search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட் மதுரை கிளை"

    • இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.
    • இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார்.

    மதுரை:

    காரைக்குடியை சேர்ந்த அருள்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக நான் பணிபுரிந்து வந்தேன். என்னை தூதை என்ற கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அதன் பேரில் எனது பணியிட மாற்றத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் என் மீது உயர் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இருந்தனர். பல்வேறு வகையில் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வந்தனர்.

    குறிப்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும், அதிகாரிகள் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்ததாகவும் என் மீது 2017-ம் ஆண்டு பொய்யான வழக்கு பதியப்பட்டது.

    இதனை தொடர்ந்து என்னை பணி இடை நீக்கம் செய்தனர். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் குற்றப்பத்திரிக் கையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    கிராம நிர்வாக அலுவலரான மனுதாரர், இலவச வேட்டி, சேலைகளை திருடி பதுக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரர் தரப்பு வாதம் கவனிக்கத்தக்கது. அதாவது, மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.

    இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார். எனவே அரசின் இலவச வேட்டி, சேலைகளை மோசடி செய்ததாக மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    • இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள்.

    இதில் படுகாயம் அடைந்த அவர்களை, கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., இரட்டைக்கொலை வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி, சாட்சியம் அளித்துள்ளனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கானது பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து, அதுசம்பந்தமாக அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த்குமார், நீதிபதி முன்பு நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் கைதான 2 பேர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த்குமார் அளித்த சாட்சியம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில் அவர்கள் இருவரையும் போலீசார் லத்தி, உருளை போன்றவற்றால் தாக்கினர். மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இதனால் உடல் உறுப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக செயல் இழந்துதான் அடுத்தடுத்து தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர் என கூறியிருந்தனர்.

    அந்த அறிக்கையை எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவைச்சேர்ந்த நாங்கள் ஆய்வு செய்தோம். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின்பு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.

    இவ்வாறு டாக்டர் அரவிந்த்குமார் சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது.
    • இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த முத்து கணேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் ஒரே சமூகத்திற்கு சார்ந்ததாக இருந்து வருகிறது.

    இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கோவிலில் இந்து அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த பணிகளோ அல்லது நன் கொடைகளோ வசூலிக்க அதிகாரம் இல்லை. இந்தக் கோவிலில் தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கண்காணிப்பில் அய்யனார் என்பவர் கோவில் ஆய்வாளராக இருந்து வருகிறார்.

    இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் "திருப்பணி" வேலைகளை கோவில் ஆய்வாளர் அய்யனார் செய்து வருகிறார். இது விதிகளுக்கு எதிரானது.

    கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடர்ந்து பணி நடைபெறுகிறது. எனவே கோவிலில் எந்த பணியும் நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் கோவில் உள்ளே திருப்பணி வேலைகள் செய்து வருவதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    இதனைப் பார்த்து கோபம் அடைந்த நீதிபதி, திருப்பணி குறித்து இடைக்கால தடை விதித்திருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவை மீறி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் எவ்வாறு திருப்பணி வேலை செய்கிறார்.

    இந்நிலை தொடர்ந்தால் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் கோவில் ஆய்வாளர் அய்யனார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி கோவிலில் எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்தார்.

    • 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்.
    • கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர்.

    மதுரை:

    சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர். 2 நாட்களுக்கு முன்பு 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இதன்மூலம் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர்.

    எனவே 22 மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, 2 நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்கும்படி அங்குள்ள கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இலங்கையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு தேவையான சட்டரீதியான உதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதிகள், 1974-ம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த கோர்ட்டுக்கு இல்லை என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.
    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா ராமசாமியாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன்படி 761 ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான தகுதியாக கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    அந்த வகையில் நாங்கள் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்று உள்ளதால், ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இந்த பணிக்கு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்கள் தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    விதிமுறைகளின்படியும், அரசு ஊழியர்கள் சட்டத்தின்படியும் இந்த நடைமுறை சட்டவிரோதமானது. இதனால் எங்களை போன்ற பலரின் அரசு வேலை கனவாகவே போய்விடுகிறது. எனவே சட்டப்படி ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரோடு இன்ஸ்பெக்டர் பணி வழங்கவும், டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர். இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    எனவே கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மனுதாரர்கள் தான் ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள். எனவே அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர்.
    • வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பளிப்பட்டியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் வாசுதேவன் (வயது19). மேலூர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் கோட்டைப்பட்டி விலக்கு அருகே தனது நண்பர் பாலகண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பூதமங்கலம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருந்த வந்த முன்விரோதத்தில் வாசுதேவன் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலூரை சேர்ந்த பிரேம்குமார்(25), வீரா(19), தனுஷ்(20), சுதர்சன்(20), சரவணபுகழ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டையில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், அவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

    • மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
    • அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    மதுரை:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது.

    ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிசிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரிசிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது.

    சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிசிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆகவே யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.

    அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, "சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது. தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை தற்போது பிடித்துள்ளது.

    யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. யானைகள்-காடுகள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தர விடுகிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
    • கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் விசாரணைக்கு பின்பு, இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கோகுல்ராஜ் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோகுல்ராஜ் தன்னுடைய வகுப்பு தோழர் மட்டும்தான். வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும், வாக்குமூலம் அளித்தார்.

    அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக கூறி, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குபதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சுவாதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.

    இதற்கிடையே தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கூறுகையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

    மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.

    வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரம்:

    கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. போதிய சாட்சிகள் இல்லாததால், 5 பேரை விடுதலை செய்தது.

    யுவராஜ், அருண், குமார் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில், யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை அளிக்கப்பட்டது.

    குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

    பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது.
    • காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.

    இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள், நூலகர் அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்துவான், தவில் வித்வான், தாள கருவி இசைப்பவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 281 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து பொது அறிவிப்பாணையை உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படவும் இல்லை. ஆகையால் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது.

    அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனை என்பது அடிப்படை உரிமை மீறலாகும்.

    இந்த நிபந்தனையை அறநிலையத்துறை கமிஷனர் நீக்கி உத்தரவிட வேண்டும். மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    • எனது மகளுக்கு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் கணவர் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம். என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும்போது இதே பகுதியை சேர்ந்தவரும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி, மன உளைச்சலில் என் மகள் இருந்தார். இதற்கிடையே எங்கள் வீட்டு செல்போனுக்கு தொடர்ந்து அருவெறுக்கத்தக்க குறுஞ்செய்தியை அனுப்பி ஜெயகுமார் தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யும்படி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் முறையிட்டேன். அதன்பின் ஒரு மாதம் கழித்து கடந்த டிசம்பர் மாதத்தில் ஜெயகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் 5 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெயகுமார் மீதான பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஜூன் மாதம் 1-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
    • மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர்.

    மதுரை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினீத் மாரியப்பன், என்ஜினீயர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா பட்டேல் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து குருத்திகாவின் பெற்றோர் குற்றாலம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் மீதான விசாரணைக்கு வினீத், குருத்திகா ஆகியோர் சென்று விட்டு திரும்பியபோது வினீத்தை தாக்கி விட்டு குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். இது தொடர்பாக 12-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகி விட்டனர்.

    இந்தநிலையில் தலைமறைவாக இருக்கும் சிலர் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக குருத்திகாவிடம் விசாரிக்க வேண்டும். அவரை ஆஜர்படுத்துங்கள் என்று உத்தரவிட்டது. அதன் பேரில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் குருத்திகாவை ஆஜர்படுத்தவில்லை.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு. முன் ஜாமீன் கோரிய குருத்திகாவின் தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் ஆகியோர் எங்கு உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் அனைவரும் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று வக்கீல் தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர். ஆனால் அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார்.

    • குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது.

    மதுரை:

    தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா பட்டேலை அவரது குடும்பத்தினர் கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி மற்றும் குற்றாலம் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தார்.

    அதன் பேரில் குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தங்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

    அப்போது ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் குருத்திகா பட்டேலின் உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால் மனுதாரர்கள் சரணடையவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருவதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் முந்தைய முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×