search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செஸ் ஒலிம்பியாட்போட்டி நடைபெறும் அரங்கத்துக்கு வீரர்களை அழைத்துவரும் சிறப்பு பஸ்சை இயக்கி போலீசார் சோதனை
    X

    வீரர்களை அழைத்து வரும் சிறப்பு பேருந்தை போலீசார் சோதனை செய்த காட்சி


    செஸ் ஒலிம்பியாட்போட்டி நடைபெறும் அரங்கத்துக்கு வீரர்களை அழைத்துவரும் சிறப்பு பஸ்சை இயக்கி போலீசார் சோதனை

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் புது பொலிவு பெற்றுள்ளன.
    • வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக 25 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அந்த ஓட்டல்கள் அனைத்தும் செஸ் வீரர்களைத் தவிர வெளி நபர்கள் யாரும் நுழையாத வண்ணம் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்குகடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் சுமார் 2 அடி உயரம் எழுப்பப்பட்டு அதில் பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக்கடற்கரை சாலை ஓரங்களில் உள்ள சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னங்கள் மற்றும் அதுகுறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் செஸ் தம்பி பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான பணிகள் கடந்த ஒரு சில நாட்களாக இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் புது பொலிவு பெற்றுள்ளன.

    இதற்கிடையே வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக 25 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பஸ்களை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கம் வரை கொண்டு வந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சோதணை ஒட்டம் நடத்தி பார்த்தனர்.

    தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள், ஒலிபெருக்கிகள் பொறுத்தப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் நடத்தும் சர்வதேச கூட்டமைப்பினர் வழங்கிய அடையாள அட்டை இல்லாமலும் யாரும் இன்று முதல் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் ஹோட்டல் வளாகமே சென்னை விமான நிலையம் போன்று காட்சி அளிக்கிறது.

    செஸ் வீரர்கள் மாமல்லபுரம் நுழையும் போது போக்குவரத்து இடையூறு இல்லாமலும், உள்ளூர் நபர்களுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்து பணியில் ஈடுபட 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று முதல் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து புராதன சின்னங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் 24 மணி நேரமும் பகலிலும், இரவிலும் துள்ளியமாக படம் பிடிக்கும் நவீன 'ட்ரோன் கேமரா'க்கள் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை போர் பாய்ண்ட்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×