search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water shortage"

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.

    நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).

    எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.

    தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
    வடகிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்து இருக்கிறது. இதனால் வரக்கூடிய நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. #Rain #Watershortage
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை ஆகும். ஓராண்டு மழைப்பொழிவில் 48 சதவீதத்தை இந்த பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் தமிழகத்தை ஏமாற்றியது. இயல்பான அளவை விட 61 சதவீதம் குறைவாக மழை பெய்தது. கடந்த ஆண்டை (2017) பொறுத்தவரையில், 9 சதவீதம் தான் குறைவாக மழை பெய்து இருந்தது.

    இந்த ஆண்டை பொறுத்தவரையில், வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய மழை நவம்பர் 1-ந் தேதி தான் தொடங்கியது. இன்னும் 10 நாட்களில் வடகிழக்கு பருவமழை முடிந்து விடும்.

    இதுவரை சராசரி மழைப்பொழிவில் இருந்து 21 சதவீதம் குறைவாக மழை பெய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்னும் பெரிய அளவில் மழையை பெறவில்லை என்பதை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் (நேற்றைய நிலவரப்படி) சுட்டிக்காட்டுகின்றன.

    குறிப்பாக சென்னை, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்து இருக்கிறது. சென்னையை எடுத்துக்கொண்டால், வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 74 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 34 செ.மீ. மழை தான் பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 54 சதவீதம் குறைவு.

    இதேபோல், வேலூர், திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதம் மழை பெய்துள்ளது.

    சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் வெறும் 1.5 டி.எம்.சி. நீர் மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே நேரத்தில் 5 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அப்படி இருந்துமே கடந்த ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தற்போது இருக்கும் நீர் இருப்பை பார்க்கும்போது, வரக்கூடிய நாட்களில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. #Rain #Watershortage
    திண்டுக்கல் நகரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் இன்றும் காலி குடங்களுடன் மறியல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்களிலும் தண்ணீர் இல்லாததால் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    கோடை காலத்தில் நிலவும் வறட்சியை போன்று தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தினசரி காலிகுடங்களுடன் மறியல், மாநகராட்சி முற்றுகை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இன்று 13, 14-வது வார்டுகளுக்குட்பட்ட ஒய்.எம்.ஆர். பட்டி, ஜோசப்காலனி பொதுமக்கள் காலி குடங்களுடன் கல்லறை தோட்டம் பகுதியில் அமர்ந்து மறியல் செய்தனர். 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரோட்டை மறித்து போராட்டம் செய்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த நகர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் மாநகராட்சி புதியதாக பதித்து உள்ள ஜிக்கா பைப்புகளில் தண்ணீர் வரவில்லை. சோதனை ஓட்டம் என்று கூறி 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் வருகிறது. எனவே எங்களுக்கு பழைய பைப்புகளிலேயே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதன்பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து மறியல் செய்தவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களின் குறைகளை கேட்ட கலெக்டர் அதிகாரிகளை அழைத்து மனுவில் குறிப்பிட்ட தேதிக்குள் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 267 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.51 ஆயிரத்துக்கான காசோலைகளையும், சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகையாக 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,85,157-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    ராமேசுவரம் வட்டம், தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியா என்பவரின் மகன் பூண்டிராஜ் என்ற மீனவர் படகு மோதிய விபத்தில் தனது இடது கை இழந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினையும், வருவாய்த்துறையின் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக 9 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1,08,000க்கான காசோலைகள் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.3,94,157 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று திருப்பாலைக்குடிக்கு சென்ற கலெக்டரிடம் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை பரிசீலித்த கலெக்டர் திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை வழங்கினார். இந்த பணிக்கு கிராம பொது மக்களும் தாமாகவே முன் வந்து ரூ.7 லட்சத்தினை மக்கள் பங்களிப்பாக செலுத்தினர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமாஅமாலினி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ஈரோடு வீரப்பம்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டல்:

    ஈரோடு மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    வீரப்பம்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஆற்றுநீர், ஆழ் குழாய் நீர் மேல்நிலை தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர்.

    இது குறித்து வீரப்பம் பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது.-

    எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆற்று நீர் நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் இப்பகுதிக்கு முறையாக ஆற்று நீர் கிடைக்கவில்லை.

    அதே போல் ஆழ்நிலை குழாய்கள் வறண்டு விட்டதால் முறையாக தண்ணீர் வருவதில்லை. ஒரே ஒரு ஆழ்குழாய் மூலம் தற்போது தண்ணீர் பிடித்து வருகிறோம். அதுவும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பிடிக்க வேண்டி உள்ளது.

    மேலும் எங்கள் பகுதிக்கு வரும் கீழ்பவானி வாய்க்காலில் வரும் தண்ணீரும் முறையாக பராமரிப்பு இன்றியும், தூர்வார படாததாலும் குறைந்த அளவே வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சீராக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரைக்கும் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    இந்தியாவில் நிலவும் கடும் வறட்சியால் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டிற்கு 2 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வில் கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #NitiAayog
    புதுடெல்லி:

    இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து மத்திய அரசின் நிதி ஆயக் குழு ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    இந்தியாவில் ஆண்டுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அறிக்கையின் படி பல முக்கிய நகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த 10 ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்ப்பாடு இரண்டு மடங்காகும்.

    தற்சமயம் 600 மில்லியன் இந்தியர்கள் கடுமையான நீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டிற்கு 2 லட்சம் பேர் பலியாகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது. அம்மாநிலத்தின் நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் சேமிப்பு, பாசனமுறை மற்றும் குடிநீர் மேலாண்மை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்படுகிறது.


    நீர் தட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் ஏற்பட வில்லை. உலகின் பல நாடுகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எதிர்காலத்தில் கடும் வறட்சி ஏற்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறினால் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். #NitiAayog


    போதிய அளவில் பருவ மழை பெய்யாததாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் பூண்டி ஏரி தண்ணீர் மட்டம் வேகமாக வறண்டு வருகிறது.
    ஊத்துக்கோட்டை:

    பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் வீராணம் ஏரி, போரூர் ஏரிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீர் குடிநீராக்கும் மையத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

    இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    போதிய அளவில் பருவ மழை பெய்யாததாலும், கோடை வெயில் காரணமாகவும் பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

    கோடை வெயிலின் தாக்கத்தால் பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணியளவில் ஏரியில் வெறும் 175 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

    இந்த ஏரியின் பரப்பளவு 70 சதுர கிலோ மீட்டர். ஏரியை சுற்றி அம்பேத்கார் நகர், புல்லரம்பாக்கம், சதுரங்க பேட்டை, நெய்வேலி, அரியத்தூர், நம்பாக்கம், வெள்ளாத்துகோட்டை, சென்றாம்பாளையம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர் உள்பட 45 கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகள் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளாகும். பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் மேற்கூறப்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன் இந்த கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இக்கிணறுகளில் உள்ள மின் மோட்டார்கள், இரும்பு பைப்புகள் சேதமடைந்து ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.

    இதனால் நீர் இறைக்கும் போது கசிவதால் ஆழ்துளை கிணறுகளிலிருந்து மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் சரிவர வினியோகம் ஆவதில்லை என்று கிராம பொது மக்கள் தெரிவித்தனர்.

    பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீர் செய்ய நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னைக்கு டிசம்பர் வரையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ‘தொலைநோக்கு திட்டம் 2023’ கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

    கூட்டத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக 5 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரத்து 988 கோடி 21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகருக்கு மட்டும் 3 ஆயிரத்து 256 கோடி 56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்துக்கு தினந்தோறும் 7 ஆயிரத்து 381 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகரில் 650 மில்லியன் லிட்டர் வழங்கப்படுகிறது. சென்னை மாநகருக்கு டிசம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    சென்னை மாநகராட்சியில் 206 குளங்கள் மற்றும் ஏரிகள் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக வில்லிவாக்கம்-சிட்கோ நகர் பகுதியில் உள்ள 33 குளங்கள், ஏரிகள் ரூ.21.85 கோடியில் சீரமைக்கப்படுகிறது.

    மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.7 ஆயிரத்து 450 கோடியில் 18 பெரிய குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 11 திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.,

    தமிழகத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் வகையில் 14 மிகப்பெரிய குடிநீர் திட்டங்களுக்கு ரூ.21 ஆயிரத்து 50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொன்றாக செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    நெம்மேலியில் 150 மில்லியன் கன லிட்டரும், போரூரில் 400 மில்லியன் கன லிட்டரும் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குடிநீர் திட்டப்பணிகளை திறம்பட கையாள்வதற்கு தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் உள்நாட்டு பயிற்சி மற்றும் வெளிநாட்டு பயிற்சி என குடிநீர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சர்வதேச குடிநீர் அமைப்பின் செயல்தலைவர் கலாநிதி வைரவமூர்த்தி, உலக வங்கி ஆலோசகர் சஞ்சய் தகாசாஸ்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர். #tamilnews
    ×