search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க அதிபர் தேர்தல்"

    • மத்திய அரசாங்கத்தின் 75 சதவீத ஊழியர்களை நீக்கி விடுவேன் என்றார் விவேக்
    • கடும் சட்டதிட்டங்களை பணியாளர்களுக்கு வகுப்பவர் என்கின்றனர் முன்னாள் ஊழியர்கள்

    2024 தேர்தலுக்காக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவியில் அமர்வது சிக்கலாக இருக்கும் என தெரிகிறது. அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 38-வயதான விவேக் ராமசாமி எனும் இளம் தொழிலதிபர் முன்னிலை வகிக்கிறார். தனது அதிரடி கருத்துக்களுக்காகவும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த போவதாக கூறும் சில துணிச்சலான திட்டங்களுக்காகவும் அவர் மிகவும் பாராட்டப்படுகிறார்.

    தான் அதிபரானால் மத்திய அரசாங்கத்தின் பணியாளர்களை 75 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க போவதாகவும் தற்போது முக்கிய துறைகளாக கருதப்படும் பல துறைகளை கலைத்து விட போவதாகவும் விவேக் தெரிவித்தார். பல துறைகளிலும் சுமார் 21 லட்சம் (2.25 மில்லியன்) பணியாளர்கள் உள்ள அமெரிக்க மத்திய அரசாங்கத்தில், விவேக் ராமசாமி 16 லட்சம் பேர்களை (1.6 மில்லியன்) நீக்கி விட்டு அதன் மூலம் மிக பெரும் தொகை செலவாவதை தவிர்க்க போவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், விவேக் நடத்தி வரும் ரொய்வன்ட் சயின்ஸ் மற்றும் ஸ்ட்ரைவ் அசட் மேனெஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களில் பணி புரிந்த சில முன்னாள் ஊழியர்களில் 7 பேர் அவரது மனநிலை குறித்து கருத்து தெரிவித்தனர். அவர்கள் அனைவரும், விவேக் "ஆதிக்க மனோபாவம்" உடையவர் என குறிப்பிட்டுள்ளனர்.

    தனக்கு பணி செய்வதற்காகவே ஊழியர்கள் உள்ளதாக அவர் நினைப்பவர் என்றும், கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பவர் என்றும், அறையின் வெப்பத்தை மிகவும் குளிரான நிலையிலேயே வைப்பவர் என்றும், பயணத்தின் போது ஒரு விமானம் ரத்தானால் மற்றொன்றில் உடனடியாக பயணிக்கும் வகையில் இன்னொரு விமானத்திற்கான ஏற்பாட்டை முன்னரே செய்து கொள்பவரகவும், முன்னாள் ராணுவ ரேஞ்சர் ஒருவரை தன்னுடனேயே மெய்காப்பாளராக வைத்து கொண்டவராகவும் விமர்சிக்கின்றனர்.

    மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டவராக சித்தரிக்கபட்டாலும், விவேக் தற்போது தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

    • டிரம்ப் சிறப்பான தோற்றமுடையவர் என பைடன் தெரிவித்தார்
    • திறமையற்றவர் ஜோ பைடன் என டிரம்ப் தாக்கினார்

    அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77).

    அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார் டொனால்ட் டிரம்ப். அப்போது சிறைச்சாலை விதிமுறைகளின்படி "மக் ஷாட்" எனப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டார்.

    அந்த புகைப்படங்களை டிரம்ப் தனது சொந்த வலைதளத்தில் அனைவரின் பார்வைக்கும் வெளியிட்டிருந்தார்.

    இந்த புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது, "நான் அதனை தொலைக்காட்சியில் பார்த்தேன். டிரம்ப் சிறப்பான தோற்றமுடையவர்" என டிரம்பை கேலி செய்யும் விதமாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப், பைடனை விமர்சித்து பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

    அதில், "கெட்ட எண்ணம் படைத்தவர் ஜோ பைடன். அவர் திறமையற்றவர் மட்டுமல்ல, சீரான மனநிலையை இழந்தவர் என நான் நம்புகிறேன். நாட்டு மக்களை அச்சுறுத்தும் விதமாக நாட்டின் எல்லைகளை அனைவருக்கும் திறந்து வைத்திருக்கிறார். நீதித்துறையையும், மத்திய புலனாய்வு துறையையும் அவர் சரியாக கையாளவில்லை. மனநிலையை இழந்தவராக நாட்டை நரகத்தை நோக்கி நகர்த்தி, ஒரு காரணமும் இல்லாமல் அமெரிக்க மக்கள் மீது 3-வது உலகப்போரை திணித்து விடுவார்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    பல்வேறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வரும் டிரம்பிற்கும், பைடனுக்குமான கருத்து மோதல்கள், தேர்தல் நெருங்க நெருங்க எந்த நிலையை எட்டும் என அரசியல் வல்லுனர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    • எலான் மஸ்க், விவேக் ராமசாமியை நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என தெரிவித்திருந்தார்
    • எங்கள் இருவருக்கும் பொதுவான சிந்தனை இருக்கிறது என்றார் விவேக்

    அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

    ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கட்சி வேட்பாளராக முன்னணியில் உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும், அவர் பல கிரிமினல் வழக்குகளில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர் அதிபர் போட்டியில் தொடர முடியுமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

    இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

    இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய பெற்றொர்களுக்கு பிறந்தவர் விவேக் ராமசாமி (37). அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவரான இவர், போட்டியிடும் வேட்பாளர்களிலேயே வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்களுக்கு விடை காணும் வகையில் பல இடங்களில் விவேக் கூறும் கருத்துக்களுக்கு பொது மக்கள் மட்டுமின்றி, பல தொழிலதிபர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

    உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, மற்றும் சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் டுவிட்டர்) ஆகியவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க், களத்தில் உள்ள வேட்பாளர்களிலேயே நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என கூறி விவேக் ராமசாமியை குறித்து பாராட்டும் விதமாக சமீபத்தில் தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தனக்கு ஆதரவு கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விவேக் ராமசாமி, அமெரிக்காவின் மத்திய மேற்கில் உள்ள ஐயோவா மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    நான் வெறும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஒரு புதிய கலாச்சார அடையாளத்துடன் புதிய அமெரிக்க கனவினை உருவாக்க பாடுபடுகிறேன். அமெரிக்காவை முன்னணி நாடாக்க வேண்டுமானால் நாம் முதலில் அமெரிக்காவை மீண்டும் கண்டெடுக்க முயற்சிக்க வேண்டும். நான் வெற்றி பெற்று அதிபரானால், புதியதாகவும், புதுமையாகவும் சிந்திப்பவர்களை என் அரசாங்கத்தில் நிர்வாக ஆலோசனைகளுக்காக நியமித்து கொள்வேன்.

    இதில் எலான் மஸ்க்கையும் சேர்த்து கொள்ள விரும்புகிறேன். அவர் தனது எக்ஸ் நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறாரோ அதே போல், நான் அமெரிக்க நிர்வாகத்தை மறுசீரமைத்து அமெரிக்காவை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். எங்கள் இருவரின் சிந்தனையும் பல விஷயங்களில் ஒத்து போகிறது.

    இவ்வாறு விவேக் ராமசாமி தெரிவித்தார்.

    கடந்த வருடம் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அதிரடியாக குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்பிற்கு P01135809 எனும் அடையாள எண் கொடுக்கப்பட்டது
    • புகைப்படத்துடன் எந்த நிலையிலும் சரணடையாதே என செய்தி வெளியிட்டார்

    அமெரிக்காவின் அதிபராக 2017-லிருந்து 2021 வரை பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77), 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக அப்போது குற்றம்சாட்டி வந்தார். அந்த தேர்தல் நடந்து, முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போது இரு கட்சியை சேர்ந்த பலர் மோதிக்கொண்டதில் வன்முறை வெடித்தது.

    அப்போது உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர் (தற்போதைய எக்ஸ்), டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்களால் வன்முறை அதிகரிக்கலாம் என கூறி டிரம்பின் கணக்கை முடக்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.

    சிறிது நாட்களில் டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மாநில அமைச்சர் பிராட் ராஃபன்ஸ்பெர்கர் (Brad Raffensperger) ஆகிய இருவருக்குமிடையே ஜனவரி 2, 2021 அன்று ஒரு தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.

    அந்த ஆடியோவில் "பைடனை முந்துவதற்கு 11,780 வோட்டுகளை தேட முயலுங்கள்" என டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஜார்ஜியா வழக்கு என பெயரிடப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் பெரும் குற்றச்சாட்டு உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, நீண்ட விசாரணைக்கு பிறகு டிரம்ப் குற்றவாளி என ஃபல்டன் கவுன்டி ஜூரியால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து அதிகாரிகளிடம் டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்.

    அவர் அட்லாண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு வரும் கைதிகளுக்கு கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் அவருக்கும் கடைபிடிக்கப்பட்டது.

    அதன்படி, அவரை காவல்துறையினர் மக் ஷாட் (mug shot) எனப்படும் புகைப்படத்தை எடுத்தனர். அவருக்கு P01135809 எனும் அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டது.

    அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்து பிறகு ஜாமீனில் வெளி வந்தார் டிரம்ப்.

    சென்ற வருடம் டுவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் 1 கோடீசுவரர் எலான் மஸ்க், டிரம்பின் கணக்கை மீண்டும் அக்டிவ் செய்துள்ளார். ஆனாலும் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

    சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சொந்த வலைதளமான "ட்ரூத்" தளத்தில் "தேர்தல் இடைமறிப்பு; எப்போதும் சரண்டைய கூடாது" என குறுஞ்செய்தியுடன் டிரம்ப் வெளியிட்டார்.

    உலகின் முன்னணி நாடான அமெரிக்காவின் அதிபராக பதவியிலிருந்த டிரம்ப், பொதுவாக நற்பெயருக்கு இழுக்காக கருதப்படும் சிறையில் எடுக்கப்படும் மக் ஷாட்களை, தானே வலைதளத்தில் வெளியிட்டுள்ள மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இதனை ரசித்த எலான் மஸ்க், அதை மீண்டும் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டு "அடுத்த லெவல்" என இரண்டே வார்த்தைகளில் கருத்து கூறியிருக்கிறார்.

    • குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தியது
    • விவாதத்திற்கு பிறகு கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராக விவேக் ராமசாமி இருந்தார்

    2024-ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.

    டிரம்ப் ஆதரவாளர்களான புளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோருடன் டிரம்பை எதிர்க்கும் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் உட்பட பல வேட்பாளர்கள் குடியரசு கட்சியிலேயே களத்தில் உள்ளனர்.

    குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.

    இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.

    இதனை ஒரு பிரசார மேடையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை குறித்த கருத்து தெரிவித்தவர்களில் விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பேசுபொருளானது.

    இந்த விவாத நிகழ்ச்சிக்கு பின்னர் அங்குள்ள பல ஊடகங்கள் அவரை பாராட்டி வரும் நிலையில், கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் விவேக் ராமசாமி இருந்தார்.

    விவேக்கிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை குறிக்கும் விதமாக கட்சிக்கான நிதியளிப்பில் ஏராளமானோர் முன்வந்து நன்கொடையளித்து வருகின்றனர்.

    நிகழ்ச்சி முடிந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே விவேக் ராமசாமியின் பிரசாரத்திற்கு ஆதரவாக சுமார் ரூ.4 கோடி ரூபாய் ($450000) இதுவரை நன்கொடை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானது போல, அமெரிக்காவிலும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபர் ஆனால், வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள் வெள்ளையர்களின் நாட்டை ஆள்கிறார்கள் எனும் சிறப்பு இந்தியாவிற்கு கிடைக்கும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

    • டொனால்ட் டிரம்ப் சிறை செல்வார் என பலர் நம்புகின்றனர்
    • குற்றவாளி என உறுதியானாலும் அதிபர் வேட்பாளராக ஆதரவளிப்பீர்களா என கேட்கப்பட்டது

    அமெரிக்காவின் 45வது அதிபராக 2017லிருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் டொனால்ட் டிரம்ப்.

    அமெரிக்காவில் அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் சிறை தண்டனை பெறுவது உறுதி என நம்பப்படுகிறது.

    ஆனால் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்திருக்கிறார்.

    இந்நிலையில் 2024ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.

    குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.

    இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.

    8 பேரில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை பிறர் ஆதரிக்க முழு சம்மதம் தெரிவித்து ஒரு ஒப்புதலை அவர்கள் கையெழுத்திட்டனர்.

    அந்நிகழ்ச்சியில் 8 வேட்பாளர்களிடமும் அமெரிக்காவை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள், அவற்றை எதிர் கொள்ள அந்த வேட்பாளர்கள் வைத்திருக்கும் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    ஒரு முக்கிய கேள்வியாக அவர்களிடம், "டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என உறுதியானாலும் அவரை 2024 தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்பீர்களா?" என கேட்கப்பட்டது.

    8 பேரில் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் தவிர அனைத்து வேட்பாளர்களும் டிரம்பை ஆதரிக்க தயார் என கையை உயர்த்தினர்.

    ஃப்ளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலே, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோர் டிரம்பிற்கு ஆதரவாக தங்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

    கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரையோ, அரசியலமைப்பு சட்டத்தால் அனுமதிக்கப்படாத ஒருவரையோ வேட்பாளராக நிறுத்துவது குடியரசு கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என்பதை தனது எதிர்ப்புக்கு காரணமாக ஹட்சின்ஸன் தெரிவித்தார்.

    அமெரிக்க மக்களிடமும், தனது கட்சியினரிடமும் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் டொனால்ட் டிரம்ப் என இதன் மூலம் உறுதியாகிறது என வலைதளங்களில் இது குறித்து கருத்துக்கள் பதிவாகியுள்ளது.

    • பிரபல தொலைக்காட்சிக்கு விவேக் ராமஸ்வாமி பேட்டியளித்தார்
    • விவேக் ராமஸ்வாமி மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்

    உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில், 2024 நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தற்போது வரை களத்தில் இறங்க இருக்கின்றனர்.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட ஆர்வமாக உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். ஆனால் அவர் மீது உள்ள வழக்குகளின் தீர்ப்புகளை பொறுத்தே அவர் போட்டியில் இருப்பாரா இல்லையா என தெரிய வரும்.

    இந்நிலையில் குடியரசு கட்சி சார்பிலேயே 10-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பாளராக போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியிலேயே நிக்கி ஹேலி, ஹிர்ஷ் வர்தன் சிங், மற்றும் விவேக் ராமஸ்வாமி ஆகிய 3 இந்திய வம்சாவளியினரும் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர்.

    இவர்கள் அனைவரிலும் மிகவும் வயது குறைந்தவரும், ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவரான விவேக் ராமஸ்வாமி, கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய இந்திய பெற்றோர்களுக்கு பிறந்தவர்.

    பல அதிரடி திட்டங்களையும், கருத்துக்களையும் கூறி வரும் விவேக், அமெரிக்காவில் வாக்களிக்கும் வயதை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வாதாடுகிறார்.

    சில மாதங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், தனது சீன சுற்றுபயணத்தின் போது தெரிவித்ததாவது, "அமெரிக்காவும், சீனாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். சீனாவில் எனது வர்த்தகத்தை விரிவுபடுத்த போகிறேன். சீனாவின் சக்தியையும், நம்பிக்கையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இதை குறிப்பிட்டு மஸ்கை விமர்சித்திருந்தார் விவேக். அப்போது அவர், "டுவிட்டரை எக்ஸ் என மாற்றி மேம்படுத்தும் முயற்சியை ஆதரிக்கிறேன். அதே வேளையில், சீனா தனது மறைமுக நோக்கங்களுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களை பொம்மைகளை போல் இயக்குவதை எதிர்க்கிறேன். இதற்கு அமெரிக்கர்கள் கருவிகளாக போய் விட கூடாது. இதனை எதிர்க்கும் தலைமை வேண்டும்," என்று விமர்சித்து இருந்தார்.

    இந்நிலையில் டக்கர் கார்ல்ஸன் எனும் ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியாளருக்கு விவேக் ராமசாமி பேட்டியளித்தார். இப்பேட்டியின் வீடியோவை இணைத்து தனது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க். தன்னை விமர்சித்த விவேக் ராமசாமியை, ஆச்சரியப்படும் விதமாக மஸ்க், "ஒரு நம்பிக்கைக்குரிய வேட்பாளர்" என பாராட்டியுள்ளார்.

    இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனாக், பிரிட்டன் பிரதமராக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் அதே போல் ஒருவர் வரவேண்டும் என பல இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

    வைரலாகியிருக்கும் இந்த வீடியோவை கண்ட இந்தியர்கள், தன்னை விமர்சித்தவராக இருந்தாலும் விவேக் ராமசாமியின் தலைமை மற்றும் திறமை குறித்து எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    • டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் கலவரத்தில் ஈடுபட்டதில் 7 பேர் பலியாகினர்.
    • கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் முன்னோடி வேட்பாளராக உள்ளார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அதில் முக்கியமான வழக்கு, கேபிடால் கலவர வழக்கு. அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் டிரம்ப் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டினார். இந்த சூழ்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக 2021ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் (கேபிடால் கட்டிடம்) புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் பலியாகினர்.

    டிரம்ப் ஆதரவாளர்களின் கிளர்ச்சியால் 7 பேர் இறந்ததாக செனட் அறிக்கை உறுதி செய்தது. கிளர்ச்சியைத் தூண்டியதற்காக டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் செனட் சபையால் விடுவிக்கப்பட்டார். எனினும், பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார்.

    இவ்வழக்கில் டிரம்ப், உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு செய்தது, அரசாங்கத்தை ஏமாற்ற சதி செய்தது மற்றும் கிளர்ச்சியைத் தூண்டுயது ஆகிய 3 முக்கிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில் டிரூத் சோஷியல் (Truth Social) எனப்படும் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் "ஜோ பைடனின் நீதித்துறையின் வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், ஜனவரி 6 ஆம் தேதி வழக்கின் விசாரணைக்கு நான் ஒரு "இலக்கு" என்பதால் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அனேகமாக இது என் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கலையும், என்னை கைது செய்யும் நடவடிக்கையையும் குறிக்கலாம்" என டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    மேலும் இது குறித்து ஒரு பேட்டியில் "என்னை இந்த நடவடிக்கை தொந்தரவு செய்கிறது. ஆனால் நான் பயப்படவில்லை. அவர்கள் மக்களை இழிவுபடுத்தவும், பயமுறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் பெரிதாக மாற்றப் போகிறோம். சொல்வதற்கு அவ்வளவுதான் உள்ளது." என்று தெரிவித்தார்.

    வரும் நாட்களில அவரின் அரசியல் எதிர்காலம் எந்த திசையில் செல்லும் என்பதை இந்த வழக்கின் போக்கு முடிவு செய்யும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.
    • கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார்.

    இந்நிலையில், டிரம்பை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிரம்ப் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தார்.

    கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார்.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார்.
    • குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட திட்டம்.

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

    குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிட கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப்பை எதிர்த்து மற்றொரு வரும் அதிபர் தேர்தலில் களம் இறங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

    தொழில் அதிபரும் மிகப் பெரிய கோடீஸ்வரருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். அவரது தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோர் மனநல மருத்துவராகவும் பணிபுரிந்தனர்.

    அமெரிக்காவின் சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி புகழ் பெற்ற ஹார்வர்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். ஒரு டி.வி. சேனலில் நேரடி நிகழ்ச்சியில் பேசிய விவேக் ராமசாமி, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

    37 வயதான விவேக் ராமசாமி மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று கூறப்படுகிறது. அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதிபர் தேர்தலில் போட்டியிட கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த முறை ஜோ பைடனிடம் தோல்வியடைந்த டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்
    • நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக அறிவித்ததும், அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக முன்னாள் மாகாண கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியுமான நிக்கி ஹாலே (வயது 51) இன்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்க உள்ளதாக கூறி உள்ளார்.

    'குடியரசு கட்சியினர் கடந்த 8 அதிபர் தேர்தல்களில் 7-ல் மக்கள் வாக்குகளை இழந்துள்ளனர். இது மாற்றப்பட வேண்டும். ஜோ பைடனின் சாதனை படுமோசமானது. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எனவே வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டை, வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமையேற்கும் நேரம் இது' என்றும் நிக்கி ஹாலே கூறி உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 76) ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் கடந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆதரவு திரட்டி வருகிறார். தற்போது நிக்கி ஹாலேவும் அறிவித்துள்ளதால், குடியரசு கட்சியின் வேட்பாளர் யார்? என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உள்ளது.

    குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதிபர் தேர்தலில் நுழைவதற்கு முன், அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் நிக்கி ஹாலே வெற்றி பெற வேண்டும். அதன்பிறகே அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.

    • டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார்.
    • கடந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜோ பைடன் அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதற்கிடையே 2024-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே நவம்பர் 15-ந்தேதி (நேற்று) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளார்.

    டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது என்றார்.

    டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×