search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமயபுரம் மாரியம்மன்"

    • சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியும், அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை வசந்த மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், செண்பகம், சரக்கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • இன்று அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • இன்றுடன் பஞ்சப்பிரகார விழா நிறைவுபெறுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி முதல் வசந்த உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக பஞ்சப்பிரகார உற்சவம் கடந்த 15-ந் தேதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார். இதன்படி நேற்று இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மரகாமதேனு வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்றுடன் பஞ்சப்பிரகார விழா நிறைவுபெறுகிறது.

    • 18-ந்தேதி தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளுகிறார்.
    • 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இந்த விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மேல் வைத்து ஒரு தங்க குடத்திலும், 25 வெள்ளி குடங்களிலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பட்டர்கள் புனித நீரை எடுத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோவில் குருக்கள் யானை மீது தங்க குடத்தில் புனித நீரை எடுத்து மேள, தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க, கடைவீதி, சன்னதி வீதி வழியாக மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து திருமஞ்சனத்துடன் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் அம்மன் வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்று, கீழரத வீதி மேல ரத வீதி வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் பஞ்சப்பிரகார சுற்றுகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    நேற்று இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 2022-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து இந்த வழியாக சென்று அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நேற்று பக்தர்கள் வரிசை மண்டபம் திறக்கப்பட்டது.

    இந்த மண்டபம் வழியாக வரிசையில் வரும் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிய பின், மூலஸ்தான விநாயகரை வணங்கி அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மன் சன்னதி, கருப்பண்ணசாமியை வணங்கிய பிறகு ராஜகோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    • இந்த விழா நாளை தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 17-ந்தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்சபூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம், (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர, சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்சப்பிரகார உற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி 6-ந்தேதி இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார். 14-ந்தேதி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 15-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் வட காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து வெள்ளி விமானத்தில் அம்மன் எழுந்தருளி இரவு 12 மணிக்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ந்தேதி இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார்.

    17-ந்தேதி இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 9-ந் தேதி பங்குனி கடைசி வார ஞாயிற்றுக் கிழமையையொட்டி 5-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    மேலும் பாதயாத்திரையாகவும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதைதொடர்ந்து இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நிறைவு பெற்றது.

    • தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில் திருச்சி மாவட் டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் முதன்மையானதாக திகழ்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொரிதல், சித்திரை தேரோட் டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    வேறு எந்த கோவிலிலும் காண முடியாதபடி இந்த கோவிலில் அஷ்டபுஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவங்கள் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமலும் பக்தர்களை காத்து வருகிறார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

    பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வசக்தியையும் பெற்று, படைத்தல் (கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல் (ரிஷப வாகன காட்சி 5-ம் திருநாள்), அழித்தல் (திருத்தேர் 10-ம் திருநாள்), மறைத்தல் (ஊஞ்சல் பல்லக்கு உற்சவம் 11-ம் திருநாள்), அருள்பாலித்தல் (தெப்பம் 13-ம் திருநாள்) ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள்புரிந்து வருவதாக புராண மரபு கூறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 10-ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியாக சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி மற்றும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை தலையில் சுமந்து தாரை, தப்பட்டைகள் முழங்க நேற்றிரவு முதல் இன்று காலை வரை சமயபுரத்திற்கு ஊர்வலமாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் சமயபுரம் முழுவதும் பக்தர்கள் தலைகளாகவே காணப்பட்டன.

    தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையத்தை அடைந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

    திருச்சி மாநகர நாடார் நற்பணிக்குழு சார்பில் சமயபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    11-ம் திருநாளான நாளை அம்மன் வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 12-ம் திருநாளன்று முத்துப்பல் லக்கிலும் வீதியுலா நடக்கிறது. விழாவின் 13-ம் நாளான வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 12 மணிக்கு மேல் பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

    மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறுகிறது. இந்த சித்திரை தேர்த்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களை காத்து வருகிறார்.
    • பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி மாலை போட்டுக்கொண்டு கடும் விரதம் இருப்பார்கள்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அவற்றில் முக்கியமானதாக கருதப்படுபவை தைப்பூசம், மாசி மாதம் நடக்கும் பூச்சொரிதல் விழா, சித்திரை மாதம் நடக்கும் தேர்த் திருவிழா, வைகாசியில் நடக்கும் பஞ்சப்பிரகார விழா ஆகியவையாகும். தைமாத விழாவில் தைப்பூசத்தன்று அம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று தனது அண்ணனான ரெங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகளை பெறும் நிகழ்ச்சி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. பூச்சொரிதல் விழா மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி, அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைகிறது.

    பூச்சொரிதல் தொடங்கிய நாளில் இருந்து நிறைவடைவது வரை 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களை காத்து வருகிறார். அந்த காலகட்டத்தில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் இல்லாமல், துள்ளு மாவு, இளநீர், கரும்பு, பானகம், நீர்மோர், வெள்ளரி போன்றவை வைத்து நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்களும் மஞ்சள் உடை உடுத்தி மாலை போட்டுக்கொண்டு கடும் விரதம் இருப்பார்கள்.

    இவர்களும் அம்மனுக்கு படைக்கப்படும் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.தன்னை நம்பி வரும் பக்தர்களை சமயபுரம் மாரியம்மன் என்றுமே கைவிட்டதில்லை என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக தன்னை நாடி வரும் பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், நினைத்தது நடக்கவும், வேண்டும் வரம் கிடைக்கவும், பக்தர்களுக்காக அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இந்த அம்மனின் தனிச்சிறப்பு ஆகும். இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனை நினைத்து மனமுருக வேண்டி வணங்குவார்கள்.

    அமாவாசை அன்று இரவு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை விடிய, விடிய கண்விழித்து வேண்டி, அதிகாலையில் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதன் காரணமாகவே அமாவாசை அன்று கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி இருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    • 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார்.
    • 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று இரவு (திங்கட்கிழமை) அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே சமயபுரம் வந்து குவிய தொடங்கினர்.

    முன்னதாக தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி கடும் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்தில் புனித நீராடி, அங்கிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று கோவிலுக்கு முன்புறமும், தீபம் ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலை வலம் வந்த அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தெப்பகுளம், சமயபுரம் சந்தைகேட் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தை தொடர்ந்து வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • முகூர்த்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • ராஜகோபுரம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை தேர் திருவிழா வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முன்னதாக காலையில் கோவில் கொடிமரம் முன்பு முகூர்த்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல், கண்காணிப்பாளர் ஸ்டாலின்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேரோட்டம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
    • 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார்.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை 6.30 மணிக்குமேல் 8.மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதேபோல ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இரவு 8 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரைவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • ஜூலை 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது.

    மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில், ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இடையாற்று மங்கலத்தை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற உபயதாரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

    அதைத் தொடர்ந்து, ராஜகோபுரத்தில் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து செல்லும் காட்சி, அக்னிசட்டி ஏந்தி பெண் பக்தர் நடந்து வருவதைப் போன்ற அழகிய சிற்பம், விரதமிருந்து அலகு குத்தி நடந்து வரும் பக்தர் போன்ற சிற்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டு தரமான முறையில் வர்ணம் தீட்டும் பணி நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜகோபுரம் கட்டுமான பணிக்கு அமைக்கப்பட்டிருந்த சவுக்கு கட்டைகளால் ஆன சாரங்களை பிரிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ராஜகோபுரம் தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    ×