search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்- தேடும் பணியில் கடலோர போலீசார் தீவிரம்
    X

    கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்- தேடும் பணியில் கடலோர போலீசார் தீவிரம்

    • காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43) மீனவர். இவர் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோருடன் பைபர் படகில் கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டார். கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.

    நடராஜன், சூரிய மூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூக்குரலிட்டனர். அப்போது அங்கு மற்றொரு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர். இன்று மதியம் வரை பெருமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே பெருமாள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    மாண்டஸ் புயல், கடல் சீற்றம் உள்ளிட்டவைகளால் 10 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×