search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"

    • பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
    • வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

    இவர்கள் பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் இன்றும் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுககளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
    • விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு இன்று காலை சுற்றுலா வந்தவர்கள், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண திரண்டனர்.

    அங்கு செல்ல காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும் என்பதால் அவர்கள், படகு குழாமில் பயணச்சீட்டு பெற காலை 6 மணிக்கே வரிசையில் நின்றனர்.

    ஆனால் கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. ராட்சத அலைகள் சுமார் 15 அடி உயரம் வரை எழுந்தது.

    இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    எனவே விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43) மீனவர். இவர் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோருடன் பைபர் படகில் கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டார். கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.

    நடராஜன், சூரிய மூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூக்குரலிட்டனர். அப்போது அங்கு மற்றொரு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர். இன்று மதியம் வரை பெருமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே பெருமாள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    மாண்டஸ் புயல், கடல் சீற்றம் உள்ளிட்டவைகளால் 10 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    தென்மேற்கு வங்க க்கடலில் மையம் கொண்டி ருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் காரணமாக சுமார் 30 அடி வரை கடல் அலை முன்னோக்கி வந்து செல்கின்றது. இதன் காரணமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து நள்ளிரவு மற்றும் காலை வரை கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு, சிதம்பரம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு முதல் பனி இருந்த வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவும், குளிரும் இருந்து வருகின்றது. தற்போது கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கி உள்ள தால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவ தோடு, குளிர்ந்த காற்று வீசி வருகின்றது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர் மழை காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவ ஆலை யங்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்ல முடி யாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்ததும் காண முடிந்தது. மேலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைப்பிடித்த படியும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியும் சென்ற தையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- கடலூர் - 12.3, பரங்கிப்பேட்டை - 4.2, அண்ணாமலை நகர் -3.5, சிதம்பரம் - 2.5, கலெக்டர் அலுவலகம் - 0.2. மொத்தம் - 22.70 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

    பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பே ட்டை, காடாம்புலியூர் ஆகிய இடங்களில் இன்று காலை திடீர் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ள நீராகபெருக்கு பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் சாலை களில் ஊர்ந்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகாலமாக சாலை பணியை நடக்கா ததால் பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி- கும்பகோணம் சாலை முற்றிலும் சேதமடைந்து மழையில் சேரும் சகதியமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருகிறது.
    • கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால், காரைக்காலில் இருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லா ததால், பெரும்பாலுமான விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றின் கரையோரமும், மீனவ கிராமங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    வங்க கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.

    கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 30 முதல் 40 அடி வரை கடல் அலை எழும்பி கரைக்கு முன்னோக்கி வருகிறது. கடல் சீற்றம் அதிகரிப்பு காரண மாக கடலூர் மாவட்ட மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். தாழங்குடா பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கு என்று தனியாக இடம் இல்லை. இவர்கள் கடற்கரை யோரம் படகுகளை நிறுத்தி வருகிறார்கள். கடல் சீற்றம் காரணமாக தங்களது படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் கடல் அருகே யாரும் செல்லக்கூடாது என்றும் மீன்வளத்துறை சார்பில் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாருக்கும் இன்று அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதி கடல் பரப்பில் காற்றழுத்தங்கள் இருப்பதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தென் வட இலங்கை அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து வருகிற 21-ந் தேதி தமிழக கடலோர பகுதிக்கு நெருக்கமாக வருவதால் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் வரை உள்ள பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக 21 மற்றும் 22-ந்தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாருக்கும் இன்று அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் பாம்பன் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    பலத்த காற்று காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. பாம்பனில் அலைகள் ஆக்ரோஷமாக இருந்ததால் கடல் நீர் கரையோர வீடுகளில் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    • மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை.

    சீர்காழி:

    சீர்காழி அருகே புது குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பருவநிலை மாறுபாடு மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன்வளத் துறை சார்பில் கடற்கரை ஓரங்களில் தடுப்பு சுவர் மற்றும் மீன் உலர் தளம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கல் கொட்டும் பணி, வலை பின்னும் கூடம், அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார்.

    நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    இதில் காவிரி பூம்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், நிர்வாகிகள் ஜி.என்.ரவி, பழனிவேல், மீன்வளத் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மீன்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ரபீந்திரநாத், உதவி பொறியாளர் சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மீனவர்கள், கடந்த 5-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    புதுச்சேரி : 

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மறு உத்தரவு வரும் வரைமீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கைபடி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள், கடந்த 5-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை அருகே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதை   தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதேபோல், காரைக்கால்மேடு, அக்க ம்பேட்டை, கோட்டச்சேரி மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    • பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு இருந்தது.
    • கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சவுக்கு மரங்கள் மற்றும் ஒரு சில பனை மரங்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன.

    கடலூர்:

    வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று கடலில் சுமார் 14 முதல் 16 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலை காரணமாக 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றது.

    கடலூர் அடுத்த சுபஉப்பலவாடி கடற்கரை பகுதி உள்ளது. இந்த கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடல் நீர் ஊருக்குள் வராமல் தடுக்க இரண்டு ஏக்கருக்கு மேலாக சவுக்கு மரங்கள் மற்றும் கடற்கரை ஓரமாக பனை மரங்கள் இருந்து வந்தன.

    ஏற்கனவே இந்த கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சவுக்கு மரங்கள் மற்றும் ஒரு சில பனை மரங்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன.கடந்த 2 நாட்களாக கடல் அலை சீற்றம் ஆர்ப்பரித்து வந்த காரணத்தினால் கடல் அலை முன்னோக்கி வந்து கடற்கரை ஓரமாக அமைந்திருந்த சாலைகள் சிறிதளவு அடித்து செல்லப்பட்டன. மேலும் கடற்கரை ஓரமாக அமைத்திருந்த பனை மரங்கள் முழுவதும் சாய்ந்து கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து சவுக்கு மரங்களும் தற்போது அடித்து செல்லப்பட்ட நிலையில் மிகக்குறைந்த அளவு சவுக்கு மரங்கள் இருந்து வருகின்றன.

    இந்த நிலையில் தொடர் கடல் சீற்றம் காரணமாக சுப உப்பலவாடி கடற்கரை பகுதி முழுவதும் உருக்குலைந்து வருகின்றது. நாளடைவில் தொடர் கனமழை மற்றும் கடன் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இது மட்டும் இன்றி அந்த பகுதியில் விவசாயத்தை நம்பி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் மக்கள் திடீரென்று கடல் நீர் வந்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் நாசமாவதோடு உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் உருவாகியுள்ளது என பொதுமக்கள் குமுறி வருகின்றனர். ஆனால் அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகத்தினர்களோ கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதற்கு ஏற்ப பலமுறை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது சம்பந்தமாக புகார் அளித்து வந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பெருமளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் இழப்பு மற்றும் நிலப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விவசாய முற்றிலும் பாதித்த பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் என்ன? எடுக்காமல் இருந்தால் என்ன? என சமூக ஆர்வலர்கள் கடும் குற்றசாட்டை எழுப்பி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியை நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது.
    • மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள "மாண்டஸ்" புயலால் இன்று காலை முதல் மாமல்லபுரம் பகுதியில் மழை பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    கடும் இரைச்சலுடன் அலைகள் சுமார் 40 அடி உயரத்துக்கு எழுகின்றன. கடற்கரை கோயில் தென் பகுதியில் உள்ள திறந்தவெளி கடைகள் வரை கடல்நீர் புகுந்து கடைகளை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையோரத்தில் நிறுத்தப்பட்ட படகுகளையும் கடலுக்குள் இழுத்து சென்றன. மீனவர்கள் தங்களது படகுகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக மேடான பகுதியில் நிறுத்தி கட்டி வைத்து உள்ளனர்.

    இருந்தும் கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது. தொடர்ந்து கடல் அலை கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மீட்பு பணியில் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம்

    சேதராப்பட்டு.

    மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கோட்டக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் சின்னமுதலியார் சாவடி, தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3-ம் நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டு படகுகள் மேடான பாதுகாப்பாக இடங்களில் கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் புதுவை பிள்ளைச்சாவடி மீனவ பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பொம்மையார் பாளையத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் மோகன் 24 மணி நேரமும் பேரிடர் மீட்பு குழு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் புதுவை பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஊருக்குள் வந்த கடல் நீரால் அங்கு வசிக்கும் மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

    ராட்சத அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததையடுத்து ஊர் மக்கள் மற்றும் மீனவ குப்பத்து மக்கள் இணைந்து புதுவை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுவைப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே கடல் சீற்றத்திலிருந்து கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைத்தனர்.

    காலாப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×