search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மலை"

    • எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார் - அண்ணாமலை
    • அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது - செம்மலை

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய அவர், "மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

    மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது என்று பேசியிருந்தார்.

    கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்தார்.

    "கருத்துச் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார். நான் சொல்வதைத் தான் மோடியும் சொல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

    நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய செம்மலை, "நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவின் நிலை நரியின் நிலைமைபோல் தான் இருக்கும். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வங்கி உள்ளது. எனவே தோல்வி பயத்தால் அண்ணாமலை உளறி கொண்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் பாஜக என்ன செய்தாலும் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வாங்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஜெயக்குமார், " அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி, அரசியலில் கத்துக்குட்டி. தேர்தலில் போட்டியே திமுகவும் அதிமுகவும். அதனால் நானும் தேர்தல் போட்டியில் இருக்கிறேன் என்பதற்காக நானும் ரவுடிதான் என்ற பாணியில் அதிமுகவை அண்ணாமலை சீண்டி வருகிறார். தேசிய கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனியாக நின்று பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ சீட்டு வெல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியுமா?

    பாஜகவுடன் 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைத்ததால் தான் அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. பாஜக கூட்டணியால்தான் இதுவரை தோல்வியே காணாத நான் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தேன்.

    ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. இனிமேலும் ஆட்சி செய்ய போகிற கட்சி அதிமுக" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

    • இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
    • உள்ளூர் மக்களின் ஆதரவு தி.மு.க.விற்கு இல்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து மக்களை சந்தித்து வருகிறோம். இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதற்கு தி.மு.க.வின் கடந்த 22 மாத ஆட்சி தான் காரணம். சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் , பால் விலை உள்ளிட்ட வரிகளையும், கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர். தனி நபர் வருமானம் கூடவில்லை. ஆனால் விலைவாசி விண்ணை முட்டுகிறது.

    மக்களின் வேதனை இந்த தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. எதை சொல்லி வாக்கு கேட்பார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. மக்களை சந்தித்து பேச தயங்குகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் செய்து காட்டிய நலத்திட்டங்களை சுட்டி காட்டி வாக்கு சேகரிக்கிறோம். இரட்டை இலை வெற்றி பெறுவது உறுதி.

    மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டு இருக்கிறது. பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மக்கள் செல்வாக்கு எங்களுக்கு கூடினால் அதை தடுக்க எந்த வழியையும் கடைபிடிப்பார்கள். அது தி.மு.வின் கைவந்த கலை. மக்களின் ஆதரவு பெருகுவதை தடுப்பார்கள். மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.

    நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக ஆயிரகணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். உள்ளூர் மக்களின் ஆதரவு தி.மு.க.விற்கு இல்லை. இந்த ஆட்சியின் மீது வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது.
    • சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது.

    சேலம்:

    அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்கும் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்.

    பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும். சசிகலா உட்பட கட்சிக்கு பாடுபட்டவர்களுடன், அ.தி.மு.க இயக்கத்தை காப்பாற்றிய யாராக இருந்தாலும் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறியதாவது:-

    அ.தி.மு.க. தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. தலைமை கழக அலுவலகம் எடப்பாடியார் வசம் உள்ளது. நீதிமன்றமே எடப்பாடியார் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. வங்கி கணக்கு இ.பி.எஸ் தரப்பு பொருளாளர் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.

    சமீபத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலைமையில், கட்சி எடப்பாடியார் தலைமையில் இல்லை, எங்களுக்கு தான் சொந்தம் என்று ஓ.பி.எஸ் தரப்பு கொண்டாடுவது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இருக்கும்போதே கழக அமைப்பு தேர்தல் முறையாக நடத்தப்பட்டு இருவரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது இ.பி.எஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவிலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது.

    அப்படி இருக்க, ஓ.பி.எஸ் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை நியமிப்பது மட்டும் கட்சி விதிகளுக்கு உட்பட்டதா? எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை மீறுவது நியாயமா? என்று ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவி மாற்றியது சரியா? அப்போது மாற்றம் செய்யவில்லையா? பொதுவாக சட்ட விதிகள் மாறுதலுக்கு உட்பட்டதுதான்.

    பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி நியமிப்பது சரியா? என ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஜனாதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்களுக்கு தகுதி நியமிக்கும்போது பொதுச்செயலாளர் என்ற உயர் பதவிக்கு தகுதி நியமிப்பதில் என்ன தவறு உள்ளது. எடப்பாடியார் தலைமை பண்பை நிரூபிக்க தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்துள்ளனர். கட்சி, ஆட்சி சிறப்பாக வழி நடத்தி தலைமை பண்பை எடப்பாடியார் ஏற்கனவே நிரூபித்துவிட்டார். புதிதாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய கட்சியும் அவர் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

    எடப்பாடியாரை வீதிக்கு வர சொல்வது சரியானது அல்ல. பொதுக்குழு தொடர்பாக 2 நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடியார் தலைமைக்கு சாதமாக உள்ளது. மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த நிலையில் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் பொதுக்குழு கூட்டுவதாக சொல்வது அர்த்தமில்லை.

    சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது. 1½ கோடி தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளதாக கூறுவதும், இல்லாத ஒன்றை கற்பனையாக சொல்வதாக உள்ளது. எடப்பாடியார் பக்கம் தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். கட்சியும் அவரது முழு கட்டுப்பாடடில் உள்ளது. இனிவரும் நாட்களிலும், வரும் தேர்தல்களிலும் முழு வெற்றியை கட்சிக்கு தருவார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×