search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி - எடப்பாடி குறித்த விமர்சனத்துக்கு ஜெயக்குமார் பதிலடி
    X

    "அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி" - எடப்பாடி குறித்த விமர்சனத்துக்கு ஜெயக்குமார் பதிலடி

    • எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார் - அண்ணாமலை
    • அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது - செம்மலை

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய அவர், "மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

    மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது என்று பேசியிருந்தார்.

    கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்தார்.

    "கருத்துச் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார். நான் சொல்வதைத் தான் மோடியும் சொல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

    நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய செம்மலை, "நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவின் நிலை நரியின் நிலைமைபோல் தான் இருக்கும். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வங்கி உள்ளது. எனவே தோல்வி பயத்தால் அண்ணாமலை உளறி கொண்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் பாஜக என்ன செய்தாலும் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வாங்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஜெயக்குமார், " அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி, அரசியலில் கத்துக்குட்டி. தேர்தலில் போட்டியே திமுகவும் அதிமுகவும். அதனால் நானும் தேர்தல் போட்டியில் இருக்கிறேன் என்பதற்காக நானும் ரவுடிதான் என்ற பாணியில் அதிமுகவை அண்ணாமலை சீண்டி வருகிறார். தேசிய கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனியாக நின்று பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ சீட்டு வெல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியுமா?

    பாஜகவுடன் 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைத்ததால் தான் அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. பாஜக கூட்டணியால்தான் இதுவரை தோல்வியே காணாத நான் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தேன்.

    ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. இனிமேலும் ஆட்சி செய்ய போகிற கட்சி அதிமுக" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×