search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் அம்மன்
    X

    பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் அம்மன்

    • 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களை காத்து வருகிறார்.
    • பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி மாலை போட்டுக்கொண்டு கடும் விரதம் இருப்பார்கள்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அவற்றில் முக்கியமானதாக கருதப்படுபவை தைப்பூசம், மாசி மாதம் நடக்கும் பூச்சொரிதல் விழா, சித்திரை மாதம் நடக்கும் தேர்த் திருவிழா, வைகாசியில் நடக்கும் பஞ்சப்பிரகார விழா ஆகியவையாகும். தைமாத விழாவில் தைப்பூசத்தன்று அம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று தனது அண்ணனான ரெங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகளை பெறும் நிகழ்ச்சி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. பூச்சொரிதல் விழா மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி, அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைகிறது.

    பூச்சொரிதல் தொடங்கிய நாளில் இருந்து நிறைவடைவது வரை 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களை காத்து வருகிறார். அந்த காலகட்டத்தில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் இல்லாமல், துள்ளு மாவு, இளநீர், கரும்பு, பானகம், நீர்மோர், வெள்ளரி போன்றவை வைத்து நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்களும் மஞ்சள் உடை உடுத்தி மாலை போட்டுக்கொண்டு கடும் விரதம் இருப்பார்கள்.

    இவர்களும் அம்மனுக்கு படைக்கப்படும் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.தன்னை நம்பி வரும் பக்தர்களை சமயபுரம் மாரியம்மன் என்றுமே கைவிட்டதில்லை என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக தன்னை நாடி வரும் பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், நினைத்தது நடக்கவும், வேண்டும் வரம் கிடைக்கவும், பக்தர்களுக்காக அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இந்த அம்மனின் தனிச்சிறப்பு ஆகும். இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனை நினைத்து மனமுருக வேண்டி வணங்குவார்கள்.

    அமாவாசை அன்று இரவு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை விடிய, விடிய கண்விழித்து வேண்டி, அதிகாலையில் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதன் காரணமாகவே அமாவாசை அன்று கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி இருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×