என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பரித்த கடல் சீற்றத்தால் உருக்குலைந்து வரும் கடலூர் சுப உப்பலவாடி கடற்கரை.
ஆர்ப்பரித்த கடல் சீற்றம் உருக்குலைந்து வரும் கடலூர் சுப உப்பலவாடி கடற்கரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு இருந்தது.
- கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சவுக்கு மரங்கள் மற்றும் ஒரு சில பனை மரங்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன.
கடலூர்:
வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று கடலில் சுமார் 14 முதல் 16 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலை காரணமாக 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றது.
கடலூர் அடுத்த சுபஉப்பலவாடி கடற்கரை பகுதி உள்ளது. இந்த கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடல் நீர் ஊருக்குள் வராமல் தடுக்க இரண்டு ஏக்கருக்கு மேலாக சவுக்கு மரங்கள் மற்றும் கடற்கரை ஓரமாக பனை மரங்கள் இருந்து வந்தன.
ஏற்கனவே இந்த கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சவுக்கு மரங்கள் மற்றும் ஒரு சில பனை மரங்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன.கடந்த 2 நாட்களாக கடல் அலை சீற்றம் ஆர்ப்பரித்து வந்த காரணத்தினால் கடல் அலை முன்னோக்கி வந்து கடற்கரை ஓரமாக அமைந்திருந்த சாலைகள் சிறிதளவு அடித்து செல்லப்பட்டன. மேலும் கடற்கரை ஓரமாக அமைத்திருந்த பனை மரங்கள் முழுவதும் சாய்ந்து கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து சவுக்கு மரங்களும் தற்போது அடித்து செல்லப்பட்ட நிலையில் மிகக்குறைந்த அளவு சவுக்கு மரங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தொடர் கடல் சீற்றம் காரணமாக சுப உப்பலவாடி கடற்கரை பகுதி முழுவதும் உருக்குலைந்து வருகின்றது. நாளடைவில் தொடர் கனமழை மற்றும் கடன் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இது மட்டும் இன்றி அந்த பகுதியில் விவசாயத்தை நம்பி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் மக்கள் திடீரென்று கடல் நீர் வந்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் நாசமாவதோடு உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் உருவாகியுள்ளது என பொதுமக்கள் குமுறி வருகின்றனர். ஆனால் அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகத்தினர்களோ கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதற்கு ஏற்ப பலமுறை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது சம்பந்தமாக புகார் அளித்து வந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பெருமளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் இழப்பு மற்றும் நிலப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விவசாய முற்றிலும் பாதித்த பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் என்ன? எடுக்காமல் இருந்தால் என்ன? என சமூக ஆர்வலர்கள் கடும் குற்றசாட்டை எழுப்பி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியை நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






