search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியபூஜை"

    • வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலே உள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

     இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர்.

    இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

    ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன.

    ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச்சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

    இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை.

    தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார்.

    அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், `ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.

    முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.

    அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும்.

    அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர்.

    இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

    • பதஞ்சலி முனிவர் `நித்திய கைங்கர்யாள்' என்று அழைக்கப்படுகிறார்.
    • கருவறையில் ஆவுடையார் இல்லாத தாராலிங்கம் உள்ளது.

    பிரம்மனுக்கென்று தனி கோவில்கள் உள்ள கண்டியூர், கும்பகோணம், திருப்பாண்டிகொடுமுடி, திருக்கரம்பனூர், புஸ்கர் (ராஜஸ்தான் மாநிலம்) வரிசையில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முதல் பிரகாரத்தில் நாவில் சரஸ்வதி நற்றுணையாக வீற்றிருக்கும் பிரம்மாவின் பெருவடிவம் உள்ளது பெருமைக்குரியது.

    எல்லா சிவ ஆலயத்திலும் ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்ட மூர்த்தியாக இருந்து வருகிறார். ஆனால் இந்த கோவிலில் மட்டுமே பிரம்மா மிக பிரமாண்டமாக அதுவும் மிக சிறப்பாக தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தி படைத்தவராக தனி சன்னதியில் விமானத்துடன் காட்சி அளிக்கிறார்.

    பிரம்மாவின் நான்கு முகங்கள் கிரீடம் அணிந்து நாற்புறமும் பார்த்தபடி இருக்கும். நான்கு கரங்களில் இரண்டு கரங்களை மடிமீது வைத்தும், மற்ற கரங்களில் முறையே வலக்கரத்தில் ஜெபமாலை, இடக்கரத்தில் கமண்டலமும் உள்ளவாறு தாமரை மலர் மீது தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார்.

    இவருக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் காப்பு அபிஷேகம் செய்து நல்ல பலனை பெறலாம். வியாழன், ஞாயிறு, திங்கட்கிழமைகள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாகும். மேலும் திருவாதிரை, புணர்பூசம், சதயம் மற்றும் அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தல் சிறப்பு என உணரப்படுகிறது.

    சூரிய பூஜை

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15, 16, 17 ஆகிய தினங்களில் நடைபெறும் இந்த சூரிய பூஜை நிகழ்ச்சி ஓர் அரிய நிகழ்வாகும். சூரிய பூஜை ஆண்டுதோறும் பங்குனி 15, 16, 17 காலை 6.14 மணிக்கு தொடங்கி 6.45 மணிக்கு ஈசனாகிய ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை சூரிய பகவான் நேரடியாக வழிபடும் காட்சியானது கடல் நீரில் மங்களகரமான ஓர் சிவலிங்கம் தோன்றி மறைவது போன்ற அற்புத காட்சியை காண்பது மிகச்சிறப்பு.

    பதஞ்சலி முனிவர்

    இவர் நித்திய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுவர். இவர் இத்தலத்து ஈசனை தினந்தோறும் வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைலாச நாதர்

    இக்கோவிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோவிலாக கைலாச நாதர் ஆலயம் உள்ளது. இக்கோவில் முற்கால பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது 7, 8-ம் நூற்றாண்டுகளை சேர்ந்தது.

    இத்திருக்கோவில் தேர் வடிவில் பல்லவர் கலை முறையில் அமைந்த கோவிலாகும். கருவறையில் ஆவுடையார் இல்லாத தாராலிங்கம் உள்ளது. இது 16 பட்டைகளை கொண்டது. இது சந்திரகலாலிங்கம் என்று அழைக்கப்படும். சிதம்பரம் நவலிங்கம் சன்னதியில் உள்ள லிங்கம், காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தில் உள்ள லிங்கம் ஆகியவை இந்த வகையானதே ஆகும்.

    மேலே விதானம் கொண்ட கங்கைகொண்ட சோழபுரம் போல உள்ளீடு இல்லாது உச்சிவரை செல்கிறது. இறைவன் தனியே ரிஷபாருடனாக இருக்கும் காட்சி முதல் திருக்கோவிலை சுற்றியுள்ள நடனத்தோற்றங்கள் வரை அனைத்து மனதை கொள்ளை கொள்கிறது. இத்திருக்கோவிலை பார்த்தே ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோவிலை அமைத்திருக்க வேண்டும்.

    16 பட்டை லிங்கத்தை சுற்றிவரும் திருச்சுற்று சாந்தாரா அமைப்பை சேர்ந்தது. இதே போலத்தான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் லிங்கத்தை சுற்றி வர இடம் அமைத்து உள்ளீடற்ற கோபுரத்தையும் நிறுவி இருக்கிறார்கள்.

    இக்கோவிலே ஆதி கோவிலாக அமைந்திருக்கவேண்டும். இதன் பின்னரே 14-ம் நூற்றாண்டில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

    பிரம்ம தீர்த்த குளம்

    நான்கு புறமும் படித்துறைகளை கொண்ட அற்புத தீர்த்த குளம். இந்த தீர்த்தத்தால் பிரம்மன் 12 (துவாதச) சிவலிங்கங்களை அபிஷேகித்து வழிபாடு செய்ததால் இத்தீர்த்த குளம் பிரம்ம தீர்த்த குளம் என்று அழைக்கப்படுகிறது.

    மழை நீர் பிரகாரத்தின் மேல்தளங்களில் விழுந்து யார் காலிலும் படாமல் வழிந்து திருக்கோவில் அடித்தளத்தின் வழியே திருக்குளத்தில் விழும்படியாக தொழில்நுட்ப அறிவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    முக்கிய திருவிழாக்கள்

    மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றில் வரும் இரண்டு பிரதோஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

    சித்திரை மாதப்பிறப்பில் பஞ்சாங்கம் படித்தல், சிறப்பு அபிஷேகம், நீர்மோர் பாகனம் வழங்கப்படுகிறது.

    ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு தனியாக அபிஷேகம் செய்யப்பட்டு ஆண்டின் முதல் விழாவாக ஆடிப்பூர அம்மன் திருவீதி உலா வருதல் சிறப்பு. அன்று பாசிப்பயிறு முளைக்கட்டி விதைபோடுதல் என்று பக்தர்களுக்கு தருவது சிறப்பு.

    ஆவணியில் விநாயகர் அபிஷேகம், திருவீதி உலா வருதல்.

    புரட்டாசி மாதத்தில் நவராத்திரி 10 நாட்களும் அம்மன் பிரம்ம சம்பத் கவுரிக்கு அபிஷேகம், அலங்காரம், ஊஞ்சல் உற்சவம் என்று சிறப்பிக்கப்படும். இந்த விழா அம்பு போடுதல் நிகழ்வுடன் நிறைவு பெறும்.

    ஐப்பசி பவுர்ணமி அன்று ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

    கார்த்திகை பவுர்ணமி அன்று திருக்கார்த்திகை தீபமும், திருவீதி உலாவும் நடைபெறும்.

    மார்கழி பவுர்ணமியன்று திருவாதிரையில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் திருவீதி உலா நடைபெறும்.

    தை மாதப்பிறப்பில் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடைபெறும்.

    மாசி மாத சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு நான்கு கால அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.

    பிரம்மோற்சவ பெரும் திருவிழாவில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது தனிச்சிறப்பு. இந்த மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாளில் திருத்தேரோட்ட வடம் பிடித்தல் வைபவம் நடைபெறுவது தனிச்சிறப்பு. சூரிய வழிபாடு பங்குனி 15, 16, 17 ஆகிய நாட்கள்.

    பரிகார-பிரார்த்தனை தலம்

    ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமை வார்கள். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடு கின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இந்த கோவில் உள்ளது.

    திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே புதிய திசுக்களை படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை தலம் ஆகும்.

    ×