search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தான்குளம்"

    • ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • மாணவி ஆரோக்கியமேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாட்டை சேர்ந்த ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இவரது தந்தை உயிரிழந்து விட்ட தால் மாணவியின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரசூர் பகுதிக்கு வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட உதவிட வேண்டும் மாணவி ஆரோக்கிய மேரி மனு அளித்து வலியுறுத்தினார்.

    அதன்படி ஆரோக்கிய மேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார். எம்.எல்.ஏ., வழங்கிய உதவித்தொகையை அவர் சார்பாக சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி , பூச்சிக்காடு கிராம கமிட்டி தலைவர் பீட்டர் ஆகியோர் மாணவி குடும்பத்திடம் வழங்கினர். அப்போது சாத்தான் குளம் வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் அன்னகணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வருவாய்‌துறைக்கு சொந்தமான நிலத்தினை மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
    • பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக பிரிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. அந்த மனுவில் கூறியுள்ளார்.

    சாத்தான்குளம்:

    வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் வட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார மக்கள் பயன்பாட்டிற்காக, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, விபத்து மற்றும்அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு ஆகியவை விரிவாக்க பணிகளுக்காக சாத்தான் குளம் மருத்துவமனையின் பின்புறம் உள்ள வருவாய் துறைக்கு சொந்த மான நிலத்தினை மருத்துவ மனைக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்க வேண்டும்.

    மேலும் சாத்தான்குளம் வட்டத்துக்குக்கு உட்பட்ட பெரியதாழை ஊராட்சி தற்போது படுக்கப்பத்து வருவாய் கிராமத்தில் உள்ளது. பெரியதாழையை புதிய வருவாய் கிராமமாக ஏற்படுத்த அரசு நிர்ணயம் செய்துள்ளபடி மக்கள் தொகை (ஆண்கள் -4848 பெண்கள்- 3773 மொத்தம் - 8621) உள்ளது.

    மேலும் பட்டாதாரர் எண்ணிக்கை 575 ஆக உள்ளது. மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் படுக்கப்பத்து தலைமை இடத்திற்கு செல்வதற்கு 3 கிலோமீட்டர் தூரம் பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    மேலும் பெரியதாழை கிராமத்தில் மீனவ சமுதாய மக்கள் அதிகமாக வசிப்பதால் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே படுக்கப்பத்து வருவாய் கிராமத்தில் இருந்து பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக பிரித்து அரசாணை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், அதனை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கிறிஸ்டோபர் ஜெயராஜ் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார்.
    • சாலமோன் அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் (வயது58). இவர் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். இவருக்கும் அவரது அண்ணன் சாலமோனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    அரிவாள் வெட்டு

    இந்நிலையில் நேற்று பஸ் நிறுத்தம் அருகே கிறிஸ்டோபர் நின்று கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த சாலமோன் அவரை வழிமறித்து அவதூறாக பேசியுள்ளார்.

    இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சாலமோன் தான் வைத்திருந்த அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி சாலமோனை தேடி வருகிறார்கள்.

    • 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை உதவி வழங்கப்பட்டு வருகிறது.
    • சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் 244 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    சாத்தான்குளம்:

    தமிழகத்தில் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வித்துறை ஏற்பாட்டின் படி தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

    சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதற்காக 247 மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர். இதில் சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் 244 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை உத்தரவின் பேரில் பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமைஆசிரியர் ஜெபசிங்இம்மானுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது.
    • கார்த்திகை 23-ந் தேதி அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சங்கரன் குடியிருப்பு ‌ ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 9-ந் தேதி முதல் கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் மாலை 7 மணிக்கு பனிவிடையும் அதனைத் தொடர்ந்து திருஏடு வாசிப்பும் சிறப்பு தர்மங்களும் தினம்தோறும் நடைபெற்றது.

    கார்த்திகை 23-ந் தேதி மக்கள் அனைவரும் சுருள் ஏந்தி மாபெரும் திருக்கல்யாண ஊர்வலம்மும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பனிவிடையும், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.ஏற்பாடுகளை தாங்கல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்பிரமணியம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
    • தோட்டக்கலை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முருங்கை சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் நீரா பானம் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமான விவசாயிகள் பயிற்சி வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனம், பொள் ளாச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி உத்தரவின்படி நடைபெற்றது.

    அங்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்பிரமணியம், தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் தயார் செய்யும் முறைகள், நீரா பானத்தின் பயன்கள் மற்றும் நீரா பானத்தில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம் நீரா பானம் தயார் செய்வது குறித்து விளக்கம் அளித்தார். தோட்டக்கலை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தென்னை மற்றும் முருங்கை சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    விநாயகா தென்னை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டின் பண்ணை மேலாளர் முருகேசன் தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் தயார் செய்வது குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக பண்ணை செயல் முறை விளக்கம் அளித்தார்.

    இந்த பயிற்சியில் சாத்தான்குளம் சுற்று பகுதியைசார்ந்த சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்முருகன் மற்றும் ஜேக்கப் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • முத்தையா மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளம் பஜாருக்கு வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் பாம்பு ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கியது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. அப்போது கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா (வயது35) என்பவர் மோட்டார் சைக்கிளில் பஜாருக்கு வந்தார்.

    மழை வேகமாக பெய்ததால் இட்டமொழி சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கு உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்றுள்ளார்.

    அப்போது கழிவு நீரோடையில் வந்த பாம்பு ஒன்று மோட்டார் சைக்கிளில் ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கியது. அருகில் நின்றவர்கள் பதறிபோய் பாம்பை விரட்ட முய ன்றனர். அது மோட்டார் சைக்கிளை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சாத்தான்குளம் தீயணைப்புத் துறை யின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை பிடி த்து பத்திரமாக வனப் பகுதியில் விட்டனர்.

    • தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் தலைமை தபால் நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகில் மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் உள்ளன. மேலும் அருகிலுள்ள வாசக சாலை பஜாரில் அனைத்து பஸ்களும் வந்து நின்று செல்கின்றன.

    இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகளும் தபால் நிலையம் சென்று ஊருக்கு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியாக இருந்தது. இந்நிலையில் இந்த தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதை அறிந்த வர்த்தக சங்கத்தினர், பொது மக்கள், வியாபாரிகள் சாத்தான்குளம் தபால் நிலைய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதி காரிகள் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தை யின் மூலம் தபால் நிலையம் இடம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது உள்ள கட்டிடத்திலே சீரமைப்பு செய்து வழக்கம்போல் தபால் நிலைய அலுவலக பணிகளை செய்வதற்கு தபால் துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினரும், ஊர் பொதுமக்களும், தபால் நிலைய அதிகாரி அழகையா,அஞ்சலக ஆய்வாளர் செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

    • முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.
    • அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்களை பற்றி விளக்கி பேசினர்.

    சாத்தான்குளம்:

    முதலூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், தாசில்தார் தங்கையா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லெனின், உதவி வேளான்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், முதலுர் கனரா வங்கி மேலாளர் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விளக்கி பேசினார்கள்.

    மேலும் அனைத்து துறை அலுவலர்கள் மனுக்கள் பெற்றுக்கொண்டனர். பொது மக்கள் திராளாக கலந்து கொண்டனர். மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசாணமுத்து, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில் சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி அழகிய கூத்தர், சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மேலும் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை. தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

    • முகம் முழுவதும் ரத்த வழிய நடக்க முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.
    • காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய அடித்ததாக தெரிவித்தனர்.

    துாத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விசாரணை நடைபெற்ற போது முக்கிய சாட்சியான ராஜாசிங் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    இந்த சம்பவம் நடைபெற்ற போது நான் சிறையில் இருந்தேன். சாப்பிட செல்லும் போதுதான் அவர்களை நான் பார்த்தேன், இருவரும் நடக்க முடியாமல் இருந்தனர். முகம் முழுவதும் ரத்த வழிய அவர்கள் சோர்வாக இருந்தனர். அவர்களிடம் நான் கேட்ட போது சாத்தான்குளத்தில் வைத்து அடித்து விட்டதாக கூறினர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய காவல்துறையினர் அடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தேன்.

    வேறு வழக்கு ஒன்றிற்காக என்னையும் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் மூன்று நாட்கள் வைத்து அடித்து சித்தரவதை செய்து கொடுமைப்படுத்தினர். மற்றொரு காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அடித்தனர். இதனால் எனது உடலில் படுகாயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். செய்யாத குற்றத்திற்காக என்னை சித்தரவதை செய்து கையெழுத்து வாங்கி சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான கடந்த 5-ந் தேதி காலை மஞ்சள் பெட்டி எடுத்து ஊர்வலம், அலங்கார கும்பம் ரதவீதி ஊர்வலம் வருதல், இரவு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், சுவாமி அக்னி சட்டி ஏந்தி ரதவீதி வருதல், இரவு 12மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.

    சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைத்து பகுதியிலும் சப்பரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை சாத்தி வழிப்பட்டனர். மேலும் 10நாட்களும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து காணிக்கை பிரித்து அம்மனுக்கு செலுத்தினர்.

    ×