search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னையில் இன்று கோலாகல தொடக்க விழா
    X

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னையில் இன்று கோலாகல தொடக்க விழா

    • பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் அமைந்துள்ள மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் 44-வது சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி 14 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த போட்டிகளில் பங்கேற்க 180 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

    இதையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான தொடக்க விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக இன்று பிற்பகல் 2.20 மணி அளவில் குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் மோடி மாலை 4.45 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர்.

    பின்னர் விமான நிலையத்தில் பிரதமர் மோடி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் மோடி மாலை 5.45 மணி அளவில் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை வளாகத்தை வந்தடைகிறார்.

    அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு செல்கிறார். சுமார் 5 கி.மீ. தூரம் காரில் பயணித்து மாலை 6 மணி அளவில் நேரு ஸ்டேடியத்தை அவர் சென்றடைகிறார். வழி நெடுக பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சாலையோரமாக திரண்டு நின்று மோடியை வரவேற்கிறார்கள். இதையொட்டி பிரதமர் செல்லும் வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி நேரு ஸ்டேடியத்தை சென்றடைந்ததும் அங்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். தொடக்க விழா முடிவடைந்ததும் பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இன்று இரவு அங்கு தங்கும் அவர் நாளை காலை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் நாளை மதியம் 12 மணி அளவில் அவர் புறப்பட்டு குஜராத் செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் காரில் புறப்பட்டு நேரு ஸ்டேடியத்துக்கு செல்லும் பாதைகளில் அவரை வரவேற்று பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் உள்ளிட்டவைகளுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் சாலை பயணத்தின் போது ஆர்வம் மிகுதியில் தொண்டர்கள் பிரதமரின் கார் மீது மாலை உள்ளிட்ட பொருட்களை எடுத்து வீசக்கூடாது என்றும் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    பிரதமர் காரில் பயணம் செய்யும் நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பல்லவன் இல்லம், சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்புறம் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாநகராட்சி சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    டிரோன்கள், பலூன்கள் ஆகியவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பிரதமர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வான்வெளி பாதையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் மத்திய போலீஸ் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் அமைந்துள்ள மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விழிப்புடன் பணியாற்ற போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×