்த ஆண்டில், நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனை இருமுறை மண்டியிட வைத்து மலைப்பூட்டினார் பிரக்ஞானந்தா. இவர் தனது குருவாக கருதும் ஆனந்தை அவரது சொந்த ஊரான சென்னையில் சாய்த்த கார்ல்செனுக்கு எதிரான இனிய பழிவாங்கலாகவும் அது அமைந்தது.

    கார்ல்செனை பிரக்ஞானந்தா முதல்முறை வென்றபோது, 'பிராக்... 16 வயதில் எவ்வளவு பெரிய வீரரை நீங்கள் வீழ்த்தியிருக்கிறீர்கள்! ஒட்டுமொத்த இந்தியாவையே நீங்கள் பெருமையடையச் செய்துவிட்டீர்கள்' என்று சிலிர்த்துப்போய் பாராட்டினார் கிரிக்கெட் கிங் சச்சின்.

    இந்தியாவின் மற்றொரு இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷும், பிரக்ஞானந்தாவும் சென்னையின் ஒரே பள்ளியின் மாணவர்கள். பிறவி செஸ் மேதை குகேஷ், இவ்விளையாட்டு வரலாற்றில் 2-வது இளம் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்.

    கடந்த 2019-ம் ஆண்டில் அந்த பெருமையை தனதாக்கினார் இவர். அப்போது உலகிலேயே இளம் கிராண்ட்மாஸ்டராக திகழ்ந்த உக்ரைனின் செர்ஜி கர்ஜாகினின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பை வெறும் 17 நாட்களில் தவறவிட்டார் குகேஷ்.

    தமிழத்திலும், தாயகத்திலும் சதுரங்க விருட்சம் கிளைவிட விதையாய் விழுந்த ஆனந்த், தனக்கு முன்பே செஸ் கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்று கூறுகிறார்.

    இன்றும் தமிழகத்தின் சிறுநகரங்களிலும், பெருநகரங்களிலும் மூலை முடுக்குகளில் எல்லாம் செஸ் பயிற்சி நிலைய பலகைகள் தென்படுவதையும், அங்கு கருப்பு-வெள்ளை கட்ட பலகைகளின் முன்னே இளஞ்சிறார், சிறுமியர் மோனத் தவம் இருப்பதையும் காணலாம். சர்வதேச அனுபவம் பெற்ற செஸ் கில்லிகள் பலரும் அடுத்தடுத்த வீரர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

    இந்த விளையாட்டில் பெற்றோர் காட்டும் ஆர்வத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    சென்னையின் இளம் சர்வதேச செஸ் சிங்கங்கள் பலவும் சைவப்பட்சிகள். அதனால் அவர்களின் தாய்மார்கள் ரைஸ் குக்கரும் கையுமாய் உலகெங்கும் உடன் பயணிக்கிறார்கள். செஸ் விளையாட்டுக்கு பல பள்ளிகள் அளிக்கும் ஆதரவும் 'சபாஷ்' போடத் தகுந்தது.

    முத்தாய்ப்பாக, செஸ் விளையாட்டுக்கு கட்சி தாண்டி தமிழக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தரும் ஆதரவு, இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாத முக்கியமான விஷயம் இது என்கிறார் ஒரு தமிழக கிராண்ட்மாஸ்டர்.

    தற்போதுகூட, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை இருகரம் நீட்டி வரவேற்றதும், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் முதற்கொண்டு அரசு எந்திரம் சுற்றிச் சுழல்வதும் தமிழகத்தின் செஸ் பிரியத்துக்குச் சான்று.

    அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் சொந்த மண்ணில் தமிழக செஸ் படை பட்டையைக் கிளப்பும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு.

    • மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.

    வண்டலூர்:

    மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.

    அதற்கு பதிலாக வருகிற 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

    இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.

    இந்த போட்டி பற்றி, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

    இந்த ஜோதி நாடு முழு வதும் 72 நகரங்கள் வழியாக கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் புதுச்சேரி வழியாக கோவை பந்தய சாலைக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றடைந்தது. அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



    அதன்பிறகு சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர் வழியாக இன்று காலையில் மாமல்லபுரம் வந்தடைந்தது. இந்த சுடரை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார். அப்போது பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் ஜீப்பில் ஊர்வலமாக மேள தாளம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ரேஸ் பைப், ஜீப் வீரர்கள் அணிவகுப்பு என 5 ஆயிரம் பேர்களுடன் சிறப்பான வரவேற்புடன் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாக மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒலிம்பியாட் ஜோதியை போட்டி நடைபெறும் போர் பாயிண்ட்ஸ் அரங்கத்திற்கு கொண்டு செல்லும் வீரரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வர லட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, பேரூராட்சி தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை வந்தடைந்த ஜோதியை மாநில கல்லூரி மைதானத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் நோக்கி ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திச் சென்றார்.

    ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒலிம்பியாட் ஜோதி நேரு ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மேடைக்கு வந்தடைகிறது. நாளை நடைபெறும் தொடக்க விழாவின்போது இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.

    • தமிழ்நாடு முழுவதும், பள்ளி அளவில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் அரசு ஏற்பாடு செய்தது.

    சென்னை:

    சென்னையில் நாளை நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கிடையே செஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், பள்ளி அளவில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதன் வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடினார்கள்.

    அதிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் அரசு ஏற்பாடு செய்தது.

    இப்போட்டிகள் 1-5 வகுப்புகள், 6-8 வகுப்புகள், 9-10 வகுப்புகள், 11-12 வகுப்புகள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.

    வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 100 மாணவ-மாணவியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூரு வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் விமானத்தின் உள்ளே சிறப்பு செஸ் போட்டியும் விளையாடினார்கள்.

    இதன்படி செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி 100 மாணவ-மாணவிகள் சென்னையில் இருந்து பெங்களூரு வரை சென்று திரும்பும் வகையில் இன்று மதியம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்த சிறப்பு விமானத்தினை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன், மெய்யநாதன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இன்று மதியம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் புது பொலிவு பெற்றுள்ளன.
    • வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக 25 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அந்த ஓட்டல்கள் அனைத்தும் செஸ் வீரர்களைத் தவிர வெளி நபர்கள் யாரும் நுழையாத வண்ணம் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்குகடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் சுமார் 2 அடி உயரம் எழுப்பப்பட்டு அதில் பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக்கடற்கரை சாலை ஓரங்களில் உள்ள சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னங்கள் மற்றும் அதுகுறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் செஸ் தம்பி பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான பணிகள் கடந்த ஒரு சில நாட்களாக இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் புது பொலிவு பெற்றுள்ளன.

    இதற்கிடையே வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக 25 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பஸ்களை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கம் வரை கொண்டு வந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சோதணை ஒட்டம் நடத்தி பார்த்தனர்.

    தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள், ஒலிபெருக்கிகள் பொறுத்தப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் நடத்தும் சர்வதேச கூட்டமைப்பினர் வழங்கிய அடையாள அட்டை இல்லாமலும் யாரும் இன்று முதல் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் ஹோட்டல் வளாகமே சென்னை விமான நிலையம் போன்று காட்சி அளிக்கிறது.

    செஸ் வீரர்கள் மாமல்லபுரம் நுழையும் போது போக்குவரத்து இடையூறு இல்லாமலும், உள்ளூர் நபர்களுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்து பணியில் ஈடுபட 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று முதல் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து புராதன சின்னங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் 24 மணி நேரமும் பகலிலும், இரவிலும் துள்ளியமாக படம் பிடிக்கும் நவீன 'ட்ரோன் கேமரா'க்கள் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை போர் பாய்ண்ட்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    • பிரதமரின் வருகையை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏற்படும் வகையிலான கருத்துக்களை யாராவது பதிவிடுகிறார்களா? என்பதை சைபர் கிரைம் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
    • சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னை:

    பிரதமர் மோடி நாளை மாலை சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    பிரதமரின் வருகையை தொடர்ந்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் அதே வேளையில் சமூக ஊடகங்களும் சில நேரங்களில் அச்சுறுத்தலாக மாறி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டே சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

    பிரதமரின் வருகையை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏற்படும் வகையிலான கருத்துக்களை யாராவது பதிவிடுகிறார்களா? என்பதை சைபர் கிரைம் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவரிடம் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் செயல்படுவதாக கூறப்படுகிறதே? அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த கமிஷனர் சங்கர் ஜிவால், இது தொடர்பாக சமூக ஊடகங்களை கண்காணித்து வருகிறோம். அச்சுறுத்தும் வகையிலான பதிவுகளை யாராவது வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.

    சென்னை:

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அங்கு வருகை புரியும் வீரர்களுக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.

    அங்கு அழகுற நிறுவப்பட்டுள்ள கலை நயமிக்க நினைவு தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு ரேடிசன் ஓட்டலில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்து கொடுக்கிறார்.

    இதில் பங்கேற்குமாறு ஏராளமான வீரர்கள், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ×