search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர்"

    • ஏ.குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
    • அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர்.

    கடலூர்:

    கடலூர்அருகே ஏ. குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர். அ.தி.மு.க. சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த கடலூர் மாவட்டத்துக்கு வந்தார்.முதல் கட்டமாக அயன் குறிஞ்சிப்பாடிக்கு சென்று அவர் ஆறுதல் கூறினார். அதன்பினனர் ஏ.குச்சிபாளையத்துக்கு வந்தார். அங்கு ஆற்றில் மூழ்கி பலியானவர்களுக்கு குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்கள்பிரேமலதா கண்ணீருடன் தங்களது குடும்ப நிலவரங்களை தெரிவித்தனர். பின்னர் பிரேமலதா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கினார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் சிவகொழுந்து, அவைதலைவர் ராஜாராம், ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், நகர செயலாளர்கள் சரவணன், கஜேந்திரன் மற்றும் பலர் சென்றனர்.

    • அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
    • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் (11- ந்தேதி) கீழ்கண்ட வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் கடலூர் தோட்டப்பட்டு, பண்ருட்டி சிறுகிராமம், குறிஞ்சிப்பாடி ஆதிநாராய–ணபுரம் (கிழக்கு), சிதம்பரம் கிள்ளை (தெற்கு), காட்டுமன்னார்கோயில் குமாரகுடி, புவனகிரி சி. புதுப்பேட்டை, விருத்தாசலம் மாத்தூர், திட்டக்குடி எறையூர், வேப்பூர் மண்ணம்பாடி, திருமுட்டம் சோழதரம் கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.

    மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுப்பட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க–லாம்.

    தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை–களான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடை பிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • பல்வேறு கடைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்
    • 30 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், பொது விநியோகத்திற்கான தனித் துறை அமைக்க வேண்டும் என கோரிக்கை

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு 30 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொது விநியோகத்திற்கான தனித் துறை அமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

    அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக இருந்தால் பல மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3நாள் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கியதையொட்டி இன்று 3-வது நாளாக 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கடலூர் பழைய கலெக்டர் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட துணைத் தலைவர் முத்து பாபு தலைமை தாங்கினார் நிர்வாகிகள் கந்தன் தேவராஜ் ராமானுஜம் குமரன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி கண்டன உரையாற்றினார் இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர் ராமதாஸ் கணேசன் குமரன் செல்வம் மனோகர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் மூடப்பட்டு இருந்தது காணமுடிந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் அருள் நன்றி கூறினார்.

    • கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.
    • ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் கேபிள் வயர் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவன வளாகத்தில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் உள்ளன.

    இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள கேபிள் வயரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சத்யன் (வயது 24), கடலூர் சுனாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்த மதன் (28), கொள்ளிடம் அருகே உள்ள வழுதலைகுடி கிராமம் முத்து (26), செல்வராஜ்( 55) ஆகிய 4 பேரும் புகுந்து கேபிள் வயர்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த 4 பேரையும் பிடித்து புதுப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆறு, குளங்களில் குளிக்கச் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள்
    • ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கைப் பலகைகளை வைக்கவேண்டும்

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாம் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை அளித்தது. ஆறு, ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் தீரா துயரில் ஆழ்ந்துவிடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அது மட்டுமின்றி, இத்தகைய உயிரிழப்புகள் நம் சமுதாயத்திற்கும், ஒரு பேரிழப்பாக அமைந்து விடுகிறது. எனவே, இதில் நாம் அனைவரும் தீவிர அக்கறையும் கவனமும் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்கள் குளிக்கச் செல்லும் போது, பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    "வந்தபின் தவிப்பதை விட வருமுன் காப்பது மேல்" என்பதை நாம் அறிவோம். இது போன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. குறிப்பாக, ஆறுகள், குளங்கள் உள்ள நீர்நிலைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், காவல் துறையினர், அனைவரும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துச்சொல்வதோடு, அவ்வாறு யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கி, பொதுமக்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விளக்கிச் சொல்லவேண்டும் என்றும் இந்த தருணத்தில் அன்போடும், அக்கறையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கைப் பலகைகளையும், தடுப்புகளையும் வைக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப்பணித் துறையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    வாழவேண்டிய இளந்தளிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதி ஏற்குமாறும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் கூறி உள்ளார்.

    • உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.
    • உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18) த/பெ. சங்கர், பிரியா (வயது 19) த/பெ.குணாளன், மோனிஷா (வயது 16) த/பெ. அமர்நாத், நவநீதம் (வயது 20) த/பெ. மோகன், சுமிதா (வயது 18), த/பெ. முத்துராமன், காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), த/பெ. ராஜ்குரு, மற்றும் பிரியதர்ஷிணி (வயது 15), த/பெ. ராஜ்குரு ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    கடலூர், ஜூன்.5-

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.

    இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உயிர் பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர். அவர்கள் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் 7 பேரும் ஏற்றி செல்லப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    10 வயது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி கடலூரை சேர்ந்த பெற்றோர் தொடர்ந்த வழக்கில், மருத்துவ அறிக்கையை பார்த்ததும் நீதிபதி கிருபாகரண் கண்ணீர் சிந்தினார். #MercyKilling #MAdrasHC
    சென்னை:

    கடலூர் மாவட்டம் சோழத்தரத்தை சேர்ந்த திருமேனி என்ற தையல் தொழிலாளியின் 10 வயது மகனுக்கு வாய்பேச முடியாது, அடிக்கடி வலிப்பு ஏற்படுவதோடு, மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தனது மகனுக்கு பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லாததாலும், தையல் தொழிலாளி என்பதால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    மேலும் தினம்தோறும் தனது மகனுக்கு 20 முறை வலிப்பு வருகிறது. மருந்துகள் கொடுத்தால் வலிப்பு ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தனது மகனை குணப்படுத்த முடியாது என தெரிவித்துவிட்டனர்.

    எனவே தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு சிறுவனை பரிசோதனை செய்வதற்கான தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ குழு தாக்கல் செய்த அறிக்கையில் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள அரிய நோயை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை படித்ததும் நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார். சக நீதிபதி பாஸ்கரனும் சோகமானார்.

    இதனை அடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளுக்கு என தனி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏன் உருவாக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
    2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. #NoMoreChildSexualAbuse #Cuddalore
    கடலூர்:

    சிதம்பரம் அருகே கடந்தாண்டு 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், பழனிசாமி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    குற்றத்துக்காக அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். 
    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். #TNPrisons
    சென்னை:

    சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

    சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில்  40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    ×