search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Statue"

    • நெல்லை மேலப்பாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது.

    இன்று காலை அங்கு வழிபட சென்றவர்கள் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நிர்வாகி தங்கவேல் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தினமும் பூஜை நடைபெறும் நிலையில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் நள்ளிரவு அங்கு யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து அறிந்த இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் அங்கு கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் .சிலையை சேதப்படுத்தி யவர்களை கைது செய்ய வேண்டும், புதிய விநாயகர் சிலை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    மேலும் பாளையங்கோட்டை தாசில்தார் அவுடையப்பன் புதிய விநாயகர் சிலை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்தார். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னையில் இன்று 2000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. #VinayagarChathurthi
    சென்னை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 13-ந்தேதி விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 2500 சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க 3 நாட்கள் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஊர்வலம் நடத்த விநாயகர் சிலை வழிபாட்டு குழுவினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதன்படி, நேற்று 135 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. மணலி, வில்லிவாக்கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், வியாசர்பாடி, திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, ஆர்.கே.நகர், கே.கே.நகர், மேடவாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் பலத்த பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் பெரும்பாலான சிலைகள் கரைக்கப்பட்டது. இன்று மட்டும், சுமார் 2300 சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி, அங்கு ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு சிலைகள் கரைப்பது கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னை மாநகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வாகன கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    பெரும்பாலான விநாயகர் சிலைகள் இன்று நகரின் பல பகுதிகளில் இருந்து பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டதால் ஈ.வே.ரா. சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கத்திட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜ் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ். தினகரன் சாலை, ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

    வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக சென்ற வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்றன.

    அடையாரிலிருந்து பாரிமுனை சென்ற வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட்ரோடு வழியாக மந்தைவெளி, லஸ்கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு அண்ணாசாலை வழியாக பாரிமுனை சென்றடைந்தன.
    பேரணாம்பட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 4 விநாயகர் சிலைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என பல்வேறு அமைப்பினர் மற்றும் பொது மக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர்.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் ‘விசர்ஜன நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் திருடுபோயுள்ளது.

    பேரணாம்பட்டு டவுன் பாண்டியன் வீதியில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகில் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் சுமார் 3 அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து மேள தாளம், தப்பாட்டம் அடித்து கொண்டாடினர்.

    இன்று சிலை ஊர்வலம் நடத்த கோலாகலமாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் விநாயகர் சிலையை லாரியில் ஏற்றிக் கொண்டு தப்பிச்சென்றனர். இதேபோல், பேரணாம்பட்டு பக்காலப்பல்லி மற்றும் சாலப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலும், வீ.கோட்டா ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

    விடிந்து பார்த்தபோது, சிலைகள் மாயமானதை கண்டு விழாக்குழுவினரும், பொதுமக்கள் அதிர்ச்சியில் திடுக்கிட்டனர். சாமி சிலை திருடப்பட்டுள்ளதால் தங்கள் பகுதிக்கு கெடுதல் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

    இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை திருடி கொண்டு வந்து தங்கள் பகுதியில் வைத்தால் நன்மை நடக்கும் என்று கூறப்படுவதால், விநாயகர் சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என சிலர் தெரிவித்தனர்.

    விநாயகர் சிலைகள் திருடு போனதால், இன்று நடக்க இருந்த விசர்ஜன ஊர்வலம் தடைபட்டுள்ளது. இதனால், சிலைகள் திருடு போன பகுதிகளில் பதட்டமான சூழல் காணப்படுகிறது.

    பேரணாம்பட்டு போலீசில் விழாக்குழுவினர் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    விநாயகர் சிலை முன் கல்லூரி மாணவிக்கு காதலன் தாலி கட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று கல்லூரி மாணவி ஒருவரும், வாலிபரும் அங்கு வந்தனர். அவர்கள் விநாயகரை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் கொண்டு வந்த தாலி கயிற்றை மாணவி கழுத்தில் கட்டினார்.

    இதனால் பரபரப்பு உருவானது. பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் கல்லூரி மாணவி மற்றும் வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பெற்றோரும் அழைத்து வரப்பட்டனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் ராஜூ (24) மாணவி பெயர் ஜோதி (18) என்பதும் தெரிவந்தது. ஜோதி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர் ஏற்காததால் விநாயகர் சிலை முன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். #tamilnews
    திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் வீதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். விநாயகர் சிலைகள் வைப்பதற்கு 20 நிபந்தனைகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை சார்பில் சிலைகள் வைப்பதற்கு நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் கழகம், பாரத் சேனா, விஷ்வ இந்து பரி‌ஷத், பொதுமக்கள் தரப்பில் விண்ணப்பித்தனர்.

    திருப்பூர் வடக்கு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 513 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க விண்ணப்பித்தார்கள். இதில் வேலம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 5 இடங்கள், வடக்கு போலீஸ் நிலையம், அனுப்பர்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 504 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதுபோல் தெற்கு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க விண்ணப்பிக்கப்பட்டது. இதில் 337 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெற்கு போலீஸ் நிலையம், வீரபாண்டி பகுதியில் தலா 6 இடங்கள், மத்திய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 1 இடம் என 13 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகரில் மொத்தம் 841 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதித்துள்ளனர்.

    அனுமதி கடிதங்கள் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அனுமதி கடிதத்தை பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் இந்து முன்னணி அமைப்பினர் அனுமதிக்கான கடிதத்தை பெறாமல் உள்ளனர். கட்டுப்பாடுகள் இல்லாமல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 1,189 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகர் பகுதியில் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணைகமி‌ஷனர் உமா நேரடி மேற்பார்வையில் 3 உதவிகமி‌ஷனர் 7 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நேரடிமேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலை வைக்க அரசின் சான்று பெறுவதற்கு வசதியாக ஒரே இடத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்ற சிறப்பு முகாம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
    பொள்ளாச்சி:

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விண்ணப்பிப்பவர்கள் அரசின் பல்வேறு துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். அதற்கு அரசின் 8 விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க பல்வேறு துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் பங்கேற்ற சிறப்பு முகாம் பொள்ளாச்சி காவலர் குடியிருப்பு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, வால்பாறை டிஎஸ்பி சுப்பிரமணியம், வட்டாட்சியர் செல்வபாண்டி, நகரமைப்பு அலுவலர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், தீயணைப்பு அலுவலர், மாசு கட்டுபாட்டு துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது,

    பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கிய வீதிகளில் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட முறைப்படி பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கும் இடம் பொது இடமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளிடமும், நெடுஞ்சாலைத்துறையிடமும், தனிநபர் இடமாக இருந்தால் அதன் உரிமையாளர்களிடமும் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

    மேலும் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, சிலைகள் வைக்கும்போது ஊர்வலத்தின்போது பட்டாசு மற்றும் வெடிபொருட்களை ஒருபோதும் வெடிக்க மாட்டேன் என தீயணைப்பு துறையினரிடமும், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டது, மாசு ஏற்படுத்தும் ரசாயன வர்ணம் போன்றவற்றை பயன்படுத்தவில்லை என மாசு கட்டுப்பாட்டு துறையிடமும், பெட்டி வடிவ ஒலி பெருக்கியை குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும், விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கு சட்டத்துக்கு புறம்பாக மின்சாரம் எடுக்க மாட்டேன் என மின்வாரியத்திடமும், அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் சம்பந்தமான பதாகைகள் வைக்க மாட்டேன், ஊர்வலத்தை காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களில் எடுத்துச் சென்று, அனுமதிக்கப்பட்ட இடத்தில் கரைப்பேன் உள்ளிட்ட உத்திரவுகளை கடைபிடிப்பதாக உறுதி அளிக்கும் விண்ணப்பத்தில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றுக்கான கையொப்பம் பெற வேண்டும்.

    பொள்ளாச்சி காவல் உட்கோட்டத்தில் 282 சிலைகளும், வால்பாறை உட்கோட்டத்தில் 230 சிலைகளும், கிணத்துக்கடவு பகுதியில் 60 சிலைகளும் என மொத்தம் 572 சிலைகள் வைக்கப்பட உள்ளது. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சப்- கலெக்டரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். சப்-கலெக்டரின் அனுமதிக்கு பின்னர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்,
    ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்தல் தொடர்பாகவும், ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த வலியுறுத்தியும் அனைத்து கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. #VinayagarChaturthi
    ஈரோடு:

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.-

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 13- ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து இயக்கங்கள் சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் வைக்கப்படும் சிலைகள் அவர்கள் சார்பில் நடத்தப்படும் ஊர்வலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது.

    கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது. வன்முறையை தூண்டும் ஒலி முழக்கங்களை அனுமதிக்கக் கூடாது. பிறவழி பாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது.

    எளிதில் கரையும் களிமண் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகளை தவிர நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயனத்தால் ஆன சிலைகளை அனுமதிக்கக் கூடாது. சிலைகள் ஊர்வலத்தில் அரசியல் கட்சிக் கொடிகள் அமைப்பு கொடிகள் அனுமதிக்கக் கூடாது.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    திராவிடர் கழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தலித் விடுதலை கட்சி போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். #VinayagarChaturthi
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தாலுகாவில் 105 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
    ஆண்டிப்பட்டி:

    விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தாலுகாவில் 105 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக திருச்சியில் இருந்து முதற்கட்டமாக ஆண்டிப்பட்டி நகருக்கு 35 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் வந்த பின்னர் அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
    விநாயகர் சதுர்த்தியையொட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய தடையின்மை சான்று பெற்று விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று திருப்பூர் கலெக்டர் கூறியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, துணை கமி‌ஷனர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    வரும் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகள் நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி போலீஸ் கமி‌ஷனர்கள் ஆகியோரிடம் உரிய தடையின்மை சான்று பெற்று விநாயகர் சிலைகளை நிறுவ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடத்துடன் சேர்த்து அதிகபட்ச 10 அடிக்கும் மேலாக இருக்ககூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டோ அல்லது அவர்களது மனம் புண்படும்படியோ ஆங்காங்கு நிறுத்தி கோ‌ஷமிடல் கூடாது. ஊர்வலத்தில் எவ்வித ஆயுதங்களையும் எடுத்து வரக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்.
    தமிழக அரசு விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது தொடர்பாக உருவாக்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. #VinayagarChathurthi
    இந்துக்களின் பண்டிகைகளில் நாடு முழுவதும் மிக விமர்சையாக நடத்தப்படும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திருவிழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அவை வழிபாடு செய்யப்பட்டு பிறகு கடலில் கரைக்கப்படுகிறது.

    மராட்டிய மாநிலம் மும்பையில்தான் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக மிக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா தொடங்கி சுமார் 35 ஆண்டுகள்தான் இருக்கும்.

    தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வழிபாடு செய்யும் வழக்கத்தை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிமுகம் செய்தார். முதலில் சென்னை திருவல்லிக்கேணியில் இந்த விழா தொடங்கப்பட்டது. நாளடைவில் விநாயகர் சிலைகளை நிறுவும் வழக்கம் சென்னையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சிலைகள் நிறுவப்படுவது அதிகரித்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் இதர நகரங்களுக்கும் விநாயகர் சிலை வழிபாடு பரவியது. தற்போது கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் பழக்கம் உருவாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரம் சிலைகளை நிறுவி வழிபாடுகளை நடத்தினார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.

    இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. பொதுவாக கடந்த ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பே எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது முடிவாகி விடும்.

    அதற்கேற்ப விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர்கள் கொடுத்து அதற்கென அரங்கம் அமைக்கும் பணிகளை தொடங்கி விடுவார்கள். பூஜைக்கான ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த ஏற்பாடுகளில் திடீர் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் போக்கு தமிழக காவல் துறையில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடும் ஏற்பாட்டாளர்கள் அந்த சிலைகளை கடற்கரைக்கு எடுத்து சென்று கரைக்கும்போது நடத்தும் ஊர்வலம் போலீசாருக்கு பெரும் சவாலை கொடுக்கிறது.

    விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிக மிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 24 விதமான புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும் கடந்த ஆண்டே தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 9-ந்தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகள் தொடர்பாக இந்த புதிய விதிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    24 விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக 7 நிபந்தனைகளை ஏற்கவே இயலாது என்று விநாயகர் சிலைகள் வழிபாட்டு குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த நிபந்தனைகளை விலக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    புதிய விதிமுறைகளை தளர்த்தி ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைப்படி விநாயகர் சிலைகளை வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. இது தொடர்பாக இந்து அமைப்புகள் சில அதிருப்திகளை சுட்டிக்காட்டி உள்ளன.

    இந்து அமைப்புகளுக்கு அதிருப்தி அளித்துள்ள அந்த புதிய விதிமுறைகளில் சில வருமாறு:-

    * விநாயகர் சிலைகளை முழுக்க முழுக்க களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும். ரசாயன கலவைகளை ஒருபோதும் சேர்க்க கூடாது.

    * தண்ணீரில் கரையாத ரசாயன வண்ணங்களை விநாயகர் சிலைகள் மீது பூசக்கூடாது. அவை கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது.

    * விநாயகர் சிலைகள் மிக உயரமான அளவுக்கு இருக்கக்கூடாது. 10 அடிக்கு மேல் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    * விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் முறையான கூரைகள் அமைக்கப்பட வேண்டும். அந்த கூரைகள் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    * விநாயகர் சிலைகளை ஆன்மிக தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி கூடங்கள் அருகில் அமைக்கக்கூடாது.

    *விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவே அல்லது எந்த மத அமைப்புகளுக்கும் ஆதரவாகவோ போர்டுகள் வைக்கப்படக்கூடாது.

    * விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடுகள் செய்த பிறகு 5 நாட்களுக்குள் அவற்றை எடுத்துச் சென்று கடலில் கரைத்து விட வேண்டும்.

    இப்படி 24 புதிய விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இவை ஏற்புடையவதாக இல்லை என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கூறி வருகின்றன. குறிப்பாக விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதிமுறை மிகுந்த இடையூறு ஏற்படுத்துவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

    மிக குறுகிய காலத்திற்குள் உள்ளாட்சி அமைப்புகள், காவல் நிலையம், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து எப்படி தடையில்லா சான்றிதழ்களை பெற முடியும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் கேட்கிறார்கள். எனவே கடந்த ஆண்டு நடைமுறையை பின்பற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசின் புதிய விதிமுறைகளில் சில இந்துக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடத்துவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை இதற்காக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    விநாயகர் சிலைகளுக்கு எப்போது பூஜை நடத்த வேண்டும் என்பதை சிலைகளை நிறுவி உள்ளவர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு முடிவு செய்யக்கூடாது என்பது இந்து அமைப்புகளின் வேண்டுகோளாக உள்ளது. இந்த சிக்கல்களுக்கு உடனடி தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு விநாயகர் சிலைகளை ஆண்டுதோறும் நிறுவி வழிபட்டு வரும் பக்தர்களிடம் எழுந்துள்ளது. #VinayagarChathurthi



    புதிய நடைமுறைகளை வாபஸ் பெறாவிட்டால் விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி சென்னையில் 1600 சிலைகள் வைக்கப்படும் என்று இந்து சத்தியசேனா அறிவித்துள்ளது.
    அம்பத்தூர்:

    அகில இந்திய இந்து சத்திய சேனா தேசிய தலைவர் வசந்த குமார் ஜி கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்திக்கு ஆண்டுதோறும் சென்னையில் 1600 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு போலீசார் திடீரென புதிய நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    விநாயகர் சிலை வைக்க மின்சாரதுறையில் அனுமதி பெறவேண்டும். ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை டெபாசிட் செய்யவேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தின் வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெறவேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க கூடாது. புதிதாக சிலைவைக்க அனுமதி இல்லை என்பது போன்ற கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளனர்.

    இந்த புதிய நடைமுறைகள் சரியாக இருக்காது மாறாக சிலைகள் வைப்பதற்கு இது தடையாக அமையும். எனவே புதிய நடைமுறைகளை வாபஸ் பெறாவிட்டால் விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி சென்னையில் 1600 சிலைகள் வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் யோகேஷ்குமார், மாநில துணை பொது செயலாளர் மலைக்கோட்டை தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார்.

    மாநகர தலைவர் துரைப்பாண்டி, மாநகர இளைஞரணி தலைவர் பிரபு ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் மணிகண்டன், மாநகர மாணவரணி தலைவர் அஜய் சூர்யா மற்றும் பலர் பங்கேற்றனர். முடிவில் மாநகர பொது செயலாளர் குழந்தைராஜ் நன்றி கூறினார்.

    சுதந்திர தினத்தையொட்டி இந்திய அரசும், தமிழக அரசும் தேசிய கொடியை கச்சத்தீவில் ஏற்ற வேண்டும். சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×