search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமயபுரம் மாரியம்மன்"

    • ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும்.

    மண்ணச்சநல்லூர்:

    நடிகர் கஞ்சாகருப்பு தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அம்மனுக்கு அவர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அக்னி சட்டியை அவர் கோவிலில் இறக்கி வைக்கும்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு வணங்கினார். பின்னர் அம்மனை தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறேன். சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டுவது நிச்சயம் நடக்கும்.

    எதிர்க்கட்சியினர்கள் எடப்பாடி பழனிசாமியை பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிக்கிறார்கள். காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும். தூற்று பவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்களுக்குத் தெரிந்த பாடல்களையே விதம்விதமாக பாடுவர்.
    • தாங்கள் உண்ணும் எளிய உணவையே அம்மனுக்கு வைத்துப் படைப்பர்.

    தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் இருந்தாலும் கூட, ஒவ்வொரு கோவிலிலும், ஆண்டில் ஏதேனும் ஓரிரு நாட்களோ அல்லது சில நாட்களோ மட்டும் விழாக்கள் நடைபெறும். ஆனால், சமயபுரம் கோவிலில் ஏதேனும் விஷேச நிகழ்ச்சி மாதம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும். முக்கியமாக கிராம மக்கள், மன மகிழ்ச்சியோடு, தங்கள் சொந்த வீட்டு விழாவாக தங்கள் ஈடுபாட்டோடு கொண்டாடுவர்.

    இந்தச் சிறப்பு வேறு எந்த கோவிலுக்குமில்லை. பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி முளைப்பாரி, செடல் எடுத்தல், கரகம், தீச்சட்டி ஏந்துதல், மாவிளக்கு, குத்துவிளக்கு பூஜை, பால்குடம், பூக்குழி என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கோவில்களில், மக்கள், தாங்கள் தொன்று தொட்டு பின்பற்றி வந்த மரபை கொஞ்சமும் மாற்றாமல் உற்சாகமாகக் கொண்டாடுவர்.

    தாங்கள் உண்ணும் எளிய உணவையே அம்மனுக்கு வைத்துப் படைப்பர். தங்களுக்குத் தெரிந்த பாடல்களையே விதம்விதமாக பாடுவர். எந்த ஆகம விதிகளும் அந்நிய மொழிகளும் அவர்கள் ஈடுபாட்டிலும், வழிபாட்டிலும் குறுக்கிடுவதில்லை. அம்மனை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக, தங்கள் தாயாக, மகளாக, தங்களுக்குத் துணை நிற்கும் காவல் தெய்வமாகக் கருதுகின்ற அந்தப் பிணைப்பு இவ்விழாக்களில் தெரியும்.

    அதே போல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் எத்தனையோ பிரார்த்தனைகள் உண்டு. அதில் ஒன்று கரும்புத் தூளி பிரார்த்தனை. குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வேண்டிக் கொண்டு குழந்தைப்பேறு பெறுகின்றனர். அப்படி பெற்றவர்கள், சீமந்தத்தின் போது அளிக்கப்பட்ட, சீமந்தப் புடவை வேஷ்டியை பத்திரமாக வைத்திருந்து, குழந்தை பிறந்த ஆறாவது மாதம், மஞ்சளில் நனைத்து, கரும்பு தொட்டில் செய்து குழந்தையைக் கிடத்தி, தந்தை முன்னும் தாய் பின்னுமாக மூன்று முறை வலம் வருகின்றனர். இவையெல்லம் அம்மனை மனதில் வைத்து பக்தர்கள் வழிபடும் முறையாகும்.

    • சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகள் இருப்பதாக கூறுகின்றனர்.
    • அவர்களை பற்றிச் சுருக்கமாக பார்ப்போம்...

    தமிழக அம்மன் கோவில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு என்பதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகள் இருப்பதாக கூறுகின்றனர். அவர்களை பற்றிச் சுருக்கமாக பார்ப்போம்...

    1.சமயபுரம் முத்துமாரியம்மன்

    திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோவில் உருவானதாகவும் கூறப்படுகிறது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள்.

    2.அன்பில் முத்துமாரியம்மன்

    திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். மகா மாரியம்மன் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இத்திருக்கோவிலை முதலாங்க சக்கரவர்த்தி கட்டியதாகக் கூறப்படுகிறது. சமயபுரம், நார்த்தான் மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்னை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க அம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும் மூத்தவள் என்ற கருத்தும் உண்டு. அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. மற்ற கோவில் களில் அம்மனுக்கு குழந்தை கிடை யாது. நண்ப கல் 12.00 மணியளவில் கண்குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குணமடைவதாக நம்பப்படுகிறது.

    3.புன்னை நல்லூர் முத்துமாரியம்மன்

    தஞ்சைக்குக் கிழக்கே உள்ள இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலவரான அம்பாளுக்கு திருமுழுக்கு செய்யப்படுவதில்லை தைலக்காப்பு சாற்றப்படுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு திருமுழுக்கு நடைபெறும். அம்மையால் பாதிக்கப்பட்ட வர்கள் பிராத்தனைக்காக இங்குத் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எண்வகைச் சக்திகளைக் காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று "சோழ சம்பு" என்னும் நூல் கூறுகிறது.

    4.நார்த்தமலை முத்துமாரியம்மன்

    முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தமலை என்கிற ஊரில் அமைந்துள்ளது. நார்த்தமலை கோவில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என 9 மலைகள் சூழ அமைந்துள்ளது. இந்த நார்த்தமலை முத்துமாரியம்மன்

    சந்நிதியில் வடக்குபுறம் அமைக்கப்பட்டிருக்கும் முருகன் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் இக்கோவிலில் நடக்கும் பங்குனி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். நீண்ட காலமாக உடலில் பல வியாதிகள் ஏற்பட்டு அவதிபடுபவர்கள் இக்கோயிலில் "அக்னி" காவடி எடுத்து வழிபட நோய்கள் தீருவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து கரும்பு கொண்டு தொட்டில் செய்து வைத்து அம்பாளை வழிபடுவதால் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் கிடைப்பதாகக் கூறுகின்றனர். தல புராணங்களின்படி இலங்கையில் ராவணனுடனான யுத்தத்தின் போது ராம - லட்சுமணர் மற்றும் காயம்பட்ட வானர வீரர்க ளைக் குணமாக்கும் பொருட்டு, இமயத்தில் இருந்து ஆகாய மார்க்க மாக சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கி வந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து கீழே விழுந்த பாறைகளே இங்கிருக்கும் மலைகள் எனக் கருதப்படுகிறது.

    5.தென்னலூர் முத்துமாரியம்மன்

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே "திருநல்லூர்" என அழைக்கப்படும் "தென்னலூர்" ஆகும். இந்த கிராமத்தின் அதிதேவதை "முத்துமாரியம்மன்" ஆகும். இந்த அம்மன் தானாக உதித்த சுயம்புவடிவான காவல்தெய்வம் ஆகும். மிக எளிமையாக கூரையிலே குடிகொண்ட குலதெய்வம் இந்த "முத்துமாரியம்மன்" ஆகும். தென்னலூர் முத்துமாரியம்மன் தலவரலாறு கர்ணபரம்பரை கதைகளாக (செவிவழிக் கதைகள்) அறியப்படுகின்றது. இதற்கென கல்வெட்டு குறிப்புகளோ, ஓலைசுவடிக் குறிப்புகளோ, பட்டயங்களோ இல்லை எனலாம்.

    6.கொன்னையூர் முத்துமாரியம்மன்

    தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ள கிராமம் கொன்னையூர். இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மையப்பகுதியில் கோவில் கொண்டு, நாலாத் திசையிலும் உள்ள மக்களையும், காடு கரைகளையும் கால்நடைகளையும் காத்து வருகிறாள் முத்து மாரியம்மன்.

    7.வீரசிங்கம்பேட்டை முத்துமாரியம்மன்

    திருவையாற்றிற்கு அருகில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம் வீரசிங்கம்பேட்டை. வீர சோழன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட வீரணன்சோலை என்ற இடமே நாளடை வில் வீரசிங்கம்பேட்டை ஆகியுள்ளது. சுற்றிலும் திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பழனம் ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. பொதுவாக மாரியம்மனின் அக்காள், தங்கை, ஏழு பேர் என்பர். அவர்களில் கடைசி தங்கை வீரசிங்கம்பேட்டையில் வீற்றிருப்பவள் இந்த இள மாரியம்மன் என்பது தல வரலாறு. மேற்குறிப்பிட்ட செய்திகளால் மாரியம்மன் வழிபாட்டில் தமிழ்மக்கள் ஒன்றியிருப்பதும் அருளாட்சியால் ஈர்க்கப்பட்டு பக்தி பரவசத்தில் இருப்பதும் அம்மன் மீது மக்கள் கொண்டுள்ள ஈடுபாடும் மாரியம்மனின் அருஞ்செயல்களும் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்தந்த பகுதி மாரியம்மன் பூச்சொரிதல் விழாவின் போதும் திருவிழாக்காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியும் காவடிதூக்கியும் அலகு குத்தியும் பெருமை செய்கின்றனர். தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று சொல்வதைக் கர்நாடகத்தில் சாமுண்டி, கேரளாவில் பகவதி,வங்காளத்தில் காளி, உத்தரபிரதேசத்தில் விந்தியாவா கினி, அசாமில் காமாக்யா, காஷ்மீரில் ஷீர்பவானி, மராட்டி யத்தில் துலஜா பவானி, பஞ்சாப்பில் ஜவாலாமுகி, குஜராத்தில் அம்பாஜி என்று அழைக்கின்றனர்.

    • வேண்டியது வேண்டியபடி கிடைக்க வருகிறார்கள்.
    • நேர்த்திக் கடன் தீர்க்க வருகிறார்கள்.

    மஞ்சள் உடையும் மனசெல்லாம் பக்தியுமாக எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். திருச்சியின் எல்லா திசைகளில் இருந்தும் வெறுங்காலில் நடந்தே வருகிறார்கள். வேண்டியது வேண்டியபடி கிடைக்க வருகிறார்கள். நேர்த்திக் கடன் தீர்க்க வருகிறார்கள். லட்சம் பிள்ளைகளை அரவணைக்க ஒரு தாய் இருக்கிறாள் என்கிற நம்பிக்கையில் வருகிறார்கள். வட்டாரத் தமிழால் காற்றையும் சொக்கவைத்து,

    "சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே

    கண்ணபுரத்தாளே காரண சவுந்தரியே

    ஆயிரம் கண்ணுடைய அலங்காரி வாருமம்மா"

    என்று பாடிவரும் தன் பிள்ளைகளுக்காக தாயான மாரியம்மன் காத்திருக்கும் இடம்தான் 'சமயபுரம்.'

    கரிகால் பெருவளத்தான் என்னும் திருமாவள வனால் வெட்டப்பட்ட " பெருவள வாய்க்காலின்" வடகரையில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். இது கொள்ளிடம் நதிக்கு வடக்கே 11 கி.மீ தொலைவில் உள்ளது. பிச்சாண்டார்கோவில் ரெயிலடியில் இருந்து 5 கி.மீ பயணித்தால் கோவிலை அடையலாம். மாகாளிகுடி, நரசிம்ம மங்கலம் கள்ளிக்குடி, கண்ணனூர் ஆகியவை சமயபுரத்தைச் சேர்ந்த சிற்றூர்கள்.

    கருவறையில் உள்ள 'மாரியம்மன்' முற்றிலும் சுதை யாலான உருவமாகும். அதனால் அதற்கு அபிஷேகம் கிடையாது. அபிஷேகத்தால் ஏற்படும் சிதைவுகளைத் தவிர்ப்ப தற்காகவே, உலோகத்தால் ஆன உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சில கோவில்களைப்போல், 'கோப முகமாக' இல்லாமல் அன்பும் அருளும் துலங்கும் முகத்தோடு சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள்.

    • மாரியம்மனை தரிசிக்க பல லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
    • பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருநறையூர் என்னும் அழகிய ஊர். இந்த ஊரின் நாச்சியார் கோவிலின் முன்னர் வளையல் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். மாரியம்மன் பக்தரான அவர் வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு வளையல்கள் வைத்து வழிபாடு நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, உடல் நலம் குன்றியதால் அவரால் சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த வியாபாரி மாரியம்மனை தரிசிக்க முடியவில்லையே, அவளுக்கு வளையல்கள் அணிவிக்க முடியவில்லையே என மனம் வருந்தினார். பெருந்துயரத்தில் ஆழ்ந்த அவர், மாரியம்மனை பார்க்க வேண்டுமென வேண்டிக் கொண்டார். தன் பக்தனுக்காக ஆகாய மார்க்கமாய் சமயபுரத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன், திருநறையூருக்கு வந்து, அவன் முன்பு காட்சி அளித்தார். சாஷ்டாங்கமாக வணங்கிய வளையல் வியாபாரி, வளையலை மாரியம்மனுக்கு அணிவித்தார்.

    தனக்காக வந்த அம்பிகையிடம் வியாபாரி ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் அவர் இருக்கும் ஊரான திருநறையூர் என்னும் நாச்சியார்க்கோவிலுக்கு அம்பிகை வந்து மக்களுக்கு நல்லாசி புரியவேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். அம்பிகையும் அவ்வாறே ஆகட்டும் என வாக்குறுதி அளித்தாள். தன் பக்தனுக்கு செய்த சத்தியத்திற்காக அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுத்து வருகிறாள் என்பது ஐதீகம்.

    ஆகாய மார்க்கமாக வருவதால், இவருக்கு ஆகாச மாரியம்மன் என்னும் பெயர் வந்தது. வளையல் வியாபாரிக்கு வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாரியம்மன் இந்த தலத்திற்கு வருவாள். அம்மன் வருகை தரும் தினத்தில் இருந்து உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. இவள் வருகையின் போது ஊரே திருவிழாக்கோலம் பூண்டு களை கட்டுகிறது.

    10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசிக்க பல லட்சக்கணக்கான மக்கள் நாச்சியார்கோவிலுக்கு வருகிறார்கள். இந்த திருவிழாவிற்காக மாரியம்மனை தர்ப்பை புல்லால் ஒவ்வொரு வருடமும் புதியதாக உருவாக்குகின்றனர். சமயபுரம் மாரியம்மனை போல் சிவந்த முகம், கூரிய பற்கள், அகண்ட விழிகள் சர்வ ஆபரணங்களுடன் அம்மன் அலங்கரிக்கப்படுகிறாள். நாதஸ்வர மேளம் முழங்க, புஷ்ப பல்லக்கில் ஏறி அமர்ந்து செல்வாள்.

    அங்கு அவளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள். திருநறையூருக்கு புடைசூழ வந்து 10 நாட்கள் அங்கேயே தங்கும் இந்த தர்ப்பையால் செய்யப்பட்ட மாரியம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இதில் அம்மனுக்கு சேஷசயன அலங்காரம், மதன கோபால அலங்காரம், லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், வீற்றிருந்த திருக்கோலம், மகிஷாசுர மர்த்தினி, நின்றிருந்த திருக்கோலம், ராஜராஜேஸ்வரி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.

    ஒரு பெண் குழந்தை படிப்படியாய் வளர்ந்தால் எப்படி அலங்காரம் செய்வோமோ அதேபோல் ஒவ்வொரு நாளும் அம்மன் வளர்ச்சி அடைவதுபோல் அலங்காரம் செய்வார்கள். முதல் நாளில் சிறிய திருமேனியுடன் காட்சியளிக்கும் மாரியம்மன் கடைசி நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தி ன்போது வளர்ந்த திருமேனியுடன் காட்சியளிப்பாள். 10 நாள் திருவிழா முடிந்தவுடன், மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் சமயபுரம் புறப்படுவாள். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருநறையூர் வருவதால், அவள் சமயபுரம் புறப்படும்போது மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுக்கின்றனர். வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடியில் அம்பிகை காட்சியளிக்கிறாள்.

    • தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது.
    • அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது.

    திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

    அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமை களிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது.

    ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பையும், வளத்தையும் உணர்த்துவதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    திருவிழாக்கள்

    தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.

    • சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர்.
    • சமயபுரம் மாரியம்மன் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

    பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் கண்ணனூரில் உள்ள தன் தாய் ஆதிமாரியம்மனைக் காண வருகிறாள். அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். இவ்வூரில் இருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டில் இருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்து விடுகின்றனர்.

    சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர். பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை, ஆனால் கண்ணனூரில் உள்ள தாய் ஆதிமாரியம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சமயபுரத்து அம்மனைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்ப ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது. இது மாரியம்மன் பிறந்த இடமாகவும் கருதப்படுகிறது. விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சியாக இருப்பது போலவும், திரும்பி ச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் மாரியம்மன் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள்.

    தாயைப்பிரிந்து செல்வதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கல்விக் கொள்வதாக நம்பிக்கை, தமிழகத்தி லேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோவில்களில் இது முக்கியமான கோவில், தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.

    இத்தலத்தில் வேண்டி கொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குண மாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது. கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம். (காரணம் இத்தலத்து மாரியம்மன் சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால்) ஸ்ரீராமன் தகப்பனார் தசரதசக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

    • மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள்.
    • அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

    அம்மனின் தோற்றத்தை வார்த்தைகளாலேயே சொல்லலாம். "ஐந்து தலைப் பாம்பு குடை விரிக்க, தலையில் தங்கக்கிரீடம் அணிந்து, மாதுளம்பூ நிறத்தவளாய், எட்டுக் கரத்திலும் கத்தி, உடுக்கை, தாமரைப்பூ, திரிசூலம், கபால வடிவம், பாசம், காண்டீபம், மணி" ஏந்தி, இடதுகால் பீடத்தில் மடித்திருக்க, வலது காலில் மூன்று அசுரர்களின் தலையை மிதித்த வண்ணம் கிழக்குத் திசை நோக்கி சமயபுரத்தாள் அமர்ந்திருக்கிறாள்" அம்மனை பற்றி நீங்கள் அறிந்திராத 50 தகவல்களை இங்கே பார்ப்போம்.

    1. 'மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.

    2. அன்னை இடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயை குறிக்கிறது.

    3. எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.

    4. நட்சத்திரங்கள் 27 ஆதிக்கங்களை தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்புரிகிறாள் சமயபுரத்தாள்.

    5. வசுதேவர் தேவகி தம்பதியின் 8-வது குழந்தையான கிருஷ்ணர், நந்தகோபன் யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்படுகின்றனர்.

    6. அந்தப் பெண் குழந்தை சிறைக்கு வந்து கம்சனை கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து "உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!" என்று கூறி மறைந்தது.

    7. அந்த குழந்தை தான் சமயபுரம் மாரியம்மன் என்று தல வரலாறு கூறுகிறது. தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

    8. விஜயநகர மன்னர், படைகளோடு சமயபு ரத்தில் முகாமிட்டார். போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்கு கோவில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார்.

    9. அதன்படி போரில் மன்னர் வெற்றி பெற்றார், அம்மனுக்கு கோயில் கட்டி கொடுத்தார். நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

    10. உரிய காலத்தில் கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், 'சமயபுரத்தாள்' என்பது அம்மனது அடைமொழி, "சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்" என்ற முதுமொழி.

    11. தற்போதைய ஆலயம் கி.பி. 1804ல் விஜ யரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

    12. பக்தர்களது முயற்சியால் 1984-ம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோவில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

    13. ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள்புரிகிறார்கள். அம்மனின் உக்கிர த்தை தணிக்க காஞ்சி பெரியவரின் ஆலோசனை வேண்டினர்.

    14. காஞ்சி பெரியவரின் ஆலோசனை படி ஆலய வலப்புறத்தில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர்.

    15. இந்த பிரதிஷ்டை வாயிலாக அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

    16. கிருபானந்த வாரியார் ஐயா தமக்கு கிடைத்த நன்கொடை மூலம் கோவிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

    17. விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

    18. ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    19. அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

    20. பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது 'பச்சைப் பட்டினி விரதம்' எனப்படுகிறது.

    21. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை நிவேதிக்கப்படுகின்றன.

    22. அதாவது சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன.

    23. சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் தாயின் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் பூமாரி பொழிந்து குளிரச் செய்கிறார்கள்.

    24. சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

    25. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோவில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பவுர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

    26. இரண்டாம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

    27. சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

    கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.

    28. அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் ஈரத்தன்மையுடன் வைத்திருக்கிறார்கள், அன்னை குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

    29. பார்வை இழந்த சிவந்திலிங்கசுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.

    30. பெருமாளிடமும், ஈஸ்வரரிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!

    31. கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள்.

    32. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் 'மகமாயி'க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர்.

    33. சித்திரை திருவிழா பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார்.

    34. இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

    35. நமது குறைகளை காகிதத்தில் எழுதி, தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி பிரார்த்தித்தால் உடனே குறைகள் தீருகிறது.

    36. இங்கு 'கரும்புத்தூளி எடுத்தல்' என்ற விசேஷப் பிரார்த்தனை விசேஷம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல்.

    37. அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை வேஷ்டி பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்து 6-வது மாதத்தில் பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.

    38. அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள்.

    39. அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

    40. தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால் அம்மனே இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

    41. அம்மை நோய் பிடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது

    42. அம்மன் சிவரூபமாக கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோவில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

    43. உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல், எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

    44. ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வணங்கிய பின்னரே, சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.

    45. தமிழகத்தில் பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக காணிக்கை பெறும் தலம் சமயபுரம்.

    46. தாலி வரம் வேண்டி தாலி தங்கம் மிகஅதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.

    47. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் சமயபுரம் அழைக்கப்படுகிறது.

    48. மாரியம்மன் கோவிலின் வடக்கே செல்லாயி அம்மன் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும் இடம் பெற்றுள்ளன.

    49. கோவிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசு சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது.

    50. கடந்த மே 25, 2018 வெள்ளிக்கிழமை கோவில் நிர்வாகத்திற்கு சொந்த மான மசினி என்ற 10 வயதான பெண் யானை கோபத்தின் ஆவேசம் காரணமாக பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றது.

    • சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
    • அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.

    சக்தி தீர்த்தம்

    தென்னகத்தின் பெருமைமிக்க காவேரியின் உபநதியான வெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் தெற்கு தேரோடும் வீதியின் தென்புறத்தில் உள்ள புகழ்பெற்ற தீர்த்தமாகும். இத்தீர்த்தம் அருகே உள்ள படித்துறையில் சுப்பிரமணிய கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களது முடி காணிக்கையினையும், புனித நீராடுதலையும், ஆதி முதல் இன்றளவும் இங்கு மேற்கொள்வதை வழக்கமாக கொள்கின்றனர். அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இங்கு நீராடி வழிபாடு மேற்கொண்ட பின்னரே பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணத்தை செய்து முடிப்பர். இங்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், ஆடி 18 தீர்த்தவாரியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. அதுசமயம் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் இத்தீர்த்தத்தில் நீராடி மகாமாரியின் அருளை பெற்று செல்கிறார்கள்.

    மகமாயி தீர்த்தம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வடமேற்கே, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜய நகர நாயக்கர் கால கோவில் திருப்பணிகளில் இந்த குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்று இருப்பதையும் காணமுடிகிறது.

    இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டுவரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வெளியேறும், நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பாகும். பிற காலங்களில் மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்பஉற்சவபெருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு முதல் நாளும், சித்திரை தெப்பமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாட்களில் மாரியம்மன் மேற்கு கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறாள்.

    முற்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இக்குளம் தற்போது கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்தி வருவது இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்கு ளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற ஐதீகமும் உள்ளது.

    சர்வேஸ்வரன் தீர்த்தம்

    இத்தீர்த்தம் வடமேற்கேயுள்ள வாயு மூலையில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலின் தீர்த்த வளாக பகுதியில் கோவில் பணியாளர் குடியிருப்புகள் உள்ளன. புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகா மகத்திற்கு முன்பும், கங்கா தேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகணம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமக குளத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தான் வரலாற்று சிறப்பு பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்கு பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தத்தை தன்னகத்தே அதிசய மகாமக தீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கி யதாக காணப்படுகிறது. இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தத்தில் கும்பகோணத்தில் நடைபெறும் ஒவ்வொரு மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின்போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச்செல்வது வழக்கம்.

    ஜடாயு தீர்த்தம்

    கனகாம்பிகை உடனுறை ஸ்ரீமுக்தீஸ்வரர் கோவிலின் தெற்கேயும், மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கேயும் அமைந்திருப்பது வரலாற்று சிறப்பு பெற்ற ஜடாயு தீர்த்தமாகும். ஜடாயுவிற்கு இறைவன் முக்தி கொடுத்ததாக கூறப்படும் புகழ்பெற்ற தலம் இதுவே ஆகும். ஜடாயுவின் தாகத்தை தணிக்கவும், ராவணன் சீதையை கடத்தி சென்ற விபரத்தை ராமனிடம் கூறும்வரை தன் உயிர் பிரியாமல் இருக்க ஜடாயு மகேஸ்வரனிடம் வேண்ட மகேஸ்வரனால் பிரசித்தி பெற்றதாகவும் இத்தீர்த்தம் கருதப்படுகிறது. இன்றும் வற்றாத நீர்நிலையை கொண்டு இந்த தீர்த்தம் விளங்குகிறது. மேலும் உயிர்பிரிந்த ஜடாயு தன்னுடைய தந்தை தசரதனுக்கு நண்பன் என்பதால் ஜடாயுவிற்கு ஈமக்கடன்களை செய்ய ராமன் முடிவு செய்தான். தன் கை அம்பினால் ராமன் பூமியில் நீர் ஊற்று ஒன்றினை உண்டாக்கினான். அதுவே ஜடாயு தீர்த்தம் என்பதாயிற்று என்ற மற்றொரு புராண குறிப்பும் இதற்கு கூறப்படுகிறது.

    கங்கை தீர்த்தம்

    இக்கோவிலின் உப கோவிலான உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலின் கிழக்கில் அமைந்திருப்பது கங்கை தீர்த்தமாகும். இது அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கே அமைய பெற்றுள்ளது. காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என கொண்டி ருந்த விக்கிரமாதித்தன் தமது இஷ்ட தேவதையான காளி பூஜைக்கு நித்திய பூஜைகளை செய்ய கங்கா தேவியிடம் வேண்டினான். கங்கையும் அங்கு பிரத்தியம்சமாய் தோன்றினாள். இதுவே கங்கை தீர்த்தம் என்னும் வற்றாத தீர்த்தமாகும். மகளிவனத்து மாகாளி வீற்றிருக்கும் இந்த இடத்திலுள்ள தீர்த்தம் வற்றாத தன்மையை கொண்டதாகும். திருமண தடைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.

    மூளைக்கோளாறு, குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்த அற்புத மருந்தாக இந்த புனித தீர்த்தம் இன்றும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகிறது.

    அம்பாளின் அளவிலா கருணையினாலும், பேரொளியினாலும் இந்த தீர்த்தத்தை பயன்படுத்தும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நிலைகளில் நலன் பயப்பதாக அறியப்படுகிறது. அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும். செய்வினை மற்றும் மந்திர சக்தியை இக்கோவில் தீர்த்தம் கட்டுப்படுத்தும். அனைத்து திருக்கோவில்களிலும் இறை சக்தியை நிலை நிறுத்த இத்தீர்த்தம் மிகப்புனிதமாக பயன்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் புனித தீர்த்தம், காவேரியின் உபநதியாக இருப்பதால் இதில் குளித்தவுடன் சகலவித பாவங்களும், வியாதிகளும் அம்பாளின் அனுக்கிரகத்தால் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இப்புனித நீரில் அம்பாளின் நாமத்தை மூன்று முறை உச்சரித்து மூழ்கி எழுந்தால் இதுவரை கண்டிராத உள்ளத்தூய்மை, உடல் தூய்மை ஆகியன ஏற்பட்டு புத்துணர்ச்சியை அடைந்து மக்கள் மனநிறைவு பெறுவது கண்

    கொள்ளா காட்சியாகும்.

    • இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
    • ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

    அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்தி களின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பை யும், வளத்தையும் உணர்த்து வதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்று களைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    திருவிழாக்கள்

    தைப்பூசத் திருவிழா, பூச்சொரி தல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.

    தேர்த்திருவிழா மகிமை

    பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோற்சவத்தை குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும் இன்பதிருவிழா என்றே கூறலாம். இவ்விழாவில் கொடியேற்று விழா, வானறு பாடகள் திருவிழா, தேர்விழா மற்றும் தீர்த்த விழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இத்தகைய வைபவங்கள் மிகச்சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்திபெற்றது என கூறப்படுகின்றது.

    அன்று காலை 10 மணிக்கு அம்பாள் கோவிலில் இருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேருகிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதேதுவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்கு நோக்கி புறப்படும் திருத்தேர், ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

    இத்தருணத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் அம்பாளின் அருளை பெற பல ஊர்களில் இருந்தும் அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர் பவனி மேற்கு வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் கோவிலின் திருவீதி முன்பு திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கிறது. இரவு 10 மணி வரை திருத்தேரில் பொதுமக்களுக்கு அம்பாள் காட்சி தருகின்றாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரை விட்டு இறங்கி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.

    அம்பாளை நேரடியாக சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் திருத்தேர் உலா மூலம் தாங்கள் காணத்துடித்த அம்மனை நேரடியாக கண்டு அருள்பெறும் வாய்ப்பினை பெறுகிறார்கள். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள். முதியவர்கள். இயலாதோர் மற்றும் பிறர் அம்பாளின் அருளை பெற இத்திருத்தேர் திருவிழா மிகச்சிறந்த வாய்ப்பினை தருகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்கள் அனைவரும் பெற்று புத்து யிருடன் தங்கள் இல்லம் நோக்கி செல்கின்றனர்.

    அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனி வரும் அம்பாள் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எந்தவித பேதமும் இன்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆம்னா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுகூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன்வழி அறியப்படுகின்றது.

    தலவிருட்சம் வேப்பமரம்

    மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்ப மரமாகும். சுமார் 1,000 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் இம்மரம் தற்பொழுது காப்பு விண்ணப்ப சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மையிடமாக திகழ்கிறது.அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும்பொழுது தல விருட்சத்திற்கு பூஜைகள் நிகழ்த்துவது வழக்கமான ஒன்றாகும். வேப்பமரம் என்றாலே அது மகமாரியின் மறு பிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்தி கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில்நிலைப்பெறுடையதாக கருதப்படுகிறது.

    பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இந்த வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத்திருமேனி எடுக்கப்பட்டது. தற்பொழுது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறாள். நலன் பயக்கும் வேப்ப மரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்தில கத்திற்கும் தொடர்பு படுத்தி கூறுவர். எனவே சிறப்பு பெற்ற இத்தல மரம் இன்றும் பக்தர்களுக்கும் பொதுமக்களு க்கும் பெரிதும் பயன்பாடு கொண்டதாக போற்றி வணங்கப்படுகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ" "பசித்தோர் முகம் பார் பரம் பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்ன தானத்திற் கென தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடை யாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதான திட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் 23.3.2002 முதல் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாய் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்கென திருக்கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அன்னதான திட்டத்திற்கு பெறப்படும் நன்கொடைகள், உபயங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்கென பேணப்பட்டு வரும் தனிக்கணக்கில் சேர்க்கப்பட்டு இத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் நன்கொடை வழங்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் நன்கொடையாளர்கள் ஆகிய அனைவரும் இத்திரு க்கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம். இத்திட்டதிற்கு செலுத்தப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி விலக்கு பெறும் வசதியும் உள்ளது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் புகழ் பெற்ற ஓவியங்கள்

    ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால், 2010-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி குடமுழுக்குக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2017 பிப்ரவரி 6-ந்தேதி குட முழுக்கு நடத்தப்பட்டது. குட முழுக்கு நடைபெற்ற பின்னர், இரண்டாம் உள் பிரகாரப் பகுதி விசாலமான இடமாக மாறியுள்ளது.

    இப்பகுதியின் மேல்தளத்தில் மிகப்பெரிய அளவில் அம்மனின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 56 அடி நீளம், 36 அடி அகலத்தில் அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சமயபுரம் மாரியம்மனைச் சுற்றி அன்னப்பூரணி, ராஜராஜேசுவரி, கருமாரி, மூகாம்பிகை, தேவி கருமாரி, அபிராமி, மகாலட்சுமி, பிரத்யங்கிராதேவி அம்மன் ஓவியங்கள் அமைந்துள்ளன.

    தென்கிழக்குப் பகுதியில் விநாயகர் சன்னதிக்கு அருகில் மிகவும் நேர்த்தியாக, எத்திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தை தரிசிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியமும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மேலும் பக்தி கணபதி, பாலகணபதி உள்ளிட்ட 8 வகை விநாயகர்களுடன் முருகன், விநாயகர் வழிபடும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தென் மாவட்ட ங்களில் இருந்தும், டெல்டா மாவட்ட ங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோவிலை வந்தடையலாம்.

    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவர்கள் முசிறி, நொச்சியம், நெ.1 டோ ல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக சமயபுரம் வந்தடையலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானை க்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம்.

    சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை போன்ற வட மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் பெரம்பலூர், சிறுகனூர், இருங்களூர் வழியாக சமயபுரம் கோவி லுக்கு வந்து சேரலாம்.

    தொடர்பு முகவரி

    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

    சமயபுரம்,

    மண்ணச்சநல்லூர் வட்டம்,

    திருச்சி மாவட்டம் - 621112.

    தொலைபேசி எண்

    0431- 2670460

    • பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.
    • திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இந்த பூஜை நடைபெற்றது. பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சமயபுரம் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் பரமானந்தம், உள்துறை கண்காணிப்பாளர் அழகர்சாமி, அலுவலக பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று பணம் செலுத்தும் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்கள் விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை தொடர்ந்து ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்த மாதம்(ஜூலை) 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு கட்டமாக ராஜகோபுரத்தின் தரை தளத்தில் இருந்து ஏழு நிலைகள் வரை ஆயிரக்கணக்கான சவுக்குக் கட்டைகளால் கட்டப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

    ×