search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பாறு அணை"

    • 35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உப்பாறு அணை உள்ளது. இந்த அணையை நம்பி 6500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

    35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு கூட தண்ணீர் வேண்டாம். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து அணை பகுதியை சேர்ந்த விவசாய கிராமங்களான கெத்தல் ரேவ், தாசம்பட்டி, பொன்னாளிபாளையம், வண்ணாம்பட்டி, தேர் பாதை, தொண்டாமுத்தூர், ரங்கம் பாளையம், நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.
    • கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில், இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.

    அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால், உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தால் உப்பாறு அணைக்கு தண்ணீர் தருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உறுதி அளித்தனர். ஆனால் கூறியவாறு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நடுமரத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி நீரை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினரோ திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகுதான் தண்ணீர் திறக்க முடியும் என கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் கூறும்போது,

    கடந்த 4 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகிறோம். பலமுறை பி.ஏ.பி. அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம். இது தொடர்பாக 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு முந்தையநாள் பேச்சுவார்த்தையை ரத்து செய்கின்றனர். உப்பாறு அணை பகுதி விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் ஊரை காலி செய்துவிட்டு விவசாயத்தை விட்டு விட்டு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இதையடுத்து இன்று 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடக்கிறது. மேலும் விவசாயிகள் அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த அணையை நம்பி உள்ளனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ருத்ராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் நேரடியாக 6500 ஏக்கரும், மறைமுகமாக 15000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த அணையை நம்பி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள், விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

    இதனை கண்டித்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் நேற்றிரவு உப்பாறு அணையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 22-ந்தேதி கலெக்டரிடம் பேசி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவி ட்டனர்.

    130.99 மில்லியன்கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் உப்பாறு அணையிலிருந்து 6,060 ஏக்கர் நிலங்களுக்கும், பாசன பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும்கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செ்லவராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-

    உப்பாறுஅணையிலிருந்து வலதுகரை மற்றும் இடதுகரை கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட 6,060 ஏக்கர் நிலங்களுக்கும்,பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் உப்பாறுஅணையிலிருந்து 2. 4.2023 முதல் 10. 4.2023 முடிய மொத்தம் 130.99 மில்லியன்கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளஉப்பாறு அணையின் வலதுகரை மற்றும் இடதுகரை கால்வாய்களில் தண்ணீர்திறக்கப்படுகிறது. தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வலதுகரை கால்வாயில் 72கனஅடி,வினாடி என்ற அளவிற்கும் மற்றும் இடதுகரை கால்வாயில் 105 கனஅடி/வினாடிஎன்ற அளவிற்கும் மொத்தமாக 177 கனஅடி/வினாடி அளவிற்கு தண்ணீர் வழங்கப்படும்.

    இதனால்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திலுள்ள 6,060 ஏக்கர் பாசனபகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்குபயனடையும். விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து நீர்வளத்துறைக்கு நீர்பங்கீட்டுப்பணிகளில் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , உப்பாறு அணை செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துரை, உதவி பொறியாளர் பூபாலன் மற்றும் துறை விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புபிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.     

    ×