search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட் போட்டி"

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.
    • சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உங்கள் ஆதரவை கோருகிறேன்.

    சென்னை:

    "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்" என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளப்பதிவு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்

    இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தங்களது கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    விருந்தோம்பலும் தன்மானமும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் பண்புகள் ஆகும்!

    தொடர்ச்சியான உங்களது ஆதரவையும், இதுபோல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளையும் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு தங்களைக் கோருகிறேன்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செஸ் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
    • கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜுலை 28-ந் தேதி மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தது.

    இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர்.

    12 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடை பெறுகிறது. இந்த விழாவில் சுமார் 1 மணி நேரம் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

    இதற்காக கடந்த 10 நாட்களாக ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.

    இந்த கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி வாகை சூடிய வீரர்கள்-வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வழங்குகிறார்.

    விழாவில் அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார் கோவிச், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய்கபூர், இயக்குனர் பாரத்சிங் சவ்கான் மற்றும் செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவர்களுடன் செஸ் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

    இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கமானது செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விளையாட்டு அரங்கத்தின் உள்ளே செல்லும் நுழைவு வாயில்களில் தங்கநிற அலங்கார மாலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாலையின் நுனியிலும் செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ராஜா, ராணி, மந்திரி, யானை, குதிரை, சிப்பாய் உள்ளிட்ட காய்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கில் எந்த திசையில் பார்த்தாலும் செஸ் விளையாட்டை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான அழைப்பிதழ் செஸ் காய்களில் ஒன்றான குதிரை வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.

    இதனால் தொடக்க விழாவை போன்று நிறைவு விழாவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் எளிதாக பார்த்துக்கொள்ளும் வகையில், நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மேடையை ஒட்டி இருபுறமும் 2 ராட்சத வடிவிலான எல்.இ.டி. அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மேடையின் வலது மற்றும் இடது புறங்களில் உள்ள கேலரிகளில் பெரிய அளவிலான தலா 3 எல்.இ.டி. அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை தவிர்த்து, மேடையின் வலது புறம் மற்றும் இடது புறம் உள்ள கேலரியின் கீழ் பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார்.
    • சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பங்கேற்கிறார்.

    186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடக்கிறது.

    விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வெற்றி பெறும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்

    நிறைவு விழாவில் 600 கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம் செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மொத்தம் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர்.
    • சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி துவங்கிய நாளில் இருந்தே ஆன்லைன் வழியாக நுழைவுச்சீட்டு வாங்கியவர் போட்டியை நேரில் பார்க்க முழு நேரம், ஒரு மணி நேரம் என அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் பள்ளி மாணவர்கள், செஸ் ஆர்வலர்கள், போட்டி தேர்வானவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். நாளையுடன் முடிவடைவதால் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கத்தில் செஸ் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் செஸ் விளையாட்டு பிரபலமாகி உள்ளது. நகரம் மற்றும் பட்டிதொட்டி எங்கும் "செஸ் ஒலிம்பியாட்" பற்றி பேசப்பட்டு வருவதுடன் செஸ் விளையாட்டு தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

    மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர். அப்பகுதி சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 9-ந்தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.
    • ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 9-ந்தேதி (நாளை) மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த செஸ் வீரர்-வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எனவே அன்றைய தினம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்டிரல் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி தேவை ஏற்பட்டால் மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். அதே போன்று ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்டிரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே பிராட்வேயில் இருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.

    இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது.
    • தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    சென்னை:

    மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    44-வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் முதல் காய் நகர்த்தும் நிகழ்வை நேற்று மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

    செஸ் தோன்றிய தமிழ் மண்ணில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை.

    நேற்று அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டம் வழங்கியது அண்ணா பல்கலைக் கழகத்தின் வரலாற்று மைல்கல் ஆகும்.

    தமிழகத்துக்கு பிரதமர் மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி வந்தார். அப்போது ரூ.5000 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வை நடத்த சென்னை வந்தார்.

    75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் குக்கிராமத்தில் பிறந்த பழங்குடியின சகோதரி ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ளார். ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியை ஏற்றும் இயக்கம் தொடங்க இருக்கிறோம். இந்த மூவர்ண கொடியை தமிழகத்தில் வீடுகள் தோறும் ஏற்றி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து அவர்களின் மகிமையை இன்றைய சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    நாடுமுழுவதும் 24 ஆயிரம் கிராமங்களில் 4 ஜி அலைவரிசையை கொடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4ஜி அலைவரிசை வழங்கப்பட இருக்கிறது.

    இந்த திட்டத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் 4 ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    எனவே இனி கிராமங்கள் தோறும் இணையதள வசதி கிடைக்க உள்ளது.

    சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது. தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன் மூலம் தமிழகத்தில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது மேலும் 75 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 45 ஆயிரம் பேருக்கு இன்று மாலை தலா ரூ.10 ஆயிரம் சுயநிதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீரர்கள் உண்ணும் தினசரி உணவு வகைகளும் மாதிரி எடுக்கப்பட்டு தரம் பரிசோதனை.
    • 120 உணவுத்துறை ஊழியர்கள் ஓட்டல்களில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நேற்று மாலை 3மணிக்கு 44வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்கியது. இப்போட்டி ஆகஸ்ட் 10வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 187 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் 21 நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர்.

    இவர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, யோகா இயற்கை மருத்துவ குழுவினர் 50பேர் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து பூங்கா வழியாக யோகா பகுதிக்கு செல்லும் போது கொசுக்கள் தென்பட்டதாகவும், சிலரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் கொசுக்களை விரட்டுவதற்கு என்றே தனி ஊழியரை நியமித்து கொசு விரட்டும் மின்சார பேட்டுடன் பணியமர்த்தி உள்ளது. இதை தொடர்ந்து போர் பாய்ண்ட்ஸ் செஸ் அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் கொசு விரட்டுவதற்கு தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வீரர்கள் உண்ணும் தினசரி உணவு வகைகளும் மாதிரி எடுக்கப்பட்டு தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 120 உணவுத்துறை ஊழியர்கள் ஓட்டல்களில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.

    • சிறுதானிய தம்பி இட்லி சென்னை மெரினாவில் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது.
    • இட்லி மாவுடன் சிறு தானியங்களையும் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இட்லி இனியவன் கூறியதாவது:-

    சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் மிக பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமாக (குதிரை) தம்பி உருவத்தில் 44 கிலோ எடையுள்ள சிறுதானிய தம்பி இட்லி காசிமேடு கடற்கரை, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மெரினா கடற்கரை நம்ம சென்னை செல்பி ஸ்பாட் 7 மணி முதல் 8.30 மணி வரை கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமான தம்பி குதிரை உருவத்தில் இட்லி மாவுடன் சிறு தானியங்களையும் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டு உள்ளது.

    சிறுதானியங்கள் மூலம் செய்து காட்சிப்படுத்துவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவான சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தன்னார்வலர்கள் குழுவில் அதிக வயதுடையவராக ஸ்ரீபிரியா என்பவர் உள்ளார்.
    • தன்னார்வலர்களில் 150 பேர் போட்டி நடைபெறும் இடத்தில் பணியாற்றுகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து உள்ளது.

    இப்போட்டி தொடருக்காக 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்.

    தன்னார்வலர்கள் குழுவில் அதிக வயதுடையவராக ஸ்ரீபிரியா என்பவர் உள்ளார். அவருக்கு 55 வயது ஆகிறது. இவர் ஏராளமான செஸ் போட்டிகளில் பணியாற்றி இருக்கிறார். இதுபோன்ற தொடர்களில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்.

    தன்னார்வலர்களில் 150 பேர் போட்டி நடைபெறும் இடத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வீரர்களின் நடுவர்களுக்கு உதவுவது, வாயில்களை நிர்வகிப்பது, யாராவது மின்னணு சாதனங்களை அரங்கத்துக்குள் கொண்டு வராமல் பார்த்துக்கொள்வது, உணவு மற்றும் பானங்கள் வழங்குவது, பார்வையாளர்களை கையாள்வது ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

    140 தன்னார்வலர்கள் போக்குவரத்து குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். அவர்கள் வீரர்-வீராங்கனைகளை பயிற்சியாளர்களை போட்டி நடைபெறும் இடத்துக்கு அழைத்து வருவார்கள்.

    இது தொடர்பாக தன்னார்வலர்கள் குழுவின் பொறுப்பாளர் பிரதீக் மோகன் கூறும்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தன்னார்வ திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மாணவர்களை அனுப்ப உள்ளூர் கல்லூரிகள் அகில இந்திய செஸ் கூட்டமைப்பை அணுகினர். இளம் செஸ் வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பன்முகத்தன்மையுடன் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கும் தகுந்த உதவித்தொகை, நல்ல உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

    எங்கள் குழுவின் சராசரி வயது 22 ஆகும். குழுவின் மூத்த உறுப்பினராக 55 வயது ஸ்ரீபிரியா உள்ளார். அவர் நிறைய செஸ் போட்டிகளில் பணியாற்றியுள்ளார். அவர் இங்கு பணியாற்ற மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார்.

    • பெண்கள் அணி தஜிகஸ்தானை சந்திக்கிறது.
    • உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் 1927-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் சிறப்பு மிக்க வாய்ப்பை தமிழ்நாடு பெற்று உள்ளது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து முடிந்தன.

    இப்போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ராஜா, ராணி காய்களை அறிமுகம் செய்து 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று மாலை 3 மணி முதல் போட்டிகள் தொடங்கும்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளை கொண்டது. சுவிஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும்.

    ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். 4 பேர் தான் ஆடுவார்கள். வெற்றி பெற்ற அணிகள் வெற்றி பெற்ற அணியுடனும், தோல்வி அடைந்த அணிகள் தோல்வி அடைந்த அணியுடனும் விளையாடும் வகையில் போட்டி முறை அமைக்கப்பட்டுள்ளது.

    வெற்றிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். தோற்றால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. 4 பேர் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும்.

    செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.

    மகளிர் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. மற்ற இரண்டு அணியும் முறையே 11, 16-வது இடங்களில் உள்ளன.

    ஓபன் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் முறையே 11 மற்றும் 17-வது இடங்களில் உள்ளன.

    இன்று காலை 9.30 மணிக்கு அனைத்து அணி கேப்டன்கள் கூட்டம் நடைபெறும். மாலை 3 மணிக்கு தொடங்கும் ஓபன் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி (2-வது தர வரிசை) ஜிம்பாப்வே அணியுடன் (94-வது தர வரிசை) மோதுகிறது.

    பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் இந்திய 'ஏ' அணி வெற்றியுடன் போட்டியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய 'பி' அணி (2-வது இடம்) ஐக்கிய அரபு எமிரேட்சுடன் (103-வது இடம்) மோதுகிறது. தர வரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்திய 'சி' அணி 109-வது இடத்தில் உள்ள தெற்கு சூடான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    பெண்கள் பிரிவில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய 'ஏ' அணி முதல் சுற்றில் 80-வது இடத்தில் உள்ள தஜிகஸ்தானுடன் மோதுகிறது. 11-வது இடத்தில் உள்ள இந்திய 'பி' அணி வேல்ஸ் (90-வது இடம்) அணியுடனும், இந்திய 'சி' அணி (16-வது இடம்) ஆங்காங்குடனும் (95-வது இடம்) மோதுகின்றன.

    நேற்றைய தொடக்க விழாவின்போது பிரதமர் மோடி, இந்திய பெண்கள் மற்றும் அமெரிக்க ஆண்கள் அணிகள் எந்த நிற காயுடன் விளையாட வேண்டும் என்பதை தேர்வு செய்தார். இதில் அவர் இரண்டையுமே கருப்பு நிற காய்களாக எடுத்தார். இதனால் இந்திய பெண்கள் அணி முதல் சுற்றில் கருப்பு நிற காயுடன் விளையாடுகிறது.

    முதல் சுற்று போட்டி மாலை 3 மணிக்கு தொங்குவதையடுத்து வீரர்-வீராங்கனைகள் தாங்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் இருந்து புறப்பட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு மதியம் 2 மணியளவில் வருகின்றனர். அவர்கள் பஸ்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி உற்சாகத்துடன் தொடங்குகிறது.

    • பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.
    • கர்நாடக மாநில முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்.

    இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

    கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அருணாச்சல பிரதேச முதல்-அமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதல்-அமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    மேலும், கர்நாடக மாநில முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மத்திய பிரதேச முதல்-அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா மாநில முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ், அரியானா மாநில முதல-அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    • ஹெலிபேடு அமைக்கப்படலாம் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • வெளிநாட்டு தலைவர்கள் பலர் மாமல்லபுரம் வர உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஜூலை 28-ந் தேதி தொடங்கும் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்ந்து ஆகஸ்ட்டு 10 -ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த நாட்களில் வெவ்வேறு வெளிநாட்டு தலைவர்கள் பலர் மாமல்லபுரம் வர உள்ளனர். இவர்களது பாதுகாப்பு கருதி அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் அதிக தூரம் தரைவழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் விமான நிலையம் மற்றும் தாம்பரம் விமானப்படை தளங்களில் இருந்து, நேரடியாக மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் வான்வழி தடங்கள் எப்படி, அதன் இறங்கு தள வசதிகள் எங்கெல்லாம் உள்ளது என்று செங்கல்பட்டு சப்-கலெக்டர் சஜ்ஜீவனா, டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் உள்ளிட்டோர் திருவிடந்தை, கோவளம், பூஞ்சேரி பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

    கோவளத்தில் உள்ள தனியார் வான்வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தளம், திருவிடந்தையில் 2018-ம் ஆண்டு நடந்த ராணுவ கண்காட்சியின் போது பிரதமர் மோடி வந்து இறங்கிய தளம், பூஞ்சேரி அடுக்கு மாடி குடியிருப்பு தளம் போன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் வந்திரங்க 'ஹெலிபேடு' அமைக்கப்படலாம் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×