என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி கடத்தல் விவகாரத்தில் குருத்திகாவின் உறவினர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
- நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
- மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர்.
மதுரை:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினீத் மாரியப்பன், என்ஜினீயர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா பட்டேல் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து குருத்திகாவின் பெற்றோர் குற்றாலம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் மீதான விசாரணைக்கு வினீத், குருத்திகா ஆகியோர் சென்று விட்டு திரும்பியபோது வினீத்தை தாக்கி விட்டு குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். இது தொடர்பாக 12-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகி விட்டனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருக்கும் சிலர் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக குருத்திகாவிடம் விசாரிக்க வேண்டும். அவரை ஆஜர்படுத்துங்கள் என்று உத்தரவிட்டது. அதன் பேரில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் குருத்திகாவை ஆஜர்படுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு. முன் ஜாமீன் கோரிய குருத்திகாவின் தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் ஆகியோர் எங்கு உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் அனைவரும் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று வக்கீல் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர். ஆனால் அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார்.






