search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டது - சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டது - சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.

    நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).

    எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.

    தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
    Next Story
    ×