search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
    X

    சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

    சென்னையில் இன்று 2000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. #VinayagarChathurthi
    சென்னை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 13-ந்தேதி விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 2500 சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க 3 நாட்கள் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஊர்வலம் நடத்த விநாயகர் சிலை வழிபாட்டு குழுவினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதன்படி, நேற்று 135 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. மணலி, வில்லிவாக்கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், வியாசர்பாடி, திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, ஆர்.கே.நகர், கே.கே.நகர், மேடவாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் பலத்த பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் பெரும்பாலான சிலைகள் கரைக்கப்பட்டது. இன்று மட்டும், சுமார் 2300 சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி, அங்கு ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு சிலைகள் கரைப்பது கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னை மாநகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வாகன கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    பெரும்பாலான விநாயகர் சிலைகள் இன்று நகரின் பல பகுதிகளில் இருந்து பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டதால் ஈ.வே.ரா. சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கத்திட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜ் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ். தினகரன் சாலை, ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

    வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக சென்ற வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்றன.

    அடையாரிலிருந்து பாரிமுனை சென்ற வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட்ரோடு வழியாக மந்தைவெளி, லஸ்கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு அண்ணாசாலை வழியாக பாரிமுனை சென்றடைந்தன.
    Next Story
    ×