search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா உணவகம்"

    • உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
    • மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

    குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

    இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசியாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • காலையில் இட்லியுடன் கூடுதலாக சட்னி, வடை தர வேண்டும் என்கின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன.

    அம்மா உணவகங்கள் தொடங்கியபோது இருந்த வரவேற்பு தற்போது குறைந்து வருகிறது. எனவே அம்மா உணவகத்தில் உணவில் மாற்றம் தேவையா என்ற வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களது கருத்தை தெரிவித்து உள்ளனர்.

    இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதற்கு ஏற்ப அம்மா உணவகங்களில் உணவில் மாற்றம் செய்யப்பட்ட புதிய வகை உணவுகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசியாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் இட்லியுடன் கூடுதலாக சட்னி, வடை தர வேண்டும் என்கின்றனர்.

    மதியம் வெள்ளை சாதம், ரசம், அப்பளம் அல்லது வடை, ஊறுகாய் வழங்க வேண்டும் என்கிறார்கள். இரவில் சப்பாத்தி மட்டுமின்றி இட்லி போன்றவற்றையும் வழங்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கலவை சாதத்துக்கு மாற்றாக தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம் என்றும் கூறினர்.

    பொதுமக்களின் கருத்தின் படியே இவற்றை வழங்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம். கலவை சாதம் இல்லாத ஒருவேளை உணவு வகைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை செலவிட பலர் தயாராக உள்ளனர். ஒரே விதமான உணவுக்கு பதிலாக சில மாற்றங்களை செய்து வழங்கும் நிலையில் பொதுமக்கள் ஓரிரு ரூபாய் கூடுதலாக கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

    இந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தமிழக அரசின் முடிவை பொறுத்து அம்மா உணவங்களின் உணவு வகைகளிலும், விலையிலும் மாற்றம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் தற்போது 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அம்மா உணவகங்களில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் கிடைக்கிறது. ரூ.140 கோடி செலவு ஏற்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.1200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

    இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:-

    ஒரு அம்மா உணவகத்தில் இதுவரை 10 முதல் 12 பேர் வரை பணியாற்றினோம். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மாத சம்பளம் ரூ.9000 வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.6000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

    தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். போதிய வருமானம் கிடைக்காத நேரத்தில் எங்களது சொந்த பணத்தை கொடுத்து இலக்கை அடைந்து வருகிறோம். இதனால் பலர் வேலையைவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது.
    • ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை.

    சென்னை:

    சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவில் அதிக மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. ஆனால் 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை நிறுத்தும் வகையில் கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 பட்ஜெட்டுகளில் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை. அம்மா உணவகத்தில் ஒரு கடையில் ரூ.4 ஆயிரம் வருமானம் வருகிறதென்றால், ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவேதான் சீர்செய்ய, பணியாளர்களை மாற்றி மாற்றி வேலை கொடுக்கிறோம். அனைத்து இடத்திலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தை மூட முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- பல்வேறு அம்மா உணவகத்தில் இருந்து எங்களுக்கு புகார் வந்து கொண்டிருக்கிறது. அங்கு தரமான உணவுப்பொருள் வழங்கப்படுவதில்லை. அதனால் ருசியான உணவு கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள். அங்கு அரசு தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எதிர்க்கட்சி தலைவர், ஆதாரத்தோடு சொன்னால் நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கேயாவது தவறு நடக்கலாம், நான் இல்லை என்று மறுக்கவில்லை. எந்த இடத்தில் குறைபாடு இருக்கிறது என்று சொன்னால் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும்.

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அம்மா உணவகத்தை சிறப்பாக செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியது. கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- மாநகராட்சி மூலம்தான் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்துக்கு சென்னை மாநகராட்சி மூலம் இந்த ஆண்டு ரூ.129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வருவாய் என்பது ரூ.15 கோடியாகத்தான் இருக்கிறது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    • அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
    • அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரத்தை சேகரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் நாளுக்கு நாள் விற்பனை சரிந்து வருகிறது. அதனை மேம்படுத்த தேவையான நிதி இல்லாததால் வியாபாரம் குறைகிறது.

    3 வேளையும் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுவதால் ஆண்டுக்கு ரூ.140 கோடி மாநகராட்சிக்கு செலவாகிறது.

    ஆனால் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.20 கோடி மட்டுமே வருமானம் வருகிறது. இதனால் பெரும்பாலான அம்மா உணவகங்களில் கோதுமை மாவு வழங்கப்படாததால் இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போதைய ஆய்வின் படி 50 அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான வருவாயை ஈட்டி வருகின்றன. அங்கு தினமும் ரூ.100, ரூ.150-க்கு மொத்தமே விற்பனை ஆகிறது. மிக குறைந்த அளவில் மக்கள் அங்கு வருவதால் விற்பனை சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

    இதையடுத்து அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரத்தை சேகரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், அம்மா உணவகங்களில் சாப்பிட வருவோரிடம் 21 கேள்விகள் கேட்டு அதனை பதிவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    கட்டுமான தொழிலாளர்களா? அரசு, தனியார் நிறுவன ஊழியர்களா?, 60 வயதுக்கு மேற்பட்டவரா, சொந்த வீட்டில் வசிப்பவரா, அல்லது வாடகை வீட்டில் வசிப்பவரா, எத்தனை வேளை சாப்பிடுகிறார், என்ன காரணத்திற்காக அங்கு சாப்பிடுகிறார் என்பது போன்ற விவரங்களை சேகரித்து அனுப்புகிறார்கள்.

    தமிழகத்தை சேர்ந்தவரா, பிற மாநிலத்தவரா, என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் பெறப்படுகிறது. அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கட்டுமான தொழிலாளர்கள் சாப்பிட்டால் அதற்கான தொகையை கட்டுமான வாரியத்திடம் வசூலிக்கலாம் என அரசு பரிசீலிக்கிறது.

    • அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை.
    • சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலம் :

    சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சியில் குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தரப்படுகிறது. மக்காத குப்பைகள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் வகையில் மாற்றப்படும். சேலம் மாநகராட்சிக்கு தேவையான குப்பை எடுக்கும் வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தூர், சத்தீஸ்கார் ஆகிய இடங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர்களை அழைத்து சென்று அங்கு பின்பற்றப்படும் தூய்மை நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அடுத்த ஓராண்டில் சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலத்தில் அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு எதுவும் இல்லை. அங்கு கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தியதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை. இதனால் சுழற்சி முறையில் அம்மா உணவகங்களில் பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி உள்ளது. தேவையான நிதியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

    • முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 6 மகளிரை பணியில் இருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெறுவதாகவும், மாநகராட்சி சார்பில் எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாத நிலையில், அங்கு பணிபுரியும் மகளிர் தங்களுடைய பணத்தை போட்டு அம்மா உணவகத்தை நடத்தி வருவதாகவும், மாமன்ற உறுப்பினருக்கும், தனக்கும் மாதம் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சேலம் மாநகர தி.மு.க. மண்டலக் குழுத் தலைவர் கோருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

    இதுகுறித்து மாமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, அம்மா உணவகம் இயங்கும் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அதைப் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கட்டிட பணிகள் முடியும் வரை அவர்களை வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், மணியனூர் அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, தி.மு.கவினரின் வற்புறுத்தலின் பேரில், சேலத்தில் மேலும் சில அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மா உணவகத்தில் கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.
    • அம்மா உணவகத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ஏ.பி பத்ரா சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு 11 மணி அளவில் வழக்கம் போல பணி முடிந்து ஊழியர்கள் உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று காலை 5.30 மணி அளவில் உணவகத்தை திறக்க சூப்பர்வைசர் ரேகா வந்தார் அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. மேலும் அங்கிருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரேகா கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.
    • முன்னெச்சரிக்கையாக தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செஞ்சிரோட்டில் அம்மா உணவகம் உள்ளது. இந்த அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.

    அப்போது ஒருவர் சாப்பாடு தட்டில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அம்மா உணவகத்தில் இருந்த சாப்பாடுகளை எல்லாம் அப்புறப்படுத்தினர்.

    முன்னெச்சரிக்கையாக அந்த தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 400 அம்மா உணவகங்கள் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றவர்கள், ஏழை-எளியவர்கள், கூலி தொழிலாளர்கள் அம்மா உணவகத்தை நம்பி வாழ்வதால் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் 2 ஷிப்டு முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில அம்மா உணவகங்களில் உணவு இல்லை என்று ஊழியர்கள் சொல்வதால் தற்போது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் அங்கு வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவது தெரிய வந்தது. அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 60 வயதை கடந்தவர்கள் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தியதில் 131 பேர் என தெரியவந்தது.

    அவர்கள் அனைவரையும் கடந்த 1-ந்தேதி முதல் பணியில் இருந்து நீக்கவும் செய்துள்ளனர். இதனால் காலி இடங்கள் ஏற்படும்பட்சத்தில் அதனை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அரசின் உன்னத திட்டமான "அம்மா உணவகம்" சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 10 மகளிர் குழுவைச் சேர்ந்த ஊழியர்களிடம் தனித்தனியே விசாரணை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கேயம் நகராட்சியில் தமிழக அரசின் உன்னத திட்டமான "அம்மா உணவகம்" சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் பணிகளை கடந்த 2 வாரங்களுக்கு முன் நகராட்சி அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

    அப்போது, அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மளிகை மற்றும் இதர உணவு பொருட்களில் இருப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் 10 மகளிர் குழுவைச் சேர்ந்த ஊழியர்களிடம் தனித்தனியே விசாரணை செய்யப்பட்டது.

    இதில் குழுவின் தலைவி பாப்பாத்தி என்பவர் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தல் மற்றும் சொந்த உபயோகத்திற்காக உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டு, அவர் மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட 5 ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இந்தக் குற்றச்செயலில் காங்கேயம் 2-வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வரும் சரவணன் இதற்கு மூளையாக இருந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.

    சரவணன் என்பவர் அம்மா உணவகத்தில் தலைவியாக பணியாற்றி வந்த பாப்பாத்தி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இது சம்பந்தமாக சரவணன் மீது காங்கயம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.2 -கும் வழங்கப்படுகிறது.
    • உணவு அருந்த வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணமே உள்ளது.குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்றனர்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் ஏழைகளின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஏழைகளின் பசியை போக்கவும், கூலி தொழிலாளர்களின் வசதிக்கேற்பவும் மலிவு விலையில் உணவு வழங்க மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2015-ம் ஆண்டு அம்மா உணவகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது ஏழை மக்களுக்காக காலையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.2 -கும் வழங்கப்படுகிறது.

    தருமபுரி அம்மா உணவகம் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள். பஸ் நிலையத்தில் சிறு சிறு பொருட்கள் விற்று பிழைப்பு நடத்துவோர் என்று பல தரப்பினருக்கும் அட்சய பாத்திரமாக திகழ்கிறது.

    தற்போது அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக வரும் தகவல்களை அடுத்து அவை மூடப்ப டுமா என்று அவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கின்றனர்.

    ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அம்மா உணவகங்களை தொடர்ந்து செயல்படுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நஷ்டம் ஏற்பட்டாலும் மக்களின் பசி போக்கும் அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, அம்மா உணவகங்களில் வாழை இலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதற்காகும் செலவு, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகமே ஏற்கிறது. இங்கு உணவு அருந்த வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணமே உள்ளது.குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்றனர்.

    ×