search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடித்திருவிழா"

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. 30-ந் தேதி தபசு உற்சவம் நடக்கிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி யேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு கலச நீர், 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புல், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள், தீபாராத னை நடந்தது. பூஜைகளை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி, பட்டர்கள் ராஜேஷ், சரவணன், குமார் நடத்தி வைத்தனர்.

    இதில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமி ழரசி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தபசு உற்சவம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. தபசு கோலத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு சோமநாத சுவாமி விருஷா பரூடராக காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ந் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ஆடி மழைக்காலத்தின் தொடக்கமாகும்.
    • குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    ஆடி மழைக்காலத்தின் தொடக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.

    திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்.

    இந்த ஆண்டு ஜூலை 21, 28, ஆகஸ்டு 4, 11-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை வருகிறது. மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    அதே போல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் பெண்களின் ஜாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது.
    • ஆடி மாதத்தில் வரும் முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் வரும் முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஆடி தபசு : ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், "பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்" என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இதையடுத்து ஆடி பவுர்ணமி நாளில், பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி 'சங்கர நாராயணர்' கோலத்தில் இறைவன் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு, அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

    ஆடிப்பூரம் : அம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இந்த சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகுசிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.

    ஆடி அமாவாசை : ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி கிருத்திகை : கார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி செவ்வாய்.. ஆடி வெள்ளி.. :'ஆடி செவ்வாய் தேடிக்குளி' என்பார்கள். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதே இந்த பழமொழி கூறும் தத்துவம். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பலரும், 'அவ்வையார் விரதம்' கடைப்பிடிப்பார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.

    ஆடி பெருக்கு : ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

    வரலட்சுமி விரதம் : ஆடி மாத அமாவாசை முடிந்ததும் வளர்பிறை தொடங்கும். இந்த வளர்பிறை நாளில், பெளர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் வருவதுதான் வரலட்சுமி விரதம். எந்த வீட்டிலெல்லாம் வரலட்சுமி விரத பூஜைகள் செய்யப்படுகிறதோ... அந்த வீட்டுக்கு மகாலட்சுமி வருவாள். வருவதுடன் வீட்டிலேயே இருந்து வாசம் செய்வாள். வரம் தரும் வரலக்ஷ்மி விரதத்தை ஆத்மார்த்தமாகச் செய்யுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவாள் அன்னை மகாலக்ஷ்மி!

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தனர்.
    • மீனாட்சி அம்மன் கமல வாகனத்தில் வலம் வருவது வழக்கம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 3-ம் நாளான நேற்று ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவம் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும் நடந்தது. அப்போது அம்மனுக்கு வளையல், திருமாங்கல்ய கயிறு, குங்குமம் வைத்து அர்ச்சனை செய்தனர். பின்னர் அதனை பக்தர்களுக்கு பட்டர்கள் வழங்கினார்கள்.

    ஆடிபூரத்தன்று பல ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கமல (தாமரை பூ) வாகனத்தில் வலம் வருவது வழக்கம். மரக்கட்டையால் செய்யப்பட்ட அந்த வாகனம் நாளடைவில் பழுதடைந்தது. எனவே அந்த வாகனத்தில் அம்மன் வலம் வருவதற்கு பதில் வேறு வாகனத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த வக்கீல் ஒருவர் அம்மனுக்கு புதிதாக கமல வாகனம் செய்து கொடுத்தார். அந்த வாகனம் நேற்று காலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்தானிக பட்டர்கள் ஹாலஸ், செந்தில் சிறப்பு பூஜை செய்த பின்பு புதிய வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இரவு வீதி உலாவில் மீனாட்சி அம்மன் அந்த புதிய கமல வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் பவனி வந்து காட்சி அளித்தார்.

    • ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய மாதம் தான்.
    • ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

    பொதுவாகவே ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய மாதம் தான். ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மனும் அம்மனுக்கு ஊற்றும் கூழ், வேப்பிலை ஆகியவைதான். இந்த ஆடி மாத ஞாயிற்றுக் கிழமையில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி, கூழை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுப்பார்கள். ஆடி மாதம் வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா எல்லா கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமரிசையாக நடத்தப்படும்.

    ஆடி மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடிய தானமானது கோடி புண்ணியத்தை கொடுக்கக் கூடியது ஆகும். இந்த நாளில் தான் கூழ் வார்த்து பக்தர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் நாம் பூஜை செய்து தானம் செய்கிறோம். முருங்கைக் கீரை, வாழைக்காய், காராமணி, கருவாடு, கொழுக்கட்டை, கத்திரிக்காய், மொச்சை, கேழ்வரகு கூழ், மாவிளக்கு ஆகியவை கொண்டு பதார்த்தங்கள் தயாரித்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்து ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் தானம் கொடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு முக்கிய விசேஷமாக இருக்கிறது. இதில் தானம் கொடுப்பவர்களுக்கும், தானம் வாங்குபவர்களுக்கும் பெரும் புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

    அன்னதானம் செய்வது என்பது ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் நீங்கள் செய்யும் சிறு தானமும் மிகப்பெரிய பலன்களை கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. நீங்கள் உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்தால் இந்நாளில் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் பெரும் நன்மை உண்டாகும்.

    ஆடி ஞாயிறு என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபட கூடிய நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. நிறைய பேர் வீடுகளில் இந்த வழக்கம் பாரம்பரியமாகவே இருக்கும். ஆடி மாதம் வரக்கூடிய ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில், அந்த வீட்டினுடைய கன்னி தெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்வார்கள்.

    ஒரு குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைகளை எடுத்து, வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டுமென்றால் அந்த குடும்பத்திற்கு இந்த கன்னி தெய்வத்தின் ஆசிர்வாதம் மிக மிக முக்கியம். ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னி பூஜையை மனநிறைவோடு செய்து உங்கள் வீட்டு கன்னி தெய்வத்தை வேண்டிக் கொண்டால், உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும்.

    உங்கள் வீட்டில் யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் கைகூடி வரும். யாருக்கேனும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் குலம் வாழையடி வாழையாக தழைத்தோங்கும். உங்கள் வீட்டில் இருக்கும் தீராத கஷ்டங்கள் சீக்கிரமே தீரத் தொடங்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து குறைகளை தீர்த்து வைக்கும் தெய்வம்தான் கன்னி தெய்வம்.

    • கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
    • கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

    சஷ்டி விரதம் மிகவும் விசேஷம். அதிலும் ஆடி மாத சஷ்டி அற்புதமான நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பான்

    பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.

    செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

    ஆடி மாத சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.

    விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.

    இன்னும் இயலுமெனில், இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன். கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் எதிர்ப்புகளையும் விரட்டி அருள்வான் முருகப்பெருமான்!

    • அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
    • பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆண்டுதோறும் எல்லா சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதன்படி நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தண்ணீர், எண்ணெய், இளநீர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நுழைவுவாயில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், 108 சிவலிங்கங்கள், நந்தி, முருகன், வருணபகவான், சண்டீகேஸ்வரர், அய்யனார் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சை வடக்குஅலங்கத்தில் உள்ள வடபத்ர காளியம்மன், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன்கோவில், வல்லம் ஏகவுரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    • ஆடித்தபசு விழா 31-ந்தேதி நடக்கிறது.
    • 31-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆடித்தபசு விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆடித்தபசு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் புனிதநீர் எடுத்து வந்து கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு விழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மூலஸ்தான சுவாமி, அம்பாளுக்கு கும்பாபிஷேகம், யாககேள்வி, தீபாராதனை, காலை 6 மணிக்கு அம்பாள் தபசு புறப்படுதல், 8.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வீதிஉலா வருதல், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சங்கரேஸ்வரர் சங்கரநாராயணராக கோமதி அம்மாளுக்கு காட்சி கொடுத்தல், இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி, நள்ளிரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் பொன் சப்பரங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
    • மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் நாகலத்து தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத அழகிய நடராஜ பெருமான் ஆலயத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ தும்பவனம் மாரியம்மன் சித்திரை மற்றும் ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கங்கை அம்மன் நின்ற திருக்கோலத்தில் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு பம்பை மேள இசையுடன் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று இதில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். முன்னதாக மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தூபதீப ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகத்தா தெருவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்தார் . கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    • உற்சவ அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால் தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்டவைகளாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடந்தது.

    மேலும் ஒரு லட்சத்து ஒன்று வளையல்களாலும், உற்சவ அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும்
    • கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்பதால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.

    குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.

    தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

    தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

    கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    • மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    top

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

    மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்னர் தபசு மண்டகபடியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ×